Thursday, September 6, 2012

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு (1)


தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது குறித்து ஒரு சர்ச்சை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
ஒரு ஆச்சரியமான விடயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்வதற்காக 77 ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இப்பொழுது அலகாபாத் உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் ஏதோ ஒரு வகையில் அந்தச் சட்டத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு முடக்குவது ஏன்? முடக்கவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு வகையாக விளம்பரப்படுத்தப்படுவதையும் கவனிக்கவேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முத லமைச்சராக இருந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மீதுதான் இந்தத் தீர்ப்புகள்.  உச்சநீதிமன்றம் 77 ஆவது சட்டத் திருத்தத்தைச் செல்லாது என்று சொல்லிவிட்டதா? அப்படியே சொல்லி விட்டதாகக் கூற முடியாது. வேறு எப்படி சொல்லியிருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் பொழுது அதற்கான புள்ளி விவரங்களும் தர வேண்டும் என்றே கூறியுள்ளது உச்சநீதிமன்றம்!
இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் கூட இதுபோன்று புள்ளி விவரங்களைக் கேட்டதுண்டு.
பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதற்குப் புள்ளி விவரங்களைக் கூறுவது ஒன்றும் கடினமானதும் அல்ல. என்றாலும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு அளிப்பது நடைமுறை சாத்தியமற்றது, தேவையற்றது.
தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று எழுதும் கல்கி இதழ்கூட (9.9.2012, பக்கம் 85) மத்திய அரசில் உள்ள 93 செயலாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்று தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டுவிட்டதே!
மத்திய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 24 உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடும், மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடும் அளிக்கப்படவேண்டும்.
ஆனால், உண்மை நிலவரம் கலவரமாக அல்லவா இருக்கிறது. 740 விரிவுரையாளர் இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட இடங்களோ வெறும் 399. அதேபோல மலைவாழ் மக்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய விரிவுரையாளர் பதவிகளில் இன்னும் நிரப்பப்படாத இடங்கள் 172.
ரீடர் பதவிகளை எடுத்துக்கொண்டால், எஸ்.சி., எஸ்.டி.,க்கு நிரப்பப்படாத இடங்கள் 84 விழுக் காடாகும்.
பேராசிரியர் பதவிகள் என்று எடுத்துக் கொண்டாலும் எஸ்.சி., எஸ்.டி.,க்கான நிரப்பப்படாத பதவிகள் 92 விழுக்காடு.
இவ்வளவு வெளிப்படையாகப் புள்ளி விவரங்கள் இருக்கும்பொழுது, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடா என்று புருவங்களை உயர்த்துவதும், இதனால் முன்னேறவேண்டும் என்ற உணர்ச்சியை அழித்து விடும் என்று இதோபதேசம் செய்வதும் எந்த அடிப்படையில்?
உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை. தக்க புள்ளி விவரங்களை எடுத்துக்கூறித் தாராளமாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பதே தீர்ப்பின் நிலை.
புதிய சட்டத் திருத்தம் தேவைப்படும்பொழுது எல்லாத் துறைகளிலும் உள்ள புள்ளி விவரங்களையும் இணைத்து, மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வழியில்லாத வகையில் அரசமைப்புச் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்த்துவிட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு மறுபடியும் பார்ப்பன உயர்ஜாதி சக்திகளும், ஊடகங்களும் தங்களுக்கே உரித்தான நச்சு விதைகளைத் தூவ ஆரம்பித்துவிட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...