Thursday, November 1, 2012

கோயில்களில் தமிழ் அர்ச்சனை மொழி



கோயில்களில் தமிழ்; காந்திஜி கூறியது என்ன? என்ற தலைப்பில் 20.10.2012 தினமணி இதழில் ஒரு வடமொழி ஆதரவாளர் கட்டுரை ஒன்று எழுதி உள்ளார். அதில் கோயில் வழிபாடுகளில் தமிழ் மட்டும் தான் வேண்டும் என்று ஊடுருவ சிலர் தற்போது முனைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

கோயில் பூசைகள், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆதிக்கத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர் என்று ஆத்திகர்களையே கிண்டல் செய் கிறார்!

கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண் டும் என்று தந்தைபெரியார் தன் வாழ்நாளிலேயே கோரிக்கை எழுப்பி அதற்காகப் போராடவும் துணிந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் விரும்பினார் என்றால் அவர்களுக்கு வடமொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

நம் தாய் மொழியாம் தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தமிழில் வழிபாடு நடத்தவேண்டும் என்று எண்ணித்தான் தி.மு.க. அரசு பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்ற சட்டம் கொண்டு வந்தது.

டெல்லி உச்சநீதிமன்றமும் சட்டம் செல்லுபடி யாகும் என்று தனது தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வரமுடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறுவை சிகிச்சை வெற்றி - ஆனால் நோயாளி மரணம் என்று அருமையான தலையங்கம் தீட்டியிருந் தார். (விடுதலை நாள்: 16.10.2012).

தந்தை பெரியாரின் தன்மானத் தொண்டர்கள் இலட்சோப இலட்சம் பேர் கோயில்களில் தமிழ்மொழி வழி பாட்டையே விரும்புகின்றனர்.

கட்டுரை ஆசிரியர் நவஜீவன் இதழில் 28.3.1936இல் காந்தியார் அனைத்து இந்து சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம் என்று எழுதி இருந்ததை எடுத்துக்காட்டு கிறார்.

காந்தியார் கூறியது அனைத் தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பகவத் கீதையை தனது வாழ்க்கை வழிகாட்டி யாகக் கொண்ட காந்தியார் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர்ண தர்மத்தை ஆதரித்தார்! இதைப் பண்டித நேரு தீவிரமாக எதிர்த் தார்.

இராமாயணம், மகாபாரதம் இரண் டும் கற்பனைக் கதைகள் என்று கூறியவர் பண்டித நேரு, பகவத் கீதையை அண் ணல் அம்பேத்கர் வெறுத்து ஒதுக்கினார்.
சர் சி.பி. இராமசாமி அய்யர் குழு (1960-62) அறிக்கை பின் வருமாறு கூறுகிறது. 

அர்ச்சகர்களும், பூசாரி களும் எழுத்து வாசனை அற்றவர்கள் அல்லது அரைகுறை படிப்பே உள்ளவர் கள். இவர்களுக்கு தாங்கள் சொல்லு வதன் பொருளோ, கருத்தோ கொஞ்சமும் தெரியாது.

இதனால் தெய்வ அருள் வேண்டிக் கோயிலுக்கு வரும் சேவார்த் திகளுக்கு பக்தி உணர்வையும், தெய்வ உணர்வையும் ஊட்ட முடிவதில்லை என்பது தெளிவு (விடுதலை நாள் : 22.01.2006).

சமஸ்கிருத மொழி தமிழ்நாட்டில் சமயத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதை தந்தை பெரியார் தீவிரமாக கண்டித்தார். சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக் குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும் (விடுதலை 25.07.2011)

பிராந்திய மொழியில் வழிபாடு ஓதப்பட்டால், ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாகப் பயபக்தியுடன் ஓதப்பட்டு, தூய்மை மெருகேறிய சமஸ்கிருத மொழி சுலோகங்களின் புனிதத் தன்மை குறைந்துவிடும் என்ற காந்தியாரின் கூற்று பெரியாரின் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

தமிழ் மொழியைத் தமிழ் நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக்க தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் பாடுபட வேண்டும். இதுவே நாம் பெரியாரின் முக்கால் நூற்றாண்டு பொதுத் தொண்டிற்கு செய்யும் நன்றிக் கடனாகும்.

- செய்யாறு இர. செங்கல்வராயன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...