Tuesday, November 6, 2012

அய்.நா.துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ சார்பில் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் - விளக்கங்கள்


நியூயார்க், நவ.5- அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள அய்க்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தி.மு.கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  அவர்களும் அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்களை, நவம்பர் 1 ஆம் தேதியன்று நேரில் சந்தித்து - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை காக்க வகை செய்யும் கோரிக்கைகள் அடங்கிய - டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கையொப்பமிட்ட டெசோ அமைப்பின்  தீர்மானத்தினையும் - நெடிய  ஈழத் தமிழர் போராட்டத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த தி.மு.கழகத்தின் சார்பில் கலைஞர் அவர்கள் வழங்கிய மனுவினையும் நேரில் வழங்கி - அதனை விரிவாக எடுத்துரைத்து விளக்கினார்கள்.

‘Beats of  Bleeding Hearts’   என்ற தலைப்பில் அமைந்த  கலைஞர் அவர்களின் அந்த விரிவான அறிக்கையில்; இலங்கைத் தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ள வழி வகுக்கும் வகையில்; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் - வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர் களிடையே அய்.நா. மேற்பார்வையின் கீழ் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்திட அய்.நா. முன்வர வேண்டும் எனும் கோரிக்கையினை முக்கிய வேண்டுகோளாக வைத்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் மற்றும் அரசியல் தீர்வுக்கான அவசியம் ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் கையொப்பமிடப்பட்டு ‘BEATS OF BLEEDING HEARTS’என்ற தலைப்பில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு :-

லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்பு காரணமாக இலங்கையில் நடைபெற்ற மிருகத்தன மான உள்நாட்டுப் போர் நமது மனங்களை எப்போதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக் கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மனிதகுல வரலாற்றில் படுமோசமான அவமான மாகவும், கறையாகவும் அமைந்துவிட்டது. அது உலகச் சமுதாயத்தையே உலுக்கி, தற்போது, உலக சமுதாயம் இத்தகைய ஒரு படுகொலை எதிர் காலத்தில் நிகழாமல் தடுப்பதற்காக ஒன்றுபட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர்களின் சமத்துவத்திற்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தி.மு.க. எடுத்த நடவடிக்கைகளில் சில பின்வருமாறு:-

56 ஆண்டுகளுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு தி.மு.க.வின் பொதுக்குழு; ஈழத் தமிழர்களுக்கு சம உரிமைகளும், அமைதியான வாழ்க்கையும் வேண் டும் என்று கோரும் தீர்மானத்தை நான் முன் மொழிந்து நிறைவேற்றியது.

சிங்களர்களின் கொடுமைகளை எதிர்த்து
1958 லேயே பேரணி நடத்திய பேரியக்கம்!


1958ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் மீது சிங்களர் கள் நடத்திய கொடுமைகளை எதிர்த்து சென் னையில் தி.மு.க. மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்தியது. 1961ஆம் ஆண்டிலேயே தூத்துக்குடியில் நடை பெற்ற தி.மு.க. பொதுக்குழு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையில் எடுக்க வேண்டுகோள் விடுத்து தீர்மா னத்தை நிறை வேற்றியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததற்காக 1976, 1991 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசால் என் தலைமை யிலான தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. போராட் டங்களின் போது பல நேரங்களில் நான் பல்லா யிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டேன்.

1981 ஆம் ஆண்டு இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும் தி.மு.க. போராட்டத்தை நடத்தி, அதில் நானும் எங்கள் கட்சியின் பல தலைவர்களும் கைது செய்யப்பட்டோம். தி.மு.க.வின் அய்ம்பது தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்தனர்.

ஒருசில மணி நேரங்களில் - 8 லட்சம் பேரைத் திரட்டி தி.மு.க. நடத்திய கண்டனப் பேரணி

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் சிங்கள வெறியர்கள் இலங்கையில் உள்ள வெளிக் கடை சிறையில் புகுந்து தமிழர்களின் முன்னணித் தலைவர்களான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 35 தமிழர்களைப் படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் தி.மு.க. 8 லட்சம் பேருக்கு மேல் திரட்டி இலங் கையில் பற்றி எரியும் பிரச்சினையில் சர்வ தேச கவனத்தைத் திருப்ப மிகப்பெரும் கண்டன ஊர் வலத்தை சென்னையில் நடத்தியது.

