Friday, December 7, 2012

விஜயபாரதம் சீண்டுவது ஏன்?


தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழ்ந்த மூன்று கிராமங்கள் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளன; அதிர்ச்சியுடன் அந்தப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் களுடன்  சென்றார். வீடுவீடாகச் சென்றார் - குமுறிக் குமுறி அழுத தாய்மார்களின் கண்ணீர் இன்னும் நம் கண்கள் முன் பாய்ந்து கொண்டு தானிருக்கின்றது.
இந்த ஜாதித் தீக்கு தீ மூட்டப்பட வேண்டும்.
அதற்கு உயிர்த் தண்ணீர் ஊற்ற யாரும் முயலக் கூடாது. மக்களின் மூளையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஜாதிப் பாம்பு திடீரென படம் எடுத்து ஆடுகிறது; கொத்துகிறது. இந்தக் கொடூரம் ஒழிக்கப்பட வேண்டும் - மக்களின் மூளையில் படிந்திருக்கும் ஜாதி நோய்க்கு ரேடியம் சிகிச்சை தேவைப்படலாம்.
அதுதான் விழிப்புணர்வு என்பது. உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் இணைந்து நின்று போராட வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, வலது கையும் இடது கையும் அடித்துக் கொள்ள வேண்டுமா?
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எவ்வளவு சொல்லியிருக்கிறார்கள் - ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
மீண்டும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதற் காக உடனே தருமபுரியில் வரும் ஞாயிறன்று (9.12.2012) ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டினை அறிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களாக ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றிணைந்து போராட வேண்டியவற்றை எடுத்துக் கூறி இரு கரங்களையும் இணைக்கும் பணியில் திராவிடர் கழகம் ஈடு பட்டுள்ளது.
ஜாதி என்பதற்கு ஏது அடையாளம்? சொல்ல முடியுமா? சவால் விட்டே கேட்க முடியும்!
ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் இவற்றின் மூலம் ஜாதியற்ற புத்துலகத்தைப் படைக்கும் பாங்கில் திராவிடர் கழகம் அவற்றை நடத்தினால் இந்து முன்னணிக்காரர்களுக்கு மூக்குப்புடைக்கிறது.
தி.க. தலைவர் வீரமணி, கலப்புத் திருமண மாநாடு நடத்துவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகும். தொல். திருமாவளவன் கலப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசுவது மீண்டும் பதற்ற நிலைமையை உருவாக்குமே தவிர அமைதியை உருவாக்காது என்று இந்து முன் னணி - ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் (7.12.2012 பக்கம் 13) எழுதுகிறது.
எப்படிப்பட்ட கண்டுபிடிப்புப் பார்த்தீர்களா? ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தினால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகுமாம்.
அப்படியென்றால் ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வோம் - ஜாதி வெறியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவோம் என்று  குரல் கொடுக்க வேண்டுமா?
பொது சுடுகாடு என்பது கூடாது - இந்துக் களிடையே பல்வழி தகன முறைகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றன என்று சொல்லுபவர்தானே அவாளின் ஜெகத் குரு.
இப்படி சுடுகாட்டிலும்கூட ஜாதி இருந்தால்தான் ஜாதித் தீ அணைவதற்கு வழி என்று சொல்ல வருகிறார்களா?
இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்னும் கேவலமான அமைப்பு முறை இருக்கிறதே - அதனால்தானே ஊர்கள் எரிகின்றன என்று நேர்மையோடு எண்ணி, ஜாதியை ஒழிப்போம் வாரீர் என்று குரல் கொடுக்க விஜய பாரதங்களை வெளிப்படையாக வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஜாதி ஒழிந்தால் பார்ப்பன ஆதிபத்தியத்தின் அடிச்சுவடு கூட இல்லாமல் அந்தத் தருணத்திலேயே மண் மூடிப் போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
தருமபுரி மாவட்டத்தில் நடந்தவற்றை நாங்களும் கண்டிக்கிறோம் என்று ஊரை ஏமாற்ற ஒப்பாரி வைத்துக் கொண்டு, இன்னொரு புறத்தில் ஜாதி ஒழிப்புக்கான உபாயங்களுள் ஒன்றான ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தும் திராவிடர்  கழகத்தைச் சீண்டுவது ஏன்? இதற்குப் பெயர்தான் கடைந்தெடுத்த பார்ப்பனீயம் என்பது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...