Monday, August 13, 2012

கண்மணி வீரமணியின் அரும்பணி!


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர்களால் தமிழர்க் குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாதுகாக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல; அவற் றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலை வனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர்களின் இசை யில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத் திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன்.
அருவியில் குளித்தோர்க் கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை. அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச் சியைத்தான் என்னென்று புகழ்வேன்?
இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத்துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?
அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கை கள், வீரம் மிக்க அறைகூவல்கள் இத்தனையை யும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரி யாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார். என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.
அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.
ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப்போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்களேயென்று!
பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன்தான்.
(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...