1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று தேசம் முழுவதும் விழிப்புணர்வையும், தாக்கத்தை யும் உருவாக்க - நானும் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் - எங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தோம். ஈழத் தமிழர்களின் மோசமான நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாததால்  போராட்டத்தைத் தீவிரமாக்கி, இப்பிரச்சினையை மாநில அளவில் இருந்து தேசிய அளவிற்குக் கொண்டு செல்ல தி.மு.க. முடிவெடுத் தது.

எனவே, தி.மு.க. ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் ஈழ ஆதரவா ளர்கள்  டெசோ எனும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பை 1985 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் துயரங்களை எதிர்த்து ஒட்டுமொத்த குரல் எழுப்ப வும், எங்களது கோரிக்கையை நோக்கி உலக சமுதாயத்தின் உடனடி கவனத்தை ஈர்க்கவும் துவக்கினோம்.

இதைத் தொடர்ந்து டெசோ அமைப்பு தமிழ கத்தின் பல பகுதிகளில் மாபெரும் ஊர்வலங்கள், கண்டனப் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங் களை நடத்தியது. எனது தலைமையிலான தி.மு.க. ஒரு கோடி இந்தியத் தமிழர்களின் கையொப்பங் களை சேகரிக்கும் பிரம்மாண்ட இயக்கத்தை நடத்தி, அதை இலங்கையில் அமைதி திரும்பவும், அடக்குமுறை சிங்கள அரசின் கொடுங்கோன்மை மற்றும் கொடுமைகளிலிருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும், உடனடியாகத் தலையிடக்கோரி அய்க்கிய நாடுகள் மன்றத்திற்கு அதை அனுப்பி வைத்தது. `டெசோ அமைப்பு முதல் தேசிய மாநாட்டை 1986 ஆம் ஆண்டு மதுரையில் நடத் தியது.

அதில் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ் பாய், முன்னாள் முதலமைச்சர்கள் என்டி.ராமாராவ், எச்.என். பகுகுணா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரசொலிமாறன், ஜஸ்வந்த் சிங், தினேஷ் கோஸ்வாமி, கே.பி.உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மற்றும் தமிழகத் தலைவர்கள் கி.வீரமணி, பழ.நெடுமாறன், இலங்கைத் தமிழர் களின் தலைவர்கள் அமிர்தலிங்கம், சந்திரஹாசன் மற்றும் விடுதலைப் போராளிகள் குழுக்களின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மாநாடு ஈழத் தமிழர்களுக்கு அவர்களுடைய பாரம்பரிய தாய் மண்ணில் பாதுகாப்புக் கோரியும்,  நீதி, சுயமரியாதை, அமைதியான வாழ்க்கை ஆகிய வற்றை உறுதி செய்யவும் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

உலக அளவில் இப்பிரச்சினையை எழுப்ப
இந்திய அரசைக் கோரியது டெசோ


மேலும், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்திய அரசு ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் மேலும் வலுவாக அய்.நா., அணி சேரா நாடுகள் அமைப்பு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளில் இப்பிரச்சினையை எழுப்பும்படி வேண்டுகோள் விடுத்து `டெசோ மாநாடு தீர்மானங் களை நிறைவேற்றியது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருந்த போது, முரசொலி மாறன் எம்.பி. அவர்களுடன் நான் அப்போதைய பிரதமர்கள் ராஜீவ் காந்தி, சந்திரசேகர் ஆகியோரைச் சந்தித்து - அவர்களிடம் ஈழத் தமிழர்களின் துயரமான நிலைமையை எடுத்துக் கூறி, இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஈழத் தமிழர்களின் துயரங்களைக் களைய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தேன்.
இலங்கையில் முடிவடையாத உள்நாட்டுப் போரில் அப்பாவி உயிர்கள் பலியாவதைக் கண்டு துயருற்று 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் நாள், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு அனுப்பி வைத்தது.

தி.மு.க. நடத்திய - மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போர்!

