Friday, November 30, 2012

காவிரி நதிநீர்ப் பிரச்சினை: அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலம் முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் உடனே அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழ்நாடு முதல் அமைச்சர், காவிரி டெல்டா பகுதியில் கருகிவிடும் நிலையில் உள்ள 14 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களுக்கு காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நதி நீர் ஆணையத்தின் கட்டளைப்படியும், குறைந்தபட்சம் 30 டி.எம்.சி. தண்ணீராவது தரவேண்டும் என்பதை வலியுறுத்தி நேரில் நேற்று (29.11.2012) கர்நாடகத் தலைநகர் பெங்களூருக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றே கருநாடக முதல் அமைச்சர் ஷெட்டர் ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தரும் நிலையில் நாங்கள் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து, செய்தியாளர்களிடையே சொன்னதுபோலவே, இன்று பேச்சு வார்த்தையில், தமிழக விவசாயிகளும், கருநாடக விவசாயிகளைப் போலவே மனிதர்கள்தான் என்பதை எண்ண மறந்து, சற்றும் மனிதாபிமானம் காட்டாது - மரியாதைக்காகக்கூட அடையாளமாக ஒரு அளவு தண்ணீரை நாம் இருவருமே பகிர்ந்துகொள்வோம் என்று கூறவில்லை.

வெட்டொன்று துண்டு ரெண்டு என்பதைப்போல பேசிவிட்டார். இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு 127 தடவை பேச்சுவார்த்தைகள் 30 ஆண்டுகளுக்குமேல் நடந்து உருப்படியான முடிவு எதனையும் எட்ட இயலாத நிலை என்பதால்தான் நாம் நடுவர் மன்றம் கோரினோம்.

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைத்து இந்த அளவுக்கு வழி செய்தார்! கருநாடக நதிநீர் ஆணையம் பிரதமர் தலைமையில் கொடுத்த ஆணையையும் மதிக்காமல், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கே வந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டது சரியான நிலைப்பாடே ஆகும்.

ஆனால், அவர்கள் தீர்ப்பு வழங்கி சம்பா பயிர்களைக் காப்பாற்ற இருக்கும் நீரை எப்படியும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சொன்னதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்திட பெங்களூரு சென்றார். அது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், தமிழக காவிரிப் பாசன விவசாயிகள் நெஞ்சம் பதைபதைத்து நிற்கின்றனர். இந்நிலையில், அவசரமான தீர்வுகளை காலதாமதம் இன்றி கண்டாக வேண்டும்.

1.    நாளை (30.11.2012) உச்சநீதிமன்றத்தில் இதை விளக்கி தமிழக அரசு உரிய நிவாரணம் கேட்டுப் பெறுவது ஒரு வழி.

2.    காவிரிப் பாசன விவசாயிகள் தங்கள் சம்பா பயிர்களைக் காப்பாற்ற தடையில்லாமல் - மின்வெட்டு இன்றி குறைந்தது ஒரு வாரத்திற்காவது தர தமிழக அரசு முடிவு செய்யவேண்டும்.

3.    விவசாயிகளுக்குப் போதிய நிவாரண உதவிக்குரிய, நட்ட ஈட்டுத்தொகையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

4.    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும், விவசாயப் பிரதிநிதிகளையும் அழைத்து தமிழக அரசு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காலதாமதம் செய்யாமல் கூட்டவேண்டும்.  தொலை நோக்குடன், (அ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசின் கெசட்டில் இது பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்டால்தான் முழு சட்ட உரிமையும், வலிமையும் ஏற்படும். (ஆ) தமிழ்நாட்டு நதிகளை முதலில் இணைக்கும் திட்டத்தை, நீர்ப்பாசன, நீரியல் துறை வல்லுநர்களை அழைத்து திட்டம் தீட்டி, அதற்கான நிதி ஆதாரங்களை (உலக வங்கி சேவைகளையும், சர்வ தேச நிதி ஆணையம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவைகளையும் பெற தணிக்கைக் குழு அமைத்து ஆலோசனைப் பெறுவது அவசியம்).

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகி கருநாடகம் மற்றும் இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்தை, தமிழ்நாட்டிற்கே வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அனைவரும் ஒரே குரலில் - அரசியல் மாச்சரியம் பாராமல் வற்புறுத்திட வேண்டும். அதன்மூலமாக, இப்போது காவிரி விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரத்தை குறைந்தபட்ச தேவை நாள்கள் வரை தாராளமாக வழங்க முடியும்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி பிரதமரைப் பார்த்து முறையிட்டு தமிழ்நாட்டு காவிரி பிரச்சினை விவசாயிகளின் துயர நிலையை - ஏற்படவிருக்கும் பேரிடரைத் தடுத்து நிறுத்த முடியும். கருநாடகத்தில் எல்லோரும் ஓர் அணி. இங்கேயும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அணியில் நிற்பது - உரிமைகளை வலியுறுத்துவது அவசர - அவசியம். தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பலரது கருத்தையும் கேட்டு, கருத்திணக்க முறையில் இப்பிரச்சினையை அணுகித் தீர்வுகாணவேண்டியது மிகவும் இன்றியமையாதது. கருநாடகம் இவ்வளவு பிடிவாதம் காட்டுவதற்கு மூலகாரணம் வாக்கு வங்கி அரசியல் - தேர்தல் களம்தான் என்பது உலகறிந்த ரகசியமாகும்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...