Tuesday, August 28, 2012

டெசோ தீர்மானத்தால் பலன் இல்லையா? அப்படியானால் ராஜபக்சே ஏன் அலறுகிறார்?


டெசோ தீர்மானத்தால் பலன் இல்லையா? அப்படியானால் ராஜபக்சே ஏன் அலறுகிறார்?
நாகை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வினா நாகப்பட்டினம், ஆக.27- டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பயன் ஏதும் இல்லை என்று சிலர் கூறு கிறார்களே - அப்படியானால் இலங்கை அதிபர் ராஜபக்சே ஏன் அலறுகிறார்? என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
நாகை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாகை அவுரித் திடலில் 26.08.2012 அன்று மாலை 6  மணியளவில் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் நாகை நகர தி.மு.க. செயலாளர் அ. போலீஸ் பன்னீர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். கீழையூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.சார்லஸ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இல. மேகநாதன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கே. பாண்டியன், வேளாங்கண்ணி நகர மன்றத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஈழத் தமிழர் இன்னல்கள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை பற்றி விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் விஜயா தாயன்பன் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கியும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாடலையும் பாடி உரையாற்றினார்.
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில், ஈழத் தமிழர் வாழ் வுரிமை பற்றிப் பேச முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆகிய இருவரை விட யாருக்கும் உரிமை இல்லை. இருவரும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லர். மாறாக செயல்படுத்திக் காட்டக் கூடியவர்கள்.
நாடாளுமன்ற குழுத் தலைவர் தி.மு.க. டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இயங்கோவன், தொல். திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் நானும் இலங்கை சென்று நமது சகோதரர்கள், சகோதரிகள் முள்வேலி முகாம்களுக்குள் படும் இன்னல்களைப் பார்த்து, மூன்று நாட்கள் தங்கி வீடியோ எடுத்த ஆதாரம் அனைத்தையும் கொண்டு வந்து டாக்டர் கலைஞர் அவர் களிடம் கொடுத்து, நம் சகோதரிகள் சொன்ன வார்த்தையான எங் கள் விடியலை ஏற்படுத் துவதற்கு மட்டும் கலைஞரிடம் சொல் லுங்கள் என்ற வார்த் தையைச் சொன் னோம்.
உடனே தமிழக முன்னாள் முதல்வர் இருந்த கலைஞர் அவர்கள் பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, 50,000 குடும் பங்களை குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தவர் தான் டாக்டர் கலைஞர் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள், சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.
தமிழர் தலைவர் உரை
இறுதியாக, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்க உரை, சிறப்புரை நிகழ்த்தியனார்.
அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் உலக நாடுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  அதை நாடகம் என்று சொல்லுபவர்கள் பார்வை பழுது உள்ளவர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் அவர்களைப் பற்றித்தான் கவலைப் படுவார்கள். இப்போது தான் டெசோ தீர்மானங்கள் உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
தமிழின அழிப்பு
தீவிரவாதம் என்று சொன்ன அமெரிக்கா, தீவிர வாத அழிப்பு என்று சொன்ன அமெரிக்கா கூட இப்போதுதான், இலங்கை அதிபர் ராஜபக்சே செய்தது தமிழின அழிப்புதான் என்று புரிந்து கொண்டுள்ளார். அய்.நா. சபை மூலம் அனைத்து நாடுகளும், மக்களும் தெரிந்து கொண்டனர்.  அய்.நா. அவை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்கு அளிக்க இந்திய அரசுக்கு அந்த அளவுக்கு அழுத்தம்  கொடுத்ததே டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.  இந்த வெற்றியின் மூலம் பெருமையைத் தேடித் தந்தவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் போர்ப்படைத் தளபதி ஏ.கே.எஸ். விஜயன் போன்றவர்கள்தான். ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு
டெசோ தீர்மானம் உப்பு, சப்பற்ற தீர்மானம் என்று சொல்கிறார்களே! அவர்களின் புத்திக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி அவர்களுக்குத்தான் பொருந்தும். யாரையும் விமர்சிக்க நான் இவ்வாறு சொல்லவில்லை.  அவர்களுக்கு இத்தகைய விமர்சனப் பார்வை கூடாது என்பதைக் கூறுவதற்காகத்தான் இதைச் சொல்லுகிறேன்.
டெசோ மருத்துவம்
டெசோ மாநாடு நடத்தப்பட்டது ஒரு நாடகம் என்று கூறுகிறார்களே- தேவையான நேரத்தில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் மருந்துதான் டெசோ. அந்த மருத்துவத்தைக் கலைஞரைத் தவிர வேறு யாரால் செய்ய முடிந்தது? அந்த தீர்மானங்களை விமர்சிப்பவர்கள் அதனையும் தாண்டி ஈழத் தமிழர்களுக்காகச் செயல்படட்டும்! தலை தாழ்த்தி மாலை போட்டு அவர்களை வரவேற்கிறோம்.
இந்த விமர்சனங்களைப் பார்ப்பன பத்திரிகைகளில் எழுதினால், பேசினாலாவது லாபம் கிடைக்கும்.
எங்களுக்கு மதம் மீது நம்பிக்கையில்லை.  பைபிளில் புரியாமல் செய்கிறார்கள். மன்னிக்கவும் என்று ஒரு வாக்கியம் உள்ளது. அது போல ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கூட்டப்பட்ட டெசோ மாநாட்டையும் அதன் தீர்மானங்களையும் விமர்சனம் செய்பவர்களை வரலாறு மன்னிக்குமா?  டெசோ தீர்மானங்களை எதிர்க்கிறீர்களே!  அவற்றுக்கு மாற்றுத் திட்டம் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? என்ன திட்டம் வைத் திருக்கிறீர்கள் என்று தமிழர்
தலைவர் வினா எழுப்பினார்.
மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றிய அணி,  ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் அணியாகும்.  அவற்றை எதிர்ப்பவர்கள் ஈழத் தமிழர்களிடம் உறவோ, பாசமோ, பரிவோ அற்றவர்கள் என்றே கூறலாம்.
ஈழத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் மத்திய ஆசியாவில் இருந்து வந்த இனத்தவர்கள்தான் தொல்லை களைக் கொடுக்கிறார்கள். ராஜபக்சே அலறல்!
இந்த டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் சரியில்லை என்று சொல்லுகிறார்களே. அதனால் ஏதும் பயனில்லை என்று சொல்லுகிறார்களே. அப்படியானால் அதைக் கண்டு ராஜபக்சே அலறுவானேன்? சிந்திக்க வேண்டாமா?
மீனவர் வாழ்வுரிமை
என்வீட்டில் நடந்தால் எழவு. உன் வீட்டில் நடந்தால் கல்யாணமா? மீனவர் உயிர் முக்கியமில்லையா? ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு, தமிழக மீனவர் வாழ்வாதாரப் பாதுகாப்பு இரண்டிற்கும் டெசோ தேவை!
என பல தகவல்களை ஆதாரமாக எடுத்துக் கூறி, டெசோ மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி,  ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார் தமிழர் தலைவர்.
நாகை அவுரித் திடலில் 26-.08.2012 அன்று நாகை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த மக்கள் திரள்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...