2008ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் நாங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களி லும் மிகப் பெரிய மனிதச் சங்கிலி நடத்தியதுடன்,  ஒரு மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தமும் தி.மு.க.வால் நடத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் ஈழத் தமிழர்களின் துயரங்கள் குறித்து தமிழ்நாடு சட்ட மன்றத்தின் முதலமைச்சர் என்ற முறையில் நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் எனது தலைமையில் ஒரு அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கையில் இனப் படு கொலையை நிறுத்த உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி அவரை வலியுறுத் தினோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இனப் படு கொலைப் போர் முடிந்த பிறகு இந்திய அரசை இலங்கைக்கு ஒரு உயர்மட்ட நாடாளுமன்றக் குழுவை; அங்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடிய மர்த்தல் ஆகிய வற்றில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு உத்தர வாதம் அளித்தபடி பணிகள் நடை பெறு கின்றனவா என்பதை நேரிடையாகப் பார்த்து வரவும், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு வழங் கிய உதவிகள் அமலாக்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கவும் - அனுப்பி வைத்திடுமாறு  நான் வலியுறுத்தினேன்.
தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று - மத்திய அரசு
இலங்கைக்கு அனுப்பிய எம்.பி.க்கள் குழு!

எனது கோரிக்கையின்படி தி.மு.க. நாடாளு மன்றக்  குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலை மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றை இந்திய அரசு அனுப்பி வைத்தது. திருமதி. கனிமொழி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி., ஹெலன் டேவிட்சன் எம்.பி., தொல்.திருமாவளவன் எம்.பி., என்.எஸ். வி.சித்தன் எம்.பி., ஜெ.எம்.ஆரூண் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., கே.எஸ்.அழகிரி எம்.பி. ஆகியோர் அடங்கிய அந்த தமிழக எம்.பி.க்கள் குழுவினர், இலங்கையில் உள்நாட்டில் குடிபெயர்ந்த மக்கள் முகாம்களைப் பார்த்தனர்.

அங்கு மக்கள் புல்வெளிகளால் சூழப் பட்ட போதுமான அளவு கூட இல்லாத கூடாரங்களில் ஆடு மாடுகள் போல மிக மோசமான நிலைமைகளில் வெயிலிலும் மழையிலும் வாடுவதையும் - போதுமான கூரையும், சுகாதாரமான சூழ்நிலையும் இல்லாத நிலையில் தொற்றுநோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலைமையையும் அவர்கள்  கண்டு வந்தனர். அந்த முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மருத் துவ வசதிகள் கூட இன்றி துயரமான நிலையில் உள்ளனர்.

உள் நாட்டில் குடிபெயர்ந்த நபர்களை நடத்துவதற்கு உள்ள சர்வதேச தரங்களை கடைப்பிடிக்க இலங்கை அரசு தவறியுள்ளது. இந்த முகாம்களில் நிலவும் படு மோசமான நிலை மையைப் பற்றி டி.ஆர்.பாலுவிடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன் நான் மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இப்பிரச்சினையை எடுத்து அதன் அடிப்படையில் இந்திய அரசு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது.

தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்ட
நிவாரணப் பொருள்கள்!


முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் பரிதாப மான நிலைமையை புரிந்து நான் தமிழக மக்களுக் கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் குறிப்பாக எனது கட்சியினருக்கும் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர்கள் துணிமணிகள், மருந்துகள், பணம், பாத் திரங்கள் போன்றவற்றை தாராளமாக நன்கொடை யாக அளித்து அவை அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கப்பல்களில் இலங்கைக்கு 13.11.2008, 22.04.2009 மற்றும் 09.05.2009 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்டன. தி.மு.க.வால் அனுப்பப்பட்ட அந்த நிவாரண பொருட்கள் கூட துயரத்தில் வாடும் ஈழத்தமிழர்களுக்கு விநியோகிக் கப்படவில்லை. எனவே நான் மீண்டும் இந்திய அரசை நிதிஉதவி வழங்குமாறும் உள்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்கு  பங்காற்று மாறும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் இந்திய அரசால் வழங்கப்பட்ட உதவி நாம் விரும்பிய பயனாளிகளுக்குச் சென்றடையாமல் அவை சிங் களர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

முகாம்களில் உள்ளவர்களில் 3 இலட்சம் பேருக்கு 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மறு வாழ்வளிக்கப்படும் என்று இந்திய நாடாளு மன்றக் குழுவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். ஆனால் இதுவரையில், தமது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. எனவே தி.மு.க. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி; இந்தியா அளிக்கும் உதவி இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேர்வதையும் அவர்களுக்கு விரைவில் மறுவாழ்வு அளிக்கப் படுவதையும் உறுதி செய்யும்படி வலியுறுத்தியது.

