Friday, October 26, 2012

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்ப்பனர் ஆதிக்கம்


இடஒதுக்கீடு புறக்கணிப்பு, ஒடுக்கப்பட்டவர் மீது ஓரவஞ்சனை
54 எம்.பி.க்கள் புகார் மீது பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுத்திடுக!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


தலைநகர் டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான - மிகப் பெரிய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் - மருத்துவக் கல்லூரி இணைந்த அமைப்பு எய்ம்ஸ்  என்ற அமைப்பில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், 

குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு நிரப்பப்படாமல் வேண்டுமென்றே நீண்ட நாள்களாக அவை காலியாக வைக்கப்பட்டுள்ளன என்ற புகாரும், 

ஏற்கெனவே பதவிகளில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்ற அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் மிகுந்த வேறுபாடு காட்டி, அங்கு பொறுப்பில் உள்ள உயர்ஜாதி அதிகாரிகள், மருத்துவர்கள்  நடந்து கொள்கிறார்கள் என்றும் குற்றஞ் சுமத்தி, 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) கையெழுத்திட்டு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். 

சமூகநீதிக்கு எதிராக இன்னமும் - சட்ட ரீதியான கட்டாயங்கள் விதிகளாக இருந்தபோதிலும், அவைகளைச் சட்டை செய்யாத செய்ய மனமில்லாத ஆதிக்க உயர்ஜாதி வர்க்க அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க, வரும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் இந்த எம்.பி.க்கள் ஒரே குரலில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்று தனித்தனியாகக்கூட இல்லாது ஒன்றுபட்டு, குரல் கொடுத்து சமூக நீதியை வென்றெடுக்க ஆயத்தமாக வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள் ஆகும்!

இடஒதுக்கீட்டை சட்டப்படி செயல்படுத்தாதவர்களுக்கு சிறைத் தண்டனை உள்பட தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற திரு. சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்தாதவரை சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தன் நச்சு வேலையை நடத்திக் கொண்டு தானே இருக்கும்.

தேவை உடனடி கவனம்!

சமூகநீதியை உதட்டளவில் உச்சரிக்காது, உண்மையிலே உள்ளத்தில் நிறுத்தும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தத்தம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, இதில் சிறப்புக் கவனஞ் செலுத்திட ஆணையிட வேண்டியது அவசர - அவசியம் ஆகும்! 

ஏற்கெனவே திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது அங்கு பச்சைப் பூணூல் மனப்பான்மையோடு சமூகநீதிக்கு எதிராக நடந்து கொண்ட வேணுகோபால் என்ற ஒரு பார்ப்பன இயக்குநரான டாக்டரை மாற்றி, ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமித்ததை எதிர்த்து  பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் மற்ற உயர் ஜாதி ஊதுகுழல்களும் நீதித்துறையில் ஒரு சிலர்கூட எப்படியெல்லாம் நடந்து கொண்டனர் என்பது மறக்க முடியாத ஒன்றாகும்! 

சுதந்தரம் வந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அக்கிரமம், அப்பட்டமான சமூக அநீதி தலைநகரின் மிகப் பெரிய மருத்துவமனையிலேயே (மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படும் நிறுவனம்) இப்படி பார்ப்பன மற்ற உயர்ஜாதியினர் பண்ணையமாக நடைபெறுகிறது என்றால் மற்ற பொதுத் துறை நிறுவனங்களில் பச்சையாக நடைபெறும் இடஒதுக்கீட்டு முறைக்கு மாறான செயல்பாடுகள் பற்றி விளக்கவும் வேண்டுமா? 

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குமுறல் கடிதத்தின்மீது உடனடியாக அவசர நடவடிக்கைகளையும், பரிகாரத்தையும் எடுக்க முன்வர வேண்டியது மிக மிக அவசியமாகும்.
இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, பிச்சை அல்ல; தர்மம் போடுவதும் அல்ல. 

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட வாக்காளர்களான குடி மக்களின் விலைமதிப்பற்ற, பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். வரும் நாடாளுமன்ற தொடரில் இந்த அநீதியை மாற்றிட ஓங்கிக் குரல் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, ஒன்று திரளுவீர்!


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...