Friday, October 19, 2012

புதிய வக்கீல்கள் புறப்படுகிறார்கள்


ராம் ஜெத்மலானி வக்கீல் தொழிலோடு நிற்க வேண்டும். அந்தத் தகுதியை - திறமையை தேவையில்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாத இடத்தில் திணிக்க முயன்றால் கடைசியில் உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும் என்கிற பரிதாப நிலைக்குத்தான் ஆளாக நேரிடும்!
ஏற்கெனவே ஊர் சிரித்த பிரேமானந்தாவுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து வாதாடி, கடைசியில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கித் தந்ததுதான் மிச்சம்! தொழிலிலேயே இந்த நிலை என்றால், மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினை யில் மூக்கை நுழைத்தால், எதிர்விளைவுதான் ஏற்படும்.
பி.ஜே.பி. ஆட்சியில் அளிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியைக்கூட வாய்தா காலத்துக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இவரால்.
இந்த நிலையில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய முன் வந்திருக் கிறார்.
இவராகச் சொல்லுகிறாரா அல்லது இவருக்குப் பின்னால் இருந்து யாராவது இயக்குகிறார்களா என்று தெரியவில்லை.
ஒரு கேள்விக்கு முதலில் ராம்ஜெத்மலானி பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வைக்கப்படுகின்ற கேள்வி இது. ஏனென்றால் ஜெத்மலானி பிரபல வழக்குரைஞர் அல்லவா!
அகமதாபாத்தை யடுத்த நரோடா பாட்டியா எனும் இடத்தில் 35 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட மொத்தம் 97 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் (28.2.2002) பிஜேபியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாயாகோத் னானிக்கு 28 ஆண்டுகள் கடுஞ்சிறை விதிக்கப் பட்டுள்ளதே - இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறாரா குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி?
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜோத் சனா யாக்னிக் குஜராத் முதல் அமைச்சர் மோடி அரசுமீது வைத்துள்ள குற்றச்சாற்று மிக மிக முக் கியமானது. இந்த மாயா கோத்னானியை வழக்கி லிருந்து காப்பாற்ற முதல் அமைச்சர் மோடி அரசு தீவிரமாக முயன்றுள்ளது என்று கூறியுள்ளாரே!
மாயா கோத்னானிக்கு அப்போதைய விசா ரணை அமைப்புகள் அனைத்தும் (உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கு முன்னே) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்புக்குக் காரண மானவர்களைக் காப்பாற்றும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத் னானியின் பெயர்கூட இந்தக் குற்றத்தில் இடம் பெறாதபடி பார்த்துக் கொள்வதில் மிகக் கடுமை யாக முயன்றுள்ளனர் என்று நீதிபதி கூறி இருக்கிறார் என்றால், முதல் அமைச்சர் மோடியின் தலைமை எத்தகையது என்பது விளங்க வில்லையா? இவ்வளவுக்கும் மோடிதான் உள்துறைக்கும் பொறுப்பு! ஒரு நீதிபதியின் இந்தத் தீர்ப்பை அறிந்தபிறகும் ஒரு பிரபல வழக்குரைஞர் (ராம்ஜெத்மலானி) அந்தக் குற்றவாளியைப் பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைக்கிறார் என்றால், இவரையும் மோடியின் பட்டியலில் சேர்க்கத்தான் வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாதா?
2002இல் கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொன்று குவிக்கப்பட்டுள் ளனர்.
ஒரு மாநிலத்துக்குள் நடைபெற்ற இந்தக் கொடூரம், இந்தியா முழுமையும் நடைபெற வேண்டும் என்று கருதுகிறவர்கள், விரும்பு பவர்கள் தாம் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புபவர்களாக இருக்க முடியும்.
இன்னொன்றுக்கும் ஜெத்மலானி பதில் கூற வேண்டும். குஜராத்தில் சிறுபான்மையினர்மீது நடத்தப்பட்ட நர வேட்டையைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பேயி என்ன சொன்னார்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று கேட்டாரே, நினைவிருக்கிறதா?
ராம்ஜெத்மலானி போன்றவர்கள் சமூகப் பொறுப்போடு கருத்துக்கூற முன் வருவார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...