போருக்குப் பின்னாலும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சிரமங்களுக்கு ஆளாகி வருவது எங்களை மீண்டும் டெசோ அமைப்பை உயிர்ப்பிக்க நிர்ப்பந்தித்து - சென்னையில் 2012 ஆகஸ்ட் 12 அன்று ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். இந்த சர்வதேச மாநாட்டில் இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், நார்வே, மொராக்கோ, நைஜீரியா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா நாடுகளில் இருந்து அரசி யல் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமைகள் நடவடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

அய்.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட
இந்தியாவை வலியுறுத்தும் தீர்மானம்!


இந்த மாநாட்டில்  இலங்கைத் தமிழர்களின் பல்வேறு  பிரச்சினைகள் குறித்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மாநாட்டின் 4 வது தீர்மானம்; இலங்கைத் தமிழர்களுக்கு அவர்களது எதிர்கால அரசியல் அமைப்புப் பற்றி அவர்களே தீர்மானித்துக் கொள்ள முழு உரிமை வழங்கும் ஐ.நா. தீர்மானம் ஒன்றை இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானமாகும்.

2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமி ழர்கள் மிகப் பெரும் அளவிலான மிக மோசமான மனித உரிமை மீறல்களை சந்தித்து வருகின்றனர்.  அந்த மனித உரிமை மீறல்கள்  தடுக்கப்படாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலைமையில் உங்களுடைய மேலான பரிசீலனைக்காவும், உகந்த நடவடிக்கைக்காகவும் இந்த மனுவினை அளிக் கிறோம். நீங்களும் போருக்குப் பின்னால் இலங் கைக்குச் சென்று; தமிழர்கள் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும்படி இலங்கை அதிபரை அறிவுறுத்தினீர்கள். ஆனால் இலங்கை அதிபர், தமது  வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்பதுதான் துயரமான உண்மை. இலங்கையில் ஈழத் தமிழர்கள் சந்தித்துவரும் கீழ்க்கண்ட மனித உரிமைப் பிரச்சினைகளை தங்களது பரிசீலனைக் காக நாங்கள் முன் வைக் கிறோம்.

சிங்கள அரசால் நடத்தப்படும் மக்கள்தொகை அடர்த்தி மாற்றம்!


ஆயிரக்கணக்கான தமிழர்களின் வீடுகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர சொத்துக்கள் அவர்களிடமிருந்து வலுக்கட்டாய மாகப் பறிக்கப்பட்டு, சிங்கள இராணுவ வீரர் களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில் சிங்களக் குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு வருகின்றன.

பாரம்பரியமான தமிழர் பகுதிகள்
இராணுவ மயமாக்கப்படுகின்றன!


தமிழர் பகுதிகளில் 5 தமிழர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இராணுவ முகாம் உள்ளது. ஒவ்வொரு தெருமுனை களிலும் காவல் சாவடிகள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளனர். ராணுவத்தின் அனுமதியின்றி எந்த பொது மற்றும் சமூக நிகழ்ச் சிகள் அனுமதிக்கப்படு வதில்லை. பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றை ராணுவம் கட்டுப்பாட் டில் வைத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியப் பகுதிகளில் வளர்ச்சி நிதி பயன்பாடு, கட்டுமானம், விடுதிகள், உணவகங்கள், சிறுவியாபாரம், காய்கறி பயிரிடல் போன்றவற்றில் ராணுவம் பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத் துக்கு காவல் துறை முறையாக அறிக்கைகள் அனுப் பிய போதும், பல நேரங்களில் காவல்துறைக்கு மேலாக ராணுவம் இயங்கி வருகிறது.

நில அபகரிப்பு

நீண்ட போர்க் காலத்தின்போது ஈழத் தமிழர் களுக்குச் சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டன. நிலம் சம்பந்தப்பட்ட தாவாக் கள் தீர்வு அரசு மற்றும் அதன் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் சிங்களர்களுக்கு நிலப் பத்திரங்கள் அளிக்க ஆணையிடப்படுகிறது. தமிழர்கள் சட்ட விரோதமாக வேறு நாடுகளுக்கு குடிபெயர்வதை இலங்கை அரசும், அதன் இராணுவமும் ஊக்கப் படுத்தி அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றுவது என்ற செய்தி உண்மையாகவே இருக்கிறது.

