Monday, December 24, 2012

கொல்லைப் புறவழி எச்சரிக்கை!


ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.

போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.

தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள்  கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.

இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.

மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!

பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.

ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.

இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...