Wednesday, August 15, 2012

உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!


டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.
மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.
இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,
தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன்  அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில்  இறங்கியது வேதனைக்குரியது.
நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.
இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற  விடை  சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.
அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்  இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.
மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை  வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.
நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில்  சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...