Tuesday, December 4, 2012

ஜாதியின் பெயரால் அரசியல்


திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் (1.12.2012) கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அறவேயில்லாதவர்கள் ஜாதியை முன்னெடுப்பதும், தலித், தலித் அல்லாதார் என்று உத்தி பிரித்துக் (ஞடிடயசளையவடி) கொச்சை அரசியல் நடத்தத் துடிப்பதும் அசல் வெட்கக் கேடாகும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூகநீதிப் போராளிகளின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு அறைகூவல் விடுவதாகும். தலித் - தலித் அல்லாதார் என்று பிரிப்போர் யாராக இருந்தாலும், அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு உரியதாகும்.
இதற்குள் தீண்டாமை அனுசரிப்பது என்கிற கொடிய நஞ்சு இருப்பதால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது போன்று மக்கள் மத்தியில் பிளவுகளை, கலவரங்களை தூண்டி விடுவோர் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் இப் பொதுக்குழு தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறது.
தருமபுரி மாவட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலும் அண்மையில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத் தப்பட்டதற்கு இப்பொதுக் குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது ஒரு ஜாதிக் கலவரத் தீயாகப் பரவாமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், ஒத்த கருத்துள் ளோர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுச் செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புது வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும் என்றும், இழப்பீடுகளைக் கணக்கெடுத்து அதற்கேற்றாற் போல இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
வரும் டிசம்பர் 9 ஆம் தேதியன்று தருமபுரியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசுவோர், எழுதுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
கோவில் கருவறைக்குள் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்ற நிலை இன்றுவரை இருந்து வருகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் உச்சநீதிமன்றத்தில் முடக்கப் பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்திட திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதை (1996) இப்பொதுக்குழு நினைவு படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி செயல்படுத்தினால், இப்பொழுது ஏற்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் மனோ நிலை ஏற்படும் என்றும் இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது!
இந்தத் தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்டது. ஜாதி ஒழிந்த சமத்துவச் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிற அனைத்துத் தரப்பினரின் உணர்வை வெளிப்படுத்தக் கூடியது.  திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம் மட்டுமல்ல; இன்று காலை திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு ஒத்தக் கருத்துள்ள பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் ஓர் இந்தத் இத்தீர்மானத்தில் பிரதிபலிப்புள்ளது.
தருமபுரியில் ஜாதிய வன்முறை ஏவி விடப்பட்ட குறுகிய காலத்தில் அதே பாணியில் கடலூரிலும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட வேண்டுமானால், அரசு ரீதியாக மேற் கொள்ளப்படும் நிவாரண திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அந்தப் பணியைத் தான் முன்னிலும் வேகமாக எடுத்துக் கொள்ள திராவிடர் கழகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய தலைவர்கள் எல்லாம் இந்தத் திசையில்தான் சங்கநாதம் செய்தனர்.
இந்தக் கருத்துக்களை எடுத்துச் சொன்ன பொழு தெல்லாம் பலத்த கைதட்டலும், ஆரவாரமும் மக்கள் கடலில் எழுந்தன என்றால், தந்தை பெரியார் ஊட்டிய உணர்வு இன்னும் குத்திட்டுத்தான் நிற்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
விழாவில் பங்கேற்ற கலைஞர் அவர்கள் சொன்னதுபோல திராவிடர் இயக்க இளைஞர்களிடத்தில் வளர்ந்துவரும் உணர்வுகளைப் பார்க்கும் போது இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஒரு புதிய நிலை மலரும்; ஜாதியை முன் வைத்து அரசியல் நடத்த முடியாது எனும் நிலை பிறக்கும் என்று மானமிகு கலைஞர் அவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
திராவிடர் கழகத்தை பொறுத்தவரை அதன் பயிற்சிப் பட்டறையை ஒரு முறையான திட்டமாக நடத்திக் கொண்டுதான் வருகிறது. தி.மு.க.வும் அந்தத் திட்டத்தை வேகமாக முன்னெடுத்துக் கொண்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் மட்டும் ஜாதி ஒழிப்புத் தீ பற்றிக் கொள்ளுமேயானால் அதனை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
எனவே நமது கருத்து மய்யமாக கொள்ள வேண்டியது மாணவர்கள், இளைஞர்கள் மூளைதான்.
கூட்டுச் செயல் திட்டத்துடன் புறப்பட்டுள்ள திராவிடர் இயக்கம் - பொதுவுடைமை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் வெற்றி பெற்றிட அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக் கரத்தை நீட்டுவார்களாக!
ஜாதியைச் சாய்ப்போம்! சமத்துவம் படைப்போம்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...