Thursday, December 6, 2012

தமிழ் பெண்கள் அன்றும் இன்றும் என்றும்


தமிழ் பெண்கள் அன்றும் இன்றும் என்றும் - டாக்டர் சரோஜா இளங்கோவன்
மனித சமுதாயத்திற்கு, முக்கியமாகப் பெண்கள் சமுதாயத்திற்கு மனவலிமையோடும், மனவளமையோடும், மன அமைதியுடன் வாழ உரிமை உண்டு. அந்த உரிமையைப் பிறரிடம் எதிர்-பார்ப்பது ஏமாற்றத்திற்கு வழி கோலும். அதை-விட அதைத் தேடி அலையும் முயற்சியில் தன்னையும், தன்மானத்தையும் இழக்க நேரிடலாம். அண்மையில் நித்யானந்தா, பிரேமானந்தா போன்ற எண்ணற்ற போலிச் சாமியார்களின் நடத்தை எடுத்துக்காட்டாகும்.
தற்போது பெண்களைப் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்கள். தந்தை பெரியார் அறிவுரைக்கேற்ப ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறு-வான். ஒரு பெண்ணைப் படிக்கவைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும் என்பதற்கேற்ப, தற்போது பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இதனால் பெண்கள் பொருளா-தாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். உலக அளவில் சிறந்தவர்களாகிக் கொண்டிருக்-கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. இவர்களில் பெரும்பான்மையான குடும்பங்களின் பொருளா-தார வளம் பெருகியுள்ளது. இப் பெண்களின் குழந்தைகள் கல்வி வளத்திலும், பொருளா-தாரத்திலும் நல்ல நிலைமை அடைந்து வருகிறார்கள்.
இன்றைய இந்தச் சூழ்நிலையில் பெண்களின் நிலையை ஊன்றிக் கவனித்தால் சில உண்மைகள் தெரிய ஆரம்பிக்கும்.
1. அவர்கள் தங்கள் உடல்நிலை, ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள். எல்லாவிதமான வீட்டு வேலைகளுக்கும் இயந்திரங்களையும், வேலைக்காரர்களையும் நம்பி இருக்கிறார்கள். இதனால் நடுத்தர வயதுப் பெண்கள் நிறையப் பேர் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்), ரத்தக்கொதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2. தொலைக்காட்சியில் வரும் சின்னத்திரை நாடகங்களில் நாட்டம் கொண்டு, அதே மாதிரித் தம் வாழ்க்கையிலும் நடப்பதாகக் கற்பனை செய்துகொண்டு மனநிம்மதியை இழக்கிறார்கள்.
3. கையில் காசு இருந்தாலும் இல்லா-விட்டாலும் வரவுக்குத் தக்க செலவு செய்வதற்குப் பதிலாக, துணிமணிகளையும் நகைகளையும் வாங்குகிறார்கள்.
4. குடும்பத்தாருக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பதற்குப் பதிலாக வறுத்த, பொரித்த உணவுகள், நிறையத் திண்பண்டங்கள், இனிப்புகள் கொடுக்கிறார்கள்.
5. நல்ல புத்தகங்கள் வாங்கிப்படிப்பதை விட்டுவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆரோக்கியமான உணவு உண்ணுகிறார்கள். குடும்பத்தினர் நலமுடன் வாழ உதவி செய்கிறார்கள். ஒரு குறை என்ன-வென்றால் மனநிறைவு இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த என் கருத்து இரண்டு கண்டங்களில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கும் பொருந்தும்.
எனக்குத் தெரிந்த ஒரு காரணம் என்னவென்றால் அது பயம்தான். இந்தப் பயத்தால் ஜோதிடம், கோயில், பூசை, புனஸ்காரங்கள் என்று பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறார்கள். இவையெல்லாம் நானே என் மூளைக்கு இட்டுக்கொண்ட விலங்குகள். பயம் என்னுடைய நிரந்தரத் தோழியாக இருந்தது. இறந்தகால நிகழ்ச்சிகளை வருத்தத்துடனும், நிகழ்காலத்தை உணராமலும், எதிர்காலத்தைப் பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கை தந்த பாடங்களும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், அறிவுரைதரும் பல நல்ல புத்தகங்களும் இந்தப் பயத்தின் வன்மையைக் குறைத்துவிட்டன. நான் விடாமல் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு என்னும் பகுத்தறிவுப் புத்தகங்களையும் படித்து வருகிறேன். இதனால், தமிழில் என்னுடைய எழுத்துத் திறமையும் வளர்ந்து வருகிறது. பயணக் கட்டுரைகளும் அவ்வப்போது மருத்துவக் கட்டுரைகளும் எழுதி வருகிறேன்.
தற்பொழுது மருத்துவ வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் பேரக்குழந்தைகளைக் கவனித்த நேரம் போக மீதி நேரத்தில் நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு என்னால் முடிந்த சில காரியங்களைச் செய்து வருகிறேன். சில ஆலோசனைகளையும், காரியங்களையும் செய்ய முடிந்தவர்களுக்குச் சொல்லி வருகிறேன். இதை ஏன் இக்கட்டுரை-யில் சொல்கிறேன் என்றால், தமிழ்ப் பெண்கள் மிக்க மன வலிமையானவர்கள். அவர்களால் முடிந்ததைத் தமக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் செய்யாமல் இருப்பதால் தான் மன நிம்மதியை, மன வளமையை இழக்கிறார்கள். குடும்பப் பெருமைகாக்க குடும்பத்தில் உள்ள குறைகள், துன்பங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று தங்கள் மனதிலேயே புதைத்துவைத்துப் புழுங்கி வேதனைப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் குணப்படுத்த ஆரம்பத்திலேயே முயற்சி எடுக்காமல் முற்றவிட்டுக் கடைசியில் எல்லா-வற்றையும் இழக்கிறார்கள்.
பின்வருபவை எனக்குத் தெரிந்த வழிகள்:

1. தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சி. வீட்டில் செய்யும் வேலைகள் உடற்பயிற்சி அல்ல.
2. மன அமைதி நேரம் (தியானம்) குறைந்தது பத்து நிமிடங்கள்.
3. முடிந்தவரை வீட்டில் தயாரித்த ஆரோக்கிய உணவை (Balanced Diet) உண்ணுதல்.
4. தமிழ் சினிமாக்களைப் பார்க்கும் நேரத்தை நல்ல புத்தகங்கள் படிப்பதில் செலவழித்தல். புத்தகக் குழுக்கள் வைத்துப் பகிர்ந்து கொள்ளுதல்.
5. பண உதவி நிறைய செய்ய முடியா-விட்டாலும் சுற்றத்தாரிடம் அன்பும் ஆதரவும் காட்டுதல்.
6. மது, போதை மருந்து, நோய் பாதிக்கப்-பட்ட குடும்பத்தினரிடமும், சுற்றத்தாருடனும் கருணையுடன் இருந்து அவர்களுடைய பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளாமல் இந்த நோய்களுக்கான குடும்ப ஆதரவுக் கூட்டங்-களுக்குச் சென்று பயனடைய வேண்டும்.
7. மன உளைச்சல்கள், மனநோய் ஆகியவை நமக்கும் குடும்பத்தாருக்கும் இருந்தால், அனாவசியமாக குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணாமல் உடனடியாக மன மருத்துவ நிபுணர்களை அணுகிக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
8. நம்முடைய வயதான பெற்றோர்களையும் உறவினர்களையும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களுக்கு உணவு, இருக்க இடம், உடல்நலம் பேணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் மன அமைதி நிச்சயம் கிடைக்கும்.
9. குடும்பங்களில் குழப்பங்கள் வந்தால் ஒதுங்கிக் கொள்ளாமல் ஆரம்பத்திலேயே நம்மால் முடிந்த அளவு நிலைமையைச் சரி செய்ய உதவவேண்டும்.
10. நாம் தப்பு செய்ததாக மனதார உணர்ந்தால் வெட்கப்படாமல் உடனுக்குடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். மன உளைச்சல் மிகவும் மோசமான நோய்.
11. நாம் உத்தியோக வல்லுனர்களாக இருந்தால் அவ்வப்பொழுது நம் ஊரில் அந்தச் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும். உதாரணம்; ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள் மேலும் பிற வல்லுநர்கள்.
12. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்யாமல், சம்பாதிப்பதில் குறைந்தது 10 சதவிகிதம் சேமிப்பு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். குடும்பத்தினருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
13. பொது நலனுக்காக, தயங்காமல் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். அதில் வரும் இன்பமே உண்மையான இன்பம்.
14. குழந்தைகளுக்குத் திருக்குறளை மய்யமாக வைத்து எழுதிய கதைகளைச் சொல்லி நல்வழி காட்டவேண்டும்.
15. இனிமேலாவது போலிச் சாமியார்களிடம் ஏமாறாமல் இருக்க முயற்சி செய்யவேண்டும்.
16. திருமணங்கள் இன்னும் பேராசையின் பிறப்பிடமாகத்தான் இருக்கின்றன. பெண் வீட்டாரை உறிஞ்சி சக்கையாகப் பிழிந்து-விடுகிறார்கள். இந்த மனப்பான்மை மாற பெண்கள்தான் முழுப்பங்கு ஏற்கவேண்டும். இந்த வரதட்சணைப் பிரச்சினையால், ஆரம்பத்திலேயே திருமணமாகும் பெண்ணின் மனத்திலும், அவர் குடும்பத்தாரின் மனத்திலும் காழ்ப்புணர்வு வளர ஏதுவாகிறது. பிறகு, சில ஆண்டுகளில் பலவிதக் குடும்பச் சண்டைகள். இவற்றை எல்லாம் தடுக்க ஒரே வழி இரு குடும்பத்தாரும் ஒருவரை ஒருவர் மதித்து வரதட்சணைக் கொடுமையைத் தவிர்க்கவேண்டும்.
ஆகமொத்தம் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடைபோடும் ஒரு ஆணுக்கு, ஒரு திறமையான பெண் பின்னணியாக இருப்பது போல் வெற்றிநடை போடும் ஒரு குடும்பத்தின் உந்து சக்தியாக, சந்தேகமின்றி பெண்கள்தான் இருப்பார்கள்.
மருமகளை மகளாகவும், மாமியாரைத் தாயாகவும் உண்மையில் நினைக்கப் பழகி-விட்டால் பல குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

1 comment:

சசிகலா said...

இன்றைய கால பெண்களின் நிலையையும் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி காட்டிய விதம் மிகவும் சிறப்பு.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...