Friday, August 24, 2012

பதவியைக் குறுக்கு வழியில் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்!

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

பதவியைக் குறுக்கு வழியில் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்!


இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த 3 நாள்களாக (இன்று காலை வரைகூட) நடக்க விடாமல் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் நடந்து வருவது, ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசுவதாகும்.

பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவர் அதனை அறிவிக்காவிட்டால் நாங்கள் நாடாளுமன்றத்தினை நடத்த அனுமதிக்கவே மாட்டோம் என்று சபையில் சண்டித்தனம் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தினைக்  கேலிக் கூத்தாக்குகின்றனர் எதிர்க்கட்சியினர்!

அனுமானமா? உண்மையில் இழப்பா?

முன்பு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பில் நிலக்கரி சுரங்கத்துறை இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க வருவாய் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்  இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளி வந்துள்ளதை வைத்தே இத்தனை அமளி, துமளி - ஆர்ப்பாட்டங்கள்!

நாம் முன் வைக்கும் சில நியாயமான கேள்விகளுக்கு அந்த எதிர்க்கட்சியினரும், அவர்களது ஒலி குழாய்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறையினரும் பதில் அளிக்க முன்வர வேண்டும்.

1. இந்தத் தொகை - அனுமானமா? உண்மையான இழப்பா? (It is only a presumptive loss)   கற்பனை ஊகம்தானே!

கடந்த காலத்தில் அப்படிச் செய்யாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு தொகை கூடுதலாக அரசுக்குக் கிடைத்திருக்கக் கூடும்; இதனைக் கடைப்பிடிக்காமல் விட்டதால் இந்த (யூக) இழப்பு என்றுதான் CAG Report கூறுகிறது.

பதவிப் பசியில் பா.ஜ.க.,


இப்படி பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து பதவி இழந்து பசியால் வாடும் பா.ஜ.க., மேலும் 2 ஆண்டுகள் 2014 பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல் குறுக்கு வழியில், நாட்டில் ஒரு அவசரத் தேர்தலை மக்கள்மீது திணித்து விட்டால், தங்களுக்கு ஒரு சான்ஸ் - குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல கிடைத்து விடாதா என்ற நப்பாசையின் காரணமாகவே இப்படிக் கூச்சல் போடுகின்றனர்!

மூலகாரணம் என்ன?

இதற்கு மூல காரணம் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான உண்மையான கூட்டணி நெறியைக் கடைப்பிடிக்காமல், மற்ற தோழமையினரை பலிகடாக்களாக்கி, தாங்கள் தப்பித்தால் போதும், அவர்களைத் திருப்தி செய்ய, அழி வழக்குகளைப் போட்டாவது எதிர்க்கட்சியினர் வாயை மூடினால் போதும் என்று 2ஜி அலைக்கற்றை வழக்கினை இதே போன்ற ஒரு யூக நட்டத்தினை CAG அறிக்கை வைத்து, எதிர்க்கட்சியினர் வாய்க்கு அவலைத் தந்ததின் விளைவுதான் இன்று அக்கட்சி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நோக்கி ஏவும் எதிர்க்கட்சியின்  ராஜினாமா கோரிக்கை!

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அது கொள்கை முடிவு (Policy Decision of the cabinet; government) என்று துவக்கத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, பிறகு தி.மு..க அமைச்சரையும் சம்பந்தா சம்பந்தமின்றி திருமதி கனிமொழியையும் குற்றவாளிகளாக இணைத்து சிறையில் பல மாதங்கள் வைத்தது எவ்வகையிலும் நியாயமா? இழப்பு பூஜியம்தான் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள் கூறியபிறகும்கூட இது நடந்திருக்கிறது.

அதன் பார தூர விளைவுதான் - அதே அனுமான - யூக இழப்பாக அதைவிட பெரிய இழப்பை ஊதிக் காட்டி, உலகத்தார் கண்ணில் ஊடக கொயபெல்ஸ்களின் உதவி மூலம் இப்படி ஒரு திட்டமிட்டே பிரச்சாரத்தைச் செய்து, அப்பதவிக்குள்ள மரியாதையையும் காற்றில் பறக்க விடச் செய்கின்றனர்!

எந்த அடிப்படையில் ராஜினாமா கோரிக்கை?

