Wednesday, September 12, 2012

இறைவனின் தலையெழுத்து மனிதனின் கையில்!

இறைவனின் தலையெழுத்து மனிதனின் கையில்!


மனிதன் எல்லாருடைய வாழ்க்கையையும் அவன் தலையெழுத்தாக எழுதி வைத்து இருக்கிறான் என்றும் இதை யாராலும் மாற்றவோ வெல்லவோ முடியாது என்றும் ஆன்மீகவாதிகள் சொன்னார்கள். இதுதான் உண்மை என்றால் பிறகு கோயிலுக்கு யார் வருவார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ, பரிகாரம் செய்து கொண்டால் பாதிப்பில் இருந்து கொஞ்சம் தப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சொன்னார்கள்.
விதி என்றால் பிரமாதமாக அப்படி ஒன்றும் இல்லை. ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடந்து விட்டால் அல்லது அதற்கு சரியான விளக்கம் சொல்லத் தெரியாவிட்டால் அதற்குப் பேர்தான் விதி.
ஒருவருக்கு ஆர்ட் அட்டாக் வந்து திடீரென்று இறந்து போய்விட்டார். அவர் மனைவியிடம் எந்த வைத்தியரிடம் வைத்தியம் பார்த்தீர்கள் என்று கேட்டுவிட்டு ஆளாளுக்கு ஒரு வைத்தியர் பெயரைச் சொன்னார்கள். அந்த அம்மா சலித்துப் போய் யாருகிட்ட பார்த்து என்னங்க செய்ய? விதி முடிஞ்சிட்டுது போயிட்டாரு என்று சொன்னதும் அதற்குமேல் பேச முடியவில்லை.
விதியின் பெயரைச் சொல்லி இப்படி ஒரு பிரச்சினையை எளிதில் முடித்துவிடலாம்.
ஒருவர் ஊருக்குப் பயணம் செய்கிறார். எதிர்பாராத விதமாக பேருந்து விபத்துக்குள்ளாகி இறந்துவிடுகிறார். இது விதியா? அல்ல. இதற்கு பெயர் விபத்து.
ஒரு பேருந்தில் அறுபதுபேர் இருக்கிறார்கள். விபத்து ஆனால் இருபது பேர் சாகிறார்கள். நாற்பதுபேர் காயத்துடன் பிழைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் விதி இல்லாமல் வேறு என்ன என்று எண்ணத் தோன்றுகிறதா? பேருந்து விபத்து. ஆனால் முன்னால் இருப்பவர்களுக்கும் பின்னால் இருப்பவர்களுக்கும் அடி பலமாக இருக்கும். இது விபத்துக்குள்ளான கார் இன்னொரு காரை மோதியதா அல்லது இன்னொரு கார் இதை வந்து மோதியதா என்பதைப் பொறுத்து இது சற்று மாறுபடும். அடிபடுவது தலையிலா, உடம்பிலா என்பதைப் பொறுத்தும், வயது ஏற்றத்தாழ்வைப் பொறுத்தும் இந்த வித்தியாசம் ஏற்படுகிறதே ஒழிய விதியினால் அல்ல.
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு விசித்திரமான விபத்து ஒன்று நடந்தது. வேகமாக ஓடிக்கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் சடன் பிரேக் போட்டார். ஓட்டுநருக்குப் பக்கத்தில் கண்ணாடிக்கருகில் ஒருவர் உட்கார்ந்திருந்ததால் பிரேக் போட்ட வேகத்தில் அவர் கண்ணாடியைப் பிய்த்துக் கொண்டு வெளியே போய் வி-ழுந்து அந்தப் பேருந்தின் சக்கரத்திலேயே நசுங்கி மாண்டார். ஓட்டுநர் சடன் பிரேக் போடும்போது இந்த நபர் எந்தப் பற்றுதலும் இல்லாமல் தனியாக அமர்ந்திருந்ததுதானே காரணம்? விதியினாலா இவர் இறந்தார்?
இதுபோல் எந்த விபத்து நடந்தாலும் அதற்குக் காரணமாய் ஏதாவது இல்லாமல் இருக்காது. காரணம் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை என்றால் விதி என்று முடித்துவிடுவோம்.
இறைவனை வணங்குவதால் பரிகாரம் கிடைக்கிறது என்றால் கோவிலுக்குப் போனவர்கள் ஏன் விபத்து வந்து சாகிறார்கள்? இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் தன்னுடைய முயற்சியில்லாமல் - அல்லது முயற்சி தோல்வியுற்று பிறருடைய சூழ்ச்சி இல்லாமல் அல்லது சூழ்ச்சி வெற்று பெற்று தானாக நடக்கும் ஒரு இயற்கை விபத்தே விதி என்று விரித்துச் சொல்லலாம்.
தலைவிதியை அவனவன் தனக்குத்தானே நிர்ணயித்துக் கொள்கிறானே ஒழிய இறைவன் தலையில் எழுதி வைக்கவில்லை.
நாட்டில் ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. சிலர் சிவ பக்தர்களாகவும், சிலர் விஷ்ணு பக்தர்களாகவும் இருக்கிறார்கள். சிலருக்கு முருகன் என்றால்தான் பிடிக்கிறது. கடவுளைக்கூட அவரவர் இஷ்டத்திற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். மகாத்மா காந்திக்கு இராமனைப் பிடிக்கிறது என்றால் அம்பேத்கருக்குப் புத்தரைத்தான் பிடிக்கிறது.
ஒருவன் +2 படிக்க துவங்குமுன்பே தான் எந்தத் துறைக்குப் போகவேண்டும் என்று தேர்ந்தெடுத்து விடுகிறான்.
