Monday, November 5, 2012

தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு பயணம் பயனுள்ளது


இலங்கை அரசிடம் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர் வாழ்வுரிமை பெற்றிட
அய்.நா.வும், பன்னாடுகளும் முன்வர வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


டெசோ மாநாட்டுத் தீர்மானங் களை, அய்.நா. துணைப் பொதுச் செயலாளரிடம் தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர்அளித்து விளக்கியிருப்பது - நல்ல பயன்களை விளைவிக்கக் கூடியதாகும்.
இலங்கை அரசிடம் அய்.நா. மற்றும் பன்னாடுகளும் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற ஆவன செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற பன்னாட்டுப் பேராளர்களும் கலந்து கொண்ட டெசோ மாநாட்டின் தீர்மானங்களை, டெசோ செயற் குழுவினர் முடிவு செய்ததற்கேற்ப, அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுடைய இணைப்புக் கடிதத் துடன் 1.11.2012 அன்று, நியூயார்க்கில் அய்.நா. மாமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு.  யான் லியாசன் அவர்களை நேரில் அய்.நா. தலைமையகத்தில்  தி.மு.க.வின் பொருளாளரும் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான  மானமிகு  தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க.வின் நாடாளு மன்றக் குழுத் தலைவரான மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் நேரில் சந்தித்து, அளித்து, விளக்கினார்கள். சுமார் 25 மணித்துளிகளுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின், உரையாடல்மூலம் ஈழத்தில் போர் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் அத்தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்படாததோடு, இராணுவக் கண்காணிப்பில் தமிழர்கள் - வடகிழக்குப் பகுதியிலும்  உள்ளார்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் சூழ்நிலை இல்லை; தமிழர் பகுதிகள் திட்ட மிட்டே சிங்களர் வசம் ஒப்புவிக்கப்படுகிறது. எந்தத் தொழிலையும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் ஈழப் பகுதி வாழ் மக்கள் இன்னமும் வாழும் அவலம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து, அய்.நா. போன்ற பொது மன்றம் மூலம்தான் இலங்கை அரசை வற்புறுத்தி அம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டுடெடுக்க முடியும் என்பதைக் கூறியுள்ளனர்.
பொறுமையாகவும், ஆர்வத்துடனும் கவலை யுடனும் கேட்டுக் கொண்ட துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் இப்பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருப்ப தற்காக மகிழ்ச்சி; பொதுச் செயலாளர் அவர்களும் இதை முறையாகத் தெரிவித்து வழிவகை காண முயலலாம் என்று கூறியுள்ளார்கள் என்பது மிகவும் நிம்மதியளிக்கக் கூடியது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்டெடுப்பதற்கான விடியலுக்கான வெள்ளி முளைத்துள்ளது இதற்கான நம்பிக்கை இதன்மூலம் கிடைத்திருக்கிறது ஈழத் தமிழர் களுக்கு.
சாண்டி புயல், மழை, வெள்ளம் காரணமாக, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியே செயலற்று மின்சாரம்கூட இல்லாமல், போக்குவரத்துப் பாதைகள், சுரங்கப் பாதைகளில் எல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மூடப்பட்ட நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள அய்.நா. தலைமையகம் நவம்பர் ஒன்றாம் தேதிதான் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தடைக்கற்களையும் தாண்டி நமது தளபதி அவர்களும், நண்பர் டி.ஆர். பாலு அவர் களும் அய்.நா. துணைப் பொதுச் செய லாளரைச் சந்திக்கக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு கூட மிகவும் அசாதாரணச் சூழ்நிலையில்தான்! கடமையைச் செய்ய முன்வந்த அந்த அலுவல கத்தாரும், குறிப்பாக துணைப் பொதுச் செய லாளரும் தமிழ் கூறு நல் உலகத்தின் நன்றிக் கும், பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள்!
நேற்று மாலை, நம்மிடம் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு, நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினார்கள்.
சென்னையில் 31ஆம் தேதி, புறப்பட்ட அவர்கள் 30 மணி நேரம் பயணம் செய்து பிறகு சந்தித்த தகவலைக் கேட்டதும் மிகவும் வியப்பாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது!
டெசோ மாநாட்டின் விழுமிய பயன் துளிர்த் துக் கிளைக்கும்; ஈழத் தமிழரின் பறிக்கப்பட்ட வாழ்வுரிமை மெல்ல மெல்லத் திரும்பும் என்று நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது.
சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் இத்தீர்மானங்கள் முறையாக சென்றடைவதும் உறுதி.
நவம்பர் ஒன்றாம் தேதி அங்கே பல நாடுகளும் இலங்கை அரசின் மெத்தனப் போக்கு, தமிழர் விரோத நடவடிக்கைகள், மனித உரிமைகள் மீறல், தங்கள் காலடியில் போட்டு மிதித்துவரும் கொடுமைகள்பற்றி அலசப்பட்டுள்ளது; ஆம்னெஸ்டே இன்டர் நேஷனல் பிரதிநிதி இலங்கையின் ராஜபக்சே அரசு நம்பகத்தன்மை உடையதல்ல என்றே கூறியுள்ளார்.
இனி இந்திய அரசும் இதில்போதிய உறுதிகாட்ட வேண்டும். நம் அமைப்புகள் அத்துணையும் அதனை விடாது இந்திய அரசு காதுகளில் ஓதிக் கொண்டே இருந்து, வாக்கெடுப்பில் முன்பு செயல்பட வைத்தது போன்று செயல்பட வைக்க தவறக் கூடாது!
இன்றுள்ள சூழலில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையை நியாய உணர்வும், மனிதாபி மானமும் கொண்டு பன்னாடுகளும், அய்.நா. போன்ற பொது மன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும், பாதுகாக்க உதவிட முடியும்.
அதற்கெல்லாம் மேலாக, தொப்புள் கொடி உறவுள்ள, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்கு வங்கியை எதிர்பார்க்கும் இந்திய மத்திய அரசின் ஆளுங் கட்சி ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் உறுதி காட்டாவிட்டால், தங்களது எதிர்கால அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது.
எனவே மனிதநேயக் கண்ணோட்டத்திலும் சரி, தேர்தல் அரசியல் கண்ணோட்டத்திலும் சரி, இலங்கை அரசிடம் கண்டிப்பு காட்டி அரசின் தீர்வுக்கு வலியுறுத்தி, வெற்றி பெற முயற்சிக்க முன்வர வேண்டும் என்பது அவசரம் அவசியம்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
3.11.2012 சென்னை


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...