வீழ்ச்சி அடைந்து வரும் அரசியல் பிரதிநிதித்துவம்

வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுத்தல், அரசால் நடத்தப்படும் மக்கள் தொகை அடர்த்தி மாற்றங்கள் ஆகியவற்றால் சுதந்திரம் அடைந்ததி லிருந்து தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

புலம் பெயர்தல்

அதிகாரப்பூர்வமாக 2009 போரின் இறுதிக் கட்டத்தின்போது தாய் நாட்டை விட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். இனவாத அடக்குமுறை காரணமாக ஏற்கனவே தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இலங் கையை விட்டு வெளியேறி விட்டனர். ஏறத்தாழ 10 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் இந்தியாவில் பெரும்பாலும் அகதிகள் முகாம்களில் உள்ளனர்.

காணாமல் போகுதல் / நீதிமன்றங்களுக்கு அப்பால் கொல்லப்படுதல்

2007 ஆம் ஆண்டு சிங்கள அரசால் மேற் கொள்ளப்பட்டதிலிருந்து கிழக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள் ளனர். வடக்கு மாகாணத்தில் 15,780 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. வடக்கு மற்றும் கொழும்புவில் தங்குதடையில்லாமல் பெரும்பாலும் தமிழர்களை நோக்கி காணாமல் போதலும், நீதிமன்றங்களுக்கு அப்பால் கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

விசாரணையின்றி காலவரையரையற்ற சிறை வைப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்டம் அல்லது எந்த விதமான சட்ட அனுமதியும் இன்றி விசாரணை யில்லாமல் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல்


அரசு மதமாக புத்த மதம் அறிவிக்கப்பட்டு இந்து கோயில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் மிகப் பெருமளவில் அழிக்கப்படுவது தொடர்ந்து ஊக்கமளிக்கப்படுகிறது. உதாரணமாக 1,500 இந்துக் கோயில்கள் புத்தவிகார்களாக மாற்றப் பட்டுள்ளன. தேவாலயங்களும், மசூதிகளும் இலங் கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்ப் பெண்களின் பரிதாபகரமான நிலை


மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகி வருப வர்கள் தமிழ்ப் பெண்கள். இலங்கையில் தமிழ்ப் பெண்களின் நிலைமை மிகப் பரிதாபகரமாக உள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த அடக்குமுறை ராணுவ இயக்கம் ஏறத்தாழ 90 ஆயிரம் தமிழ்ப் பெண்களை விதவைகளாக ஆக்கி யுள்ளது. சிங்கள ராணுவத்தினரால் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு தவறாகப் பயன் படுத்தப்படுகின்றனர். இலங்கை இராணு வத்தினரின் வன்முறையான  பாலியல் கொடுமை களுக்கு தமிழ்ப் பெண்கள் ஆளாகியுள்ளனர். அது  பெண்களின் பாதுகாப்பை பெரும் பிரச்சினையாக்கி உள்ளது.

வர்த்தகம் மற்றும் வணிகத்தில் கட்டுப்பாடுகள்
சிங்கள வணிகர்களுக்கு மட்டும் ஆதரவான பாகு பாடான வர்த்தகக் கொள்கையை சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழ் வணிகர்கள் புறக் கணிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். சிங்கள இராணுவம் பொதுமக்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வியாபித்து பொருளா தாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. முடித் திருத்தகங்கள் கூட ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு நடத்தப்படு கின்றன. எனவே தமிழர்களின் பொருளாதார மீட்சிக்கு இடமே இல்லை. எடுத்துக்காட்டாக யாழ்பாணத்திலிருந்து கொழும்பு வரையில் உள்ள ஏ-9 நெடுஞ்சாலை முன்பு தமிழ் வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு, தற்போது சிங்கள முன்னாள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் முன்பு இரண்டு மொழிகளில் இருந்த பெயர்ப் பலகைகள் கூட தற்போது சிங்கள மொழியில் மட்டும் உள்ளன.

தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடு

இலங்கையில் தமிழர்களிடம் தன்னார்வ அமைப் புகள் அணுகுவதைத் தடுப்பதற்காக சிங்கள அரசு வெளிப்படையான மறைமுகமான கட்டுப்பாடு களை விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திலிருந்த அதன் அலுவலகங்களை மூடுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உத்தரவிட்டப்பட்டது.

தமிழ்க் குழந்தைகளின் அல்லல்கள்

தமிழ்க் குழந்தைகள் மீது திணிக்கப்பட்ட கொடு மையான போர் மற்றும் பல ஆண்டுகளாக பாகு படுத்தப்பட்டதன் விளைவுகளால் தமிழ்க் குழந்தை கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டின் இதரப் பகுதிகளில் உள்ளதைவிட இரு மடங்கு குழந்தைச் சாவுகளின் விகிதம் தமிழர் பகுதிகளில் உள்ளது. அய்ந்து வயதுக்குக் குறைவான குழந்தை களின் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவாக வும், எடை குறைவாகவும் உள்ளனர். பிரசவ காலத் தில் மரண விகிதம் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

சமூகப் பாகுபாடு

ராணுவத்தின் முன்அனுமதியின்றி எந்தவித சமுதாய நிகழ்ச்சிகளையும், மதச் சடங்குகளையும் நடத்த முடியாது. முன் அனுமதியும் வழக்கமாக மறுக்கப்படுகிறது. தமிழர்கள் ராணுவத்தின் இசை வின்றி தங்களது வீடுகளில் விருந்தினர்களைக் கூட வைத்துக் கொள்ள முடியாது.

தமிழ் மொழி, கல்வி, கலாச்சாரம்!


கலாச்சார அடையாளம், மொழியின் பெருமை, தமிழ்க் கல்வி ஆகியவற்றை சிங்கள வெறியர்கள் கேலிசெய்வதுடன் தமிழர்களின் கலாச்சார மொழி அடையாளத்தை அழித்தொழிக்க முயன்று வருகின் றனர். தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு இணை யாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. முந் தைய நிர்வாகிகள் தமிழை ஒரு ஆட்சி மொழியாக கருதத் தவறிவிட்டனர்.

இந்த வரலாற்று ரீதியான பாகுபாடு; நிலைமையை மேலும் மோசமாக்கி, மேல் கல்வியில் அராஜகமான நிலைமையைத் தோற்றுவிக்கிறது. சிங்கள அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங் களில் தமிழ் மாணவர்களைப் பாகுபாடு செய்யும் ஒருவிதமான ஒருதரப்பான கணிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டன. ``அனைத்து சமுதாயத் தினரின் விருப்பங்களையும், குறைபாடுகளையும் களைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி பாடுபட்டு வருவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஐ.நா. பொதுச் செயலாளரான தங்களிடம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் எந்த விதமான நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கை அரசியல் சட்டத்தின்
13ஆவது திருத்தம் அறவே மீறப்படுகிறது!


இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோரால் கையொப்ப மிடப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, ``வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்கள் வர லாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பகுதிகள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி இலங்கை அரசியல் சட்டத்தின் உத்தேசிக்கப்பட் டுள்ள 13ஆவது திருத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்று படுத்தி, அந்த மாகாணங்களுக்கு நிலம் சம்மந்தப் பட்ட அதிகாரங்கள் மற்றும் காவல்துறை அதிகா ரங்கள் வழங்கப்படுவதையும் கூறுகிறது.

இருப்பினும் 25 ஆண்டுக்கு முந்தைய இந்திய - இலங்கை ஒப்பந்தம் பின்வந்த இலங்கை அரசு களால் நிறைவேற்றப்படவில்லை. சமீபத்தில் 2009 ஆண்டில் கூட அதிபர் ராஜபக்ஷே மக்கள் தொகைக்கான விவரங்கள் இல்லாததால் வடக்கு மாகாணத்தில் தன்னால் தேர்தலை நடத்த முடியவில்லை என்று அறிவித்தார். ஆயினும் 2010 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான தேர்தலை நடத்த எந்தவிதப் பிரச்சினையும் இருக்கவில்லை. இலங்கை அரசால் நிறைவேற்றப் படாத நிராகரிக் கப்பட்ட வாக்குறுதிகளின் வரலாறு மிகவும் கவலைக் குரியதாகும்.