ஒரு சினிமாவுக்குப் போகவேண்டும் என்றால்கூட யோசித்துப் பார்த்துத்தான் போகிறார்கள்.
ஒரு ரயிலில் பிரயாணம் செய்ய நேரும்போது முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதா? இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்வதா என்பது கூட அவரவர் விருப்பத்தையும் வசதியையும் பொறுத்தது தானே.
இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவருடைய வாழ்க்கையை அவரவர்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்த உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது.
ஜாதகம் பார்த்து பெரியவர்களின் முன்னிலையில் தலைவிதிப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமணங்களைக்கூட விவாகரத்து மூலம் விலக்கிக் கொள்ளும்போது தலைவிதி மனிதனை எங்கே தடுக்கிறது.
மனிதன் முயற்சியில் வெற்றி தோல்விகள் சகஜம். இதைவைத்து விதி இப்படித்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஒருவருக்கு லாட்டரியில் லட்சம் ரூபாய் விழுகிறது. அவரை அதிருஷ்டசாலி என்றால் ஒன்பது சீட்டு வாங்கி இருந்தால் ஒன்பது சீட்டிலும் பரிசு விழவேண்டுமே. ஏதாவது ஒன்றில் பரிசு விழுந்தால் தானாக விழுந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?
இறைவன் கருணையின் வள்ளல், கேட்டதெல்லாம் கொடுப்பார் என்கிறார்கள். தலைவிதிப்படிதான் நடக்கும் என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு போனால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை இல்லாமல் வேறு என்ன?
இன்று உலகத்தில் உள்ள பிற ஜீவராசிகளின் தலையெழுத்து மனிதன் கையில்தான் இருக்கிறது.
ஒரு யானை காட்டில் உலவிக் கொண்டு இருக்கிறது. மனிதன் அதைப் பிடித்து வருகிறான். அந்த யானையைக் கோவிலில் கட்டிவைப்பதா? சர்க்கஸில் வித்தை காட்ட வைப்பதா? தெருவில் அய்ம்பது பைசாவுக்கு பிச்சை எடுக்க வைப்பதா என்ற யானையின் தலைவிதியை மனிதன்தானே நிர்ணயிக்கிறான்?
இத்தனை எதற்கு? இறைவனின் தலைவிதியே மனிதன் கையில்தானே அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறது. இறைவனுக்கு நான்கு தலை இருக்க வேண்டுமா? ஆறு முகம் இருக்க வேண்டுமா? என்பதெல்லாம் கூட மனிதன்தானே நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது.
ஒரு விநாயகனின் தலைவிதி அவர் அரசமரத்தடியில் இருக்க வேண்டுமா? ஆலயத்தில் இருக்க வேண்டுமா என்பதைக் கூட மனிதன்தானே நிர்ணயிக்கிறான்.
புதிதாக கோவில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதா? இல்லை இருக்கிற கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று இடித்துத் தள்ளுவதா? என்ற தலைவிதி கூட மனிதன் கையில்தானே இருக்கிறது.
விஞ்ஞானத்தில் மனிதன் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து வருகிறான். விதியை வெல்லக் கூடிய ஆற்றல் மனிதனுக்கு முக்கால்வாசி வந்துவிட்டது.
விதி என்ற சொல்லுக்கு இயற்கை அதாவது இயல்பான தன்மை என்று ஒரு அர்த்தம் உண்டு.
வெயில் சுடும் என்பது விதி. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்... காலுக்குச் செருப்புப் போட்டுக் கொண்டு கையில் ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு வெயிலின் கடுமையை வென்று விடுகிறான். இதுதான் மதி.
உலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் எதையோ தின்று உயிர் வாழ வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் மனிதன் காய்கறிகளைச் சமைத்து அறுசுவையாக ஆக்கி நாவுக்கு ருசியாக உண்கிறான் அல்லவா இதுதான் மதி.
ஆணும் பெண்ணும் கூடினால் குழந்தை பிறக்கும் என்பது விதி. வேண்டும் என்றபோது குழந்தை பெற்றுக் கொள்வதும், வேண்டாம் என்றால் தடுத்து விடுவதும் மதி.
விதியை மனிதன் தனது மதியால் வென்று வருகிற பட்டியலின் வரிசை நீண்டு கொண்டே போகும்.
இறைவனின் தலையெழுத்தையே நிர்ணயித்துக் கொண்டிருக்கும் மனிதர்களே, உங்கள் தலையெழுத்தை நீங்களே விரும்பியபடி எழுதிக் கொள்ளலாம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...