Wednesday, October 31, 2012

போர் சின்னமா?


இலங்கைத் தீவில் உண்மையான பூர்வ குடிகளான தமிழர்களை முற்றாக அழித்துத் விட்டு, அது சிங்கள இன நாடாக முற்றாக மாற்றும் ஒரு வன்முறை வெகு காலமாகவே நடந்துவருகிறது.
அதில் ஒரு உச்சக் கட்டம்தான் மூன்றாண்டு களுக்கு முன் ராஜபக்சே தலைமையில் அமைந்த சிங்கள இனவாத அரசின் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட போர் ஆகும்.
வாழ்வுரிமைக்காக இலங்கைத் தீவில் சுதந்திரப் போர் நடத்தி வந்த அந்தத் தீவுக்குரிய மக்களை அழிக்கும் வேலையைச் செய்தது -  சிங்கள இனவாத அரசு!
சீனா, ருசியா, பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளின் இராணுவ உதவி, ஆயுதங்களைத் துணையாகக் கொண்டு தமிழின அழிப்பு வேலையில் (Genocide)
இறங்கி அதில் பெரும் அளவு முடிந்தும் விட்டது.
அழிக்கப்பட்ட தமிழர்கள்போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வுரிமை சுயமரியாதையுடன் காப்பாற்றப்படுவதற்கான முயற்சிகள் உலகெங்கும் முகிழ்த்துள்ளன.
அதில் ஒரு முக்கியமானது இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது தான் டெசோவாகும்.
இன்றைய நிலையில் இந்தத் திசை நோக்கி தான் காய்கள் நகர்த்தப்பட வேண்டியுள்ளன.
இதனைத் திசை திருப்பும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இயங்கும் சில அமைப்புகள், டெசோமீது விமர்சனக் கணைகளைத் திருப்பியுள்ளன.
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி  அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அனைத்துத் தரப்பினருக்கும் கனிவான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். முதலில் நம்மிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உறுதியாகச் செய்து கொள்வோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு டெசோவையும், அதன் தலைவரையும் பலகீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பல அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் நடந்து கொண்டு வருவது, டெசோவைக் கேலி செய்வது என்பதெல்லாம் சிங்கள இனவாதத்தின் ஊற்று ராஜபக்சேக்குக் கூடுதல் பலத்தை கொடுக்கவே பயன்படும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியலைக் கொண்டு வந்து திணித்து, காழ்ப்புணர்ச்சியோடு மேடைகளைப் பயன்படுத்தினால், நமது நாட்டில் உள்ள பரம்பரை எதிரிகள் சிண்டு முடியும் வேலையில் இறங்குவார்களே - அதற்கு இடம் கொடுக்கலாமா என்கிற பொருள் நிறைந்த ஆழமான கருத்தை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.
டெசோவின் தலைவரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் இரும்பு மனப்பான்மையோடு எதிர்வாதம் செய்து கொண்டிருந்த - அதிகாரம் கிடைத்ததும் ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் பல வகைகளிலும் ஒடுக்கிய ஒருவருடன் நெருக்கம் காட்டியது - மன்னிக்க முடியாத, சீரணித்துக் கொள்ளவே முடியாத கீழான போக்கே!
ராஜபக்சே எந்த எல்லைக்குப் போயிருக்கிறார்? ஏதோ இன்னொரு நாட்டோடு யுத்தம் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக போர் நினைவுச் சின்னம் நிறுவியதுபோல சொந்த நாட்டு மக்களான தமிழர்களைக் கண் மூடித்தனமாக - பல நாட்டு இராணுவ உதவியுடனும், ஆயுதங் களுடனும் அழித்தொழித்ததற்காக போர் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதை உலகம் ஏற்குமா?
கொலைக் குற்றவாளியாக அய்.நா.வால் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலகில் ஓங்கி ஒலிக்கும் கால கட்டத்தில் ராஜபக்சே இன்று நிறுவியுள்ள வெ(ற்)றிச் சின்னம் அவருக்கு எதிராக அமையப் போகும் என்பதில் அய்யமில்லை.
சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அதற்கு மேலும் அடி எடுத்துக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...