எந்த அடிப்படையில் பிரதமர் ராஜினாமா? நிலக்கரி  ஊழல் (Coalgate என்ற ஊடகப் பெயர் வந்துள்ளதே)  நிரூபிக்கப்பட்டுவிட்டதா? விவாதம்கூட நாடாளுமன்றத்தில் நடத்த இந்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லையே! ஒரு சில கட்சிகள் இப்போதுதான் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலையில் விழாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று முன்வந்து கூறுகின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2ஜி அலை வரிசையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை; உறுதியோடு இருந்திருந்தால் இந்நிலை அதற்கு வந்திருக்காது.

கூச்சல் போட்டுக் குழப்பம் செய்வதா?

முதலில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு கூட்டத் தயங்கி, காலந்தாழ்த்தி, பிறகு இரண்டு குழு விசாரணையை ஏற்று, பிறகு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா என்று ஆக்கி, பிறகு வழக்கு சி.பி.அய். மூலம் போட்டு - இவ்வளவும் ஏற்படாத இழப்புக்காக!  (ஏற்பட்ட இழப்பாக இருப்பின் ஒரே விதமான தொகை அல்லவா குற்றச்சாட்டுகளில் வந்திருக்கும். அப்படி அல்லவே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு மாதிரி! வழக்கு இருப்பதால் நாம் உள்ளே புக விரும்பவில்லை).

இப்போது நிலக்கரி ஊழல் என்பதும் கூச்சல் மூலம் பாமர வாக்காளருக்கு இந்த உண்மை தெரியாமலேயே ஆக்கப்படக் கூடும். குற்றம் செய்திருந்தால் - அதனைச் சொல்ல வேண்டிய இடம் நாடாளுமன்றம் தானே?

திருமதி சோனியாவின் சரியான கருத்து

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களின் சரியான ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் இதுவரை தன்னைக் காப்பாற்றிடும் விளக்கமே (defensive) தந்து வந்துள்ளது; அதை சற்று மாற்றி டீககநளேஎந  - எதிர்க்கட்சிகளின் முரண்பட்ட வாதங்களை, புரட்டுகளை, ஊழல்களை அவர்கள் ஆளும் மாநிலங்களும் இதற்குக் காரணமாக உள்ளன என்ற தகவல்களையெல்லாம் எடுத்துத் திருப்பி அடித்துக் கூற முன் வர வேண்டும்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்

அது மட்டுமா? பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கில் குற்றவாளிகளாக உள்ள பா.ஜ.க. தலைவர்கள்மீதுள்ள வழக்கு ஆண்டுகள் 1992 முதல் 2012 வரை 20 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடப்பதா?

ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் அறிக்கை குப்பைக் கூடையில் போடப்பட்டு எத்தனை ஆண்டுகள்?

குஜராத், கருநாடகா மதவெறி ஊழல்கள் பற்றி பேச்சு மூச்சு உண்டா?

பா.ஜ.க.வின் முகமூடிகள்!

ஊழலை ஒழிக்க பா.ஜ.க.வின் முகமூடிகள் யார் யார் எந்தெந்த சுவாமிகள் என்று சொல்ல வேண்டாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் கூட்டணியின் கட்சிகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து, நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை திருப்தி செய்ய எவரையும் பலி கொடுக்க முன் வந்ததின் விளைவுதான் - இப்படிப்பட்ட நிலைமைகள்.

ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்கள் சும்மா இருப்பார்களா?

தோழமைக் கட்சிகளிடம் தோழமை வேண்டாமா?

நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் தோழமையைத் தேடாமல், உறுதியுடன் இருந்து, மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட துணிவுடனும்,  கூட்டணித் தெளிவுடனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் சந்தர்ப்பவாதம் (Political Expediency) என்பது பலன் தராது - யாருக்குமே!

கொள்கை முடிவுகள் தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களைப் பதிவு செய்து அதிர வைக்கட்டுமே!

வாக்கெடுப்புக்கு வழி கேட்கட்டுமே! இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருக்காமல் இப்படி ஒரு குறுக்கு சால் ஒரு போதும் பயன்தராது.

அது ஜனநாயக முறை ஆகாது. காங்கிரஸ் 2ஜியிலிருந்து மாறி, தனது அணுகுமுறையில் புதிய கோணம் புதிய பார்வையைச் செலவழித்து மக்களிடம் உண்மைகளை விளக்க முன் வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...