Thursday, January 17, 2013

கும்பமேளா என்னும் குரூர விழா!


கும்பமேளா தொடங்கப்பட்டு விட்டது - 12 கோடி பக்தர்கள் நீராடப் போகிறார்களாம். இது 55 நாட்கள் நீடிக்குமாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் இந்த அழுக்கு விழா அரங்கேற்றம்.
இதற்கு என்ன பின்னணியாம்? பாற்கடலைக் கடைந்தபோது அமுத கலசம் ஒன்று வெளிப்பட்டதாம். இதனைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் சண்டை போட்டுக் கொண்டார்களாம். இந்தச் சண்டையின் காரணமாக அமுதக் கும்பத்தில் இருந்த தேவாமிர்தத் துளிகள் சிந்தி விட்டனவாம். இந்தத் துளிகள் அலகாபாத், நாசிக், உஜ்ஜய்னி, அரித்துவார் ஆகிய இடங்களில் சிந்தினவாம். இப்படி கதை எழுதும் ஏடுகள் சர்வ விழிப்பாக - என்பது அய்தீகம் என்று நழுவிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கே தெரிகிறது இவை எல்லாம் அறிவுக்குப் பொருந்தாதவை - ஆனாலும் பாமர மக்களின் நம்பிக்கையோடு நாமும் அந்தச் சங்கமத்தில் சங்கமித்து விடுவோம் - பத்திரிகை விற்பனையும் கன ஜோராக நடக்கும் என்பது அவர்களின் திட்டம்.
கலசத்தில் இருந்து சிந்திய நான்கு ஊர்களும் புண்ணியதலங்களாம். இந்த நான்கு ஊர்களிலும் தான் கும்பமேளா நடக்கும்.
அலகாபாத்தில் (பிரயாகை என்றும் சொல்லுவர்) திரிவேணி சங்கமம் உள்ளது. இதில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கின்றன. எல்லோரும் நேரில் பார்க்கலாம். இதில் சரஸ்வதி நதியும் கலக்கிறது என்று பொய்க் கதையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு நதியே கிடையாது என்பதுதான் புவியியல் உண்மையாகும். வரலாற்று ஆசிரியர்களும் சரஸ்வதி நதி என்றே கிடையாது என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்கள்.  அரியானா பகுதியில் சரஸ்வதி நதி ஓடியது என்றும், அது ஆரிய நாகரிகத்திற்கானது என்றும் இட்டுக் கட்டி நிலைக்க வைப்பதற்காக ஆரியர் கட்டி விட்ட கதையாகும்.
கும்பமேளா என்றாலே நிர்வாண சாமியார்கள் தான் நினைவிற்கு  வருவார்கள். ஆண்களும், பெண்களும் புண்ணிய நீராடுகிறார்களாம் - நிர்வாண சாமியார்கள் சகிதமாக.
பக்தி என்று வந்து விட்டால் பெண்கள்கூட வழக்கமாக அவர்கள் அனுசரிக்கும் சுபாவக் கூறுகளைப் புறந்தள்ளி விடுவார்கள். பக்தி என்னும் போதை மூளையில் ஏறி அவர்களை கிறுகிறுக்க வைக்கிறது.
இவ்வளவுக்கும் இவர்கள் குளிக்கும் நதிகள் இருக்கின்றனவே -  அவை புண்ணிய நதிகளா, மரணக் குழிக்கு இழுத்துச் செல்லும் நோய்க் கிருமிகளின் ஒட்டு மொத்தமான கூடாரமா என்பதுதான் முக்கியமாகும்.
இந்தப் புண்ணிய நதியில்தான் நகரப் புறங்களின் சாக்கடைகள்  கலக்கின்றன. கங்கை நதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு  தூக்கி எறியப்படுகின்றன. அப்படி செய்வது  அவர் களுக்குப் புண்ணியமாம். கிழட்டுப் பசுக்களும் உயிரோடு இந்த நதியில் தள்ளப்படுகின்றன (இது பசுவதை இல்லையா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை? ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ!)
1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி யிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் தொற்று நோய்ப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனார்கள்.
இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் ஆயிரத்துக்கு  94 குழந்தைகள்  மரணிக்கின்றன என்றால் காசி வட்டாரத்தில் மட்டும் 13,394 குழந்தைகள் மரணம் அடைகின்றன என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை!
மக்கள் நல அரசு என்றால் இந்தக் கொடுமை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே! மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே! மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  சொல்லுகிறதே - அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...