சிவில் மற்றும் அரசு உரிமைகள் பற்றிய அய்.நா. சர்வதேச சாசனத்தின் முதலாவது ஷரத் கூறுவதாவது:-

``அனைத்து மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் அவர் கள் தங்களின் அரசியல் அந்தஸ்தை சுதந்திரமாகத் தீர்மானிக்கின்றனர். அவர்களது பொருளாதார, சமூக, கலாச்சார மேம்பாட்டை சுதந்திரமாகத் தொடர்கிறார்கள்.

இத்தகைய சுயநிர்ணய உரிமை ஐ.நா. அமைப்பால் தெற்கு சூடான் மக்களுக்கு அளிக்கப் பட்டது. சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடு தலை இயக்கத்துக்கும் 1983 முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 20 ஆண்டு உள்நாட்டு யுத்தத்தில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 2005 ஆம் ஆண்டு கையொப்ப மிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பகுதியாக இருந்த அய்.நா. அமைப்பால் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட ஒட்டுமொத்த அமைதி ஒப்பந்தத்தில் தெற்கு சூடான் மக்களுக்கு பொதுவாக் கெடுப்பு என்பதும் சேர்க்கப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று வெற்றிகரமாக நடை பெற்ற பொதுவாக்கெடுப்பிற்கு; அய்.நா. அமைப் பின் பல்வேறு துணை அமைப்புகள் காரணமாக இருந்தன. தெற்கு சூடான் மக்கள் மிகப் பெரும்பான் மையாக -  98.83 சதவிகிதம் அளவிற்கு - சுதந்திர மான தெற்கு சூடான் குடியரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சுயநிர்ணய உரிமைக்கான இதுபோன்ற வாக் கெடுப்புகள் இதர பல நாடுகளிலும் நடத்தப்பட் டுள்ளன. போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி களில் அமைதியும், சகஜ நிலையும் திரும்ப வேண்டு மென்றால் அய்.நா. அமைப்பு தலையிட்டு இலங்கைத் தமிழர் கள் தங்களது அரசியல் எதிர் காலத்தை தீர்மானித்துக் கொள்ள வழிவகுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோரிடையே பாரபட்சமற்ற பொதுவாக் கெடுப்பினை (Referen dum)  நடத்த வேண்டும்.

பரஸ்பரம் ஏற்புடைய அரசியல் தீர்வை நோக்கி எந்த முன்னேற்றமும் இல்லாததும், தமிழர்களை அவரது தாய்நாட்டை விட்டு வெளியேற்றும் குறிக்கோளோடு மிக விரைவாக நடந்து வரும் அரசு ஊக்குவிப்பு மக்கள் தொகை அடர்த்தி மாற்றங்கள் ஆகியவை பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் பாது காக்க நடவடிக்கை எடுக்க  இதுவே தருணமாகும். எனவே, அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செய லாளராகிய தாங்கள் இந்த மனுவினைப் பரிசீலித்து இதுதொடர்பாக தேவையான நட வடிக்கை எடுக்குமாறு நான் வேண்டுகிறேன்.

வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்காக அய்.நா. மேற்பார்வையின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. மற்றும் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர்களின் மனுவில் கூறப்பட் டுள்ளது.

(பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகள் இந்த மனுவோடு இணைத்துத் தரப்பட்டன.)

இணைப்பு

அய்.நா.துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் அளித்த மனுவுடன் குறுந்தகட்டில் இணைத்து அளிக்கப் பட்ட விபரங்கள் வருமாறு :-

இலங்கையில் 2008 - 2009 ஆகிய ஆண்டு களில் பணி யாற்றிய சர்வதேச அமைப்புகளின் நிர் வாகிகளில் வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியலு டன், விசா புதுப்பிக்கப்படாததால் வெளியேற்றப் பட்டோரின் பட்டியல்,

2004 ஏப்ரல் முதல் 2009 மார்ச் வரையில் கொல் லப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் தினர் 44 பெயர்கள் அடங்கிய  பட்டியல்,

