Wednesday, August 8, 2012

அன்னா ஹசாரே ஆட்டம் முடிந்தது!


திடீரென்று காந்தி குல்லாய் அணிந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் ஊழலை ஒழிக்கப் போகிறேன் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று கூவிக் கொண்டு ஓடி வந்தார். இப்படிப்பட்ட உத்தம புத்திரனைத்தானே வரலாறு தேடிக்கொண்டிருந்தது என்ற பாணியில் இந்த நாட்டு ஊடகங்கள் எல்லாம் தூக்கிப் பிடித்து வித்தைகள் காட்டின.
நாட்டில்தான் ஊழல்கள் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கின்றனவே. இவற்றின் மீது வெறுப்பு கொண்ட வெகு மக்களும் இந்த மனிதரின் குரலைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தனர்.
ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் - பிரதமர் உட்பட விசாரிக்கப்படுவதற் கான அதிகாரம் உள்ள ஒரு மய்யம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உண்ணாவிரதமும் இருக்க ஆரம்பித்தார். காந்தி குல்லா போட்டவராயிற்றே - அவர் பாணியில் மக்களைக் கவர வேண்டாமா? மக்களும் கூட ஆரம்பித்தனர். பெரும் கூட்டத்தைப் பார்த்த மனுசர், தான் இந்தியாவின் மிகப் பெரிய தலைவராக அப்பொழுதே ஆகிவிட்டதாக மனப்பால் குடித்தார்.
ஆனாலும் அவரின் அடையாளம் அவ்வளவு சீக்கிரம் வெளிப்பட்டுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்ணாவிரத மேடையை ஆக்கிரமித்துக் கொண்டவர்களோ ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்கள் சகிதம் மேடையின் பின் திரையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பயன்படுத்தும் பாரதமாதா படம்.
கிழிந்தது கஞ்சனூர் பஞ்சாங்கம்! விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்தன. இவரின் பூர்வோத்திரம் ஆர்.எஸ்.எஸ்.சில் தொடங்கப்பட்டது என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து விட்டது.
1983 இல் நானாஜி தேஷ்முக் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவரின் தலைமையில் ஹசாரே பணியாற்றினார் என்பதெல்லாம் படத்துடன் இந்தி நாளிதழில் வெளிவந்தது.
அதற்கேற்றாற்போல ஊழல் எதிர்ப்பு என்ற பீரங்கியை காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பக்கம் திருப்பினாரே தவிர, ஊழலின் உறைவிடமாக இருந்த பி.ஜே.பி. ஆளும் கருநாடகா போன்ற மாநிலங்கள் பக்கம் பராக்குக் கூடப் பார்க்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார் என்று  சொல்லித் தொலைத்துவிட்டார். போதும் போதாதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன்ராம் பகவத்  எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற பாணியில் செதிர் காயாக ஓர் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.
அன்னா ஹசாரேக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் தொடர்பு உண்டு; ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தும்படிச் சொன்னதே நாங்கள்தான்! என்று கோணிப் பைக்குள் பதுங்கி இருந்த பூனையை வெளியில் அவிழ்த்து விட்டுவிட்டார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா 10-11-2011)
தலைநகரில் ஜந்தர் மந்தரில் ஹசாரே மேற் கொண்ட உண்ணாவிரதத்துக்காகச் செலவழிக்கப் பட்ட தொகை ரூபாய் 50 லட்சம். இதற்காக பெரும் முதலாளிகளிடம் ரூபாய் 80 லட்சம் வசூலிக்கப்பட்டது என்ற தகவலும் அம்பலமானது.
அரசை நோக்கி அவர் வினாக்கணைகள் வீசியது போக, அவரை நோக்கி ஆயிரம் ஆயிரம் அம்புகள் துளைக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றிற்குச் சமா தானம் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது பரிதாபமே!
தனது அடுத்த கூடாரத்தை மும்பைக்கு மாற்றினார். மைதானம் இருந்ததே தவிர மக்களைக் காணோம்.
மறுபடியும் டில்லிக்கே சென்று உண்ணாவிரதம் என்று பாம்பாட்டி வித்தை காட்டினார். மக்களும் வரவில்லை; மத்திய அரசும் சமாதானம் பேச முன்வரவில்லை. நம் யோக்கியதை அவ்வளவுதான் என்று தெரிந்து கொண்ட ஹசாரேயும் - அவரைக் கைப் பொம்மையாக்கிக் குளிர் காய்ந்த அந்தக் குழுவும் சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்ற பாணியில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக சப்த நாடியும் அடங்கி, ஈனக்குரலில் பேச ஆரம்பித்துள்ளனர். இதில் அன்னா ஹசாரேக்கு உடன்பாடு இல்லையாம்! குழுவுக்குள்ளேயே முரண்பாடுகள்.
பண ஊழலை விட இந்தியாவில் சமூக அமைப்பே வருணாசிரமதர்மம் என்ற ஊழல் மேடையில்தான் கட்டப் பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் மூச்சு விடமாட்டார்கள். சுலபத்தில் விளம்பரம் கிடைப்பது பண ஊழலுக்குத்தானே! அதனை ஏணியாக்கி  அரசியல் பதவிகளைப் பிடித்து விடலாம் என்ற நினைப்புதான் பலருக்கும். இதற்கு ஹசாரே குழுவும் விதிவிலக்கல்லவே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...