Saturday, September 8, 2012

யார்தான் பொறுப்போ?


குஜராத் மாநிலம் நரோடா பாட்டியாவில் முசுலிம்களுக்கு எதிராக நரேந்திரமோடி முதல் அமைச்சராக இருந்த பிஜேபி ஆட்சியில் வன்முறை ஏவி விடப்பட்டு ஒரே இடத்தில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் மோடி அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயபென் கோட்நானி உட்பட 32 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். பெண் அமைச்சர் உட்பட 32 பேர்களுக்கு 28 ஆண்டு தண்டனை என்றால், குஜராத் விசுவ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கிற்கு வாழ்நாள் முழுமையும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருக்கும் நரேந்திர மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இதற்குப் பொறுப் பேற்று மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வெடித்துக் கிளம்பியுள்ளது.
ஆனால் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் என்ன சொல்லுகிறார்? நீதிமன்றம் மோடியைக் குற்றப்படுத்தவில்லை; மோடிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார் என்று இந்த புதிய வக்கில் வக்காலத்துப் போட்டு எழுதுகிறார்.
நரேந்திரமோடி ஆட்சியில்தான் 2000 பேர்களுக்கு மேலான முசுலிம்கள் குழந்தைகள் உட்பட படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்? மோடி இடத்தில் பிஜேபி சாராத ஒருவர் இருந்திருந்தால் சோவின் பேனா இப்படி எழுதுமா?
அவர் சொல்லுகிற விவாதப்படி வைத்துக் கொண்டாலும் நீதிமன்றம் மோடிமீது குற்றம் சொன்னதே கிடையாதா? நீரோ மன்னன் என்று மோடியை உச்சநீதிமன்றம் சொன்ன தற்கு மேல் வேறு என்ன சொல்ல வேண்டும்?
குஜராத்துக்குள் வழக்குகள் நடத்தப்பட்டால் நீதி கிடைக்காது என்று கூறி, பல வழக்குகளை உச்சநீதிமன்றம் மகாராட்டிர மாநிலத்துக்கு மாற்றியதே - அதன் பொருள் என்ன?
முன்னாள் பெண் அமைச்சர் தண்டிக்கப் பட்ட வழக்கில்கூட நீதிபதி ஜோத்ஸ்நா என்ன கூறியுள்ளார்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற வன்முறையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு ஏற்பட்ட புற்று நோய் என்று குறிப்பிடவில்லையா? இது அம்மாநில ஆட்சியைப் பற்றிச் சொல்லப் பட்டதில்லையா? குஜராத்தில் நடத்தப்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத 28 பேர்களின் உடல்களைத் தோண்டி எடுக்கப் பட்டது தொடர்பாக சமூக  சேவகர் டீஸ்டா செட்டால் வாட்மீது மோடி அரசு தொடுத்த வழக்குப்பற்றி உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? அவரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்ட வழக்கு என்று குஜராத் மாநில அரசை சாடவில்லையா? குஜராத் அரசு என்றால் முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று சோ சொன்னாலும் சொல்லு வார். கண் மூடித்தனமாக - இந்துத்துவா வெறியரை ஆதரிப்பது என்று முடிவு செய்து கொண்ட பிறகு, கண் மூடித்தனமாக எழுதுகிறார் என்பதுதான் உண்மை.
ஊழல் வழக்கை விசாரிக்கக்கூடிய லோக் அயுக்தாவிற்கு நீதிபதியை ஆளுநர் நியமித்தது தொடர்பான பிரச்சினையில் குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன கூறினார்?
மக்களாட்சியின் சாரமான சட்டத்தின் ஆட்சியில் உள்ள நம்பிக்கையை சுக்கு நூறாக நொறுக்கி விட்டது என்று கூறிடவில்லையா?
குஜராத்  மாநிலத்தில் நடைபெற்ற மதக் கலவரம் வரலாறு காணாத பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதற்கு அம்மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், யார்தான் பொறுப்பாம்? அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கடவுள்மீது பழி போட்டாலும் போடக் கூடியவர்கள்தான் - இந்துத்துவாவாதிகள்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...