மனித உரிமை கண்காணிப்பின் உதவியுடன் 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரை தாக்கப் பட்ட மருத்துவமனைகளின் பட்டியல், செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு வின் உதவியுடன் தாக்கப்பட்ட மருத்துவமனை களின் பட்டியல், போரின் காரணமாக இலங்கையில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் ஏற்பட்ட சேத விபரங்கள், பாதிக்கப் பட்ட பேராயர்களின் பட்டியல், 2008 - 2009 ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட  அல்லது சீர் குலைக்கப்பட்ட கிறிஸ்துவ ஆலயங்களின் பட்டி யல் இணைக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன தமிழர்கள் - ஈராக்கிற்குப் பிறகு அதிக அளவில் காணாமல் போனவர்கள் இலங்கை வாழ் தமிழர்கள்தான், 2012 பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வரை காணாமல் போன தமிழர் களின் எண்ணிக்கை 12,460 ஆகும். 2009 மே மாதம் சரணடைந்ததற்குப் பின்னர் காணாமல் போன தமிழர்களின் எண்ணிக்கை என்பது, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் கணக்குப்படி 20, ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி 32, அதுவும் தவிர 1379 காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் உள்ளன. (காணாமல் போனவர் களில் 21 பேர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட் டுள்ளனர் என்றும், 1028 பேர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது,)

இதுவும் தவிர இணைய தள உதவியுடன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன வர்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, இலங்கை உள்நாட்டுப்போரில் கண வனை இழந்த மனைவிகளின் பட்டியல் - அரசு தெரி வித்த புள்ளி விவரப்படி;

வவுனியாவில் 3989 பேரும், முல்லைத் தீவில் 3364 பேரும், கிளிநொச்சியில் 6044 பேரும், யாழ்ப் பாணத்தில் 2451 பேரும், மன்னாரில் 3233 பேரும், மட்டக்களபபில் 26965 பேரும், அம்பாராவில் 23 பேரும் திரிகோணமலையில் 14435 பேரும் ஆக மொத்தம் 60,716 பேர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல், அனாதை இல்லங்களில்  உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, வவுனியாவில் 1095 பேரும், முல்லைத் தீவில் 80 பேரும், மன்னாரில் 309 பேரும், கிளிநொச்சியில் 343 பேரும் என மொத்தம் 1,827 பேர் ஆவர்!

இதுதவிர கிழக்கு மாகாணப் பகுதியில் 46 ஆயிரம்  கைம்பெண்களும், வடக்குப் பகுதியில் 40 ஆயிரம் கைம்பெண்களும் என 86 ஆயிரம் கைம் பெண்கள் உள்ளதாக மகளிர் துறை உதவி அமைச்சகத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன், குழந்தைகள் நலம் மற்றும் மகளிர் துறையின் மூலம் கிடைத்த தகவலின்படி கிழக்கே 42 ஆயிரத்து 565 கைம்பெண்களும், வடக்கே 19 ஆயிரத்து 936 கைம்பெண்களும் ஆக 59 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கைம்பெண்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம்  தீபகற்பத்தில் 29 ஆயிரத்து 742 கைம்பெண்கள் உள்ளதாக ஐக்கிய நாட்டு மன்றத் தின் அறிக்கை தெரிவிக்கிறது.  அதன்படி20 வயதுக்கும் குறைந்தவர்கள் 89 பேர், 21-30 வயதுக்கும் குறைந்தவர்கள் 1190 பேர், 40 வயதுக்கும் குறைந்த வர்கள் 2945 பேர், 50 வயதுக்கு குறைந்த வர்கள் 4506 பேர், 60 வயதுக்கும் குறைந்தவர்கள் 7034 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13,978 பேர்.

இலங்கை வட - கிழக்குப் பகுதியில் உடல் ஊன முற்றவர்களின் எண்ணிக்கை என்பது 8 பகுதி களில் 16,325 பேராகும்.  அதுதவிர, 2010 ஆம் ஆண்டு 14,324 ராணுவ வீரர்கள் உடல் ஊனமுற்ற தாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதவிர, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதன் விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2011 நவம்பர் 30 ம் தேதி கணக்குப்படி 355 பேர் கைதாகியுள்ளனர்.242 பேர் பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 ஆம் ஆண்டு மட்டும் 6,480 ஆகும். அத்துடன் பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின எண்ணிக்கையும் விரிவாக இணைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கையும் விளக்க மாகத் தரப்பட்ட பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இத் துடன் சென்னையில் நடைபெற்ற `டெசோ மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 11 தீர் மானங்களின் நகல்கள் இணைக்கப்பட்டன.

- நன்றி: முரசொலி: 5.11.2012


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...