Thursday, August 2, 2012

வெள்ளம்போல் திரள்க - டெசோ மாநாட்டுக்கு! அமெரிக்காவிலிருந்து கி.வீரமணி வேண்டுகோள்!

நலமுடன் இருக்கிறேன் - டெசோ மாநாட்டில் பங்கேற்பேன்!


வெள்ளம்போல்  திரள்க - டெசோ மாநாட்டுக்கு!


அமெரிக்காவிலிருந்து கி.வீரமணி வேண்டுகோள்!




தக்க முறையில் மருத்துவ உதவி பெற்று நலம் பெற்று வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் நான் நலமுடன், புத்தாக்கத்துடன் தமிழகம் திரும்புவேன்; டெசோ மாநாடு நோக்கி வெள்ளம்போல் தமிழர்கள் திரளட்டும் என்று கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

எனது அமெரிக்கப் பயணத்தை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பே முடித்து, தமிழ்நாடு திரும்பி, கழகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்;

டெசோ என்ற தமிழ் ஈழம் ஆதரவு அமைப்புச் சார்பில் ஏற்பாடு ஆகியிருக்கும் மாநாட்டுப் பணிகளில் - கருத்துரையாடல்களில் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுடன் பங்கேற்க வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன்.

எனது மருத்துவ சோதனை - நலம் பெற்று விட்டேன்!

சிகாகோவில் 1991 முதல் என்னைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கும் இதய நோய் மருத்துவரிடம் உடல் நல ஆய்வு செய்து கொண்டேன். அவரது ஆய்வு ஆலோசனைப் படியும் அறிவுரைப்படியும் இதயத் துடிப்பு சீராக்கும் சிகிச்சைக்கான கட்டாயம் ஏற்பட்டது.

இச்சிகிச்சைத்துறை அண்மைக்காலத்தில்தான் வளர்ந்துள்ள ஒரு முறை ஆதலால் இதில் சிறந்த அனுபவமும் திறமையும் வாய்ந்த அமெரிக்க மருத்துவர்கள் பற்றி அவர் ஆராய்ந்து, பாஸ்டன் நகரில் ஹார்வேட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியராகவும், அத்துறையில் வல்லுனராகவும் உள்ள டாக்டர் வில்லியம் ஜி. ஸ்டீவென்சன் அவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது அவசியம் - அவசரம் என்று தெளிவாகத் தெரிவித்தார்.

உடனடியாக, சகோதரர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் ரோட் அய்லாண்டில் உள்ள தலை சிறந்த மருத்துவ நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் எஸ்.டி. சம்பந்தம் அவர்களும், வெகு சிரமப்பட்டு டாக்டர் வில்லியம் ஜி. ஸ்டீவென் சன் அவர்களிடம் விரைவாகத் தேதி வாங்கினர்.

அதன்படியே ஆழமும் அனுபவமும் அடக்கமும்  நிறைந்த அந்த டாக்டரிடம் கடந்த சில வாரங்களாக மருத்துவ சிகிச்சை தொடர்ந்தது.

குறிப்பிட்ட நாள் அன்று அறுவை சிகிச்சை அறையில் அவரும் அவரது குழு டாக்டர்களும் இதயத் துடிப்பு சீராக்கும் சிகிச்சையை (Procedure) சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நடத்தினர்.

டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் உடன் இருந்தார்.

மயக்கம் தெளிந்து டாக்டர் என்னை தனி சிகிச்சை அறைக்கு அழைத்து வந்ததும் என்னிடம் நலம் விசாரித்து குடும்பத்தினருடமும் வெற்றிகரமாக முடிந்தது, கவலைப்பட வேண்டாம். அடுத்து தொடர் சிகிச்சைகள் தொடரும் என்று கூறினார்.

பல்துறை டாக்டர்களும், ஏற்பட்ட சில விளைவுகளுக்கும் உரிய சிகிச்சையை 24 மணி நேரமும் செய்த பிறகு வெளியே அனுப்பி, குறிப்பிட்ட மருத்துவ முறைகளைக் கவனமாகச் செய்து மீண்டும் திரும்ப திங்கள் (ஜூலை 30) காலை மருத்துவமனை வருமாறு கூறினார் டாக்டர் ஸ்டீவென்சன். அதன்படியே மீண்டும் சில துறைகளால் பரிசோதிக்கப்பட்டு, அவரும் மற்றொரு டாக்டரும் (அவரது குழுவினர்) ஆய்வு செய்து, சில பரிசோதனைச் செய்த பின்னர், எல்லாம் நல்ல முறையில் அமைந்துள்ளது. இனி தக்க ஒழுங்குடனும் கவனத்துடனும் உங்கள் பணிகளைத் தொடரலாம். சில நாள் போதிய ஓய்வுடன் இருந்து மீண்டும் சந்தியுங்கள் எனக் கூறி அனுப்பினார்.

கழகக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போது நான் முந்தைய இதயத் துடிப்பு சீரின்மையிலிருந்து விடுபட்டு நலம் பெற்றுள்ளேன் என்பதை கவலை கொண்டுள்ள கழகக் குடும்பத்தினருக்கும், நல விரும்பும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் அறிவு ஆசான் பெரியார் கொள்கை பரப்பும் என் பணி இனியும் நிற்காது. புத்துயிர் பெற்றுத் திரும்பியுள்ளதால் புத்தாக்கத்தை நோக்கி, புது உத்வேகத்துடன் தொடரும் என்பதை பணிவன்புடன் அறிவிக்கிறேன்.

மருத்துவ நண்பர்கள், இங்குள்ள நலம் நாடும் நண்பர்கள் அனைவரும் இங்கு (அமெரிக்காவில்) மேலும் தங்கி பிறகு தமிழ்நாடு திரும்பலாம் என்றும் வற்புறுத்தினர். அதனை தலை வணக்கத்துடன் மறுத்துவிட்டு, தமிழகம் திரும்பத் துடித்துக் கொண்டுள்ளேன்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, டெசோ அமைப்பு மூலம் நாம் நம்மால் இயன்ற அளவு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டின் மூலம் உலகப் பார்வையையும், ஆதரவையும் திரட்டி, ஈர்க்க வேண்டியவைகளையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுக்க வேண்டியவைகளை வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் எழுச்சியைக் காட்டி, ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவது அவசியம் என்ற முக்கிய கட்டத்தில் இங்கே இருந்து ஓய்வு எடுப்பது, எனது நோய் தந்த வலியைவிட அதிக அளவு வலியையும் வேதனையையும் தருவதாக அமையும் என்பதால் புறப்பட ஆயத்தமாகிறேன்.

நான் நியூயார்க்கில் கடந்த ஜூன் 27ந் தேதி அன்று அய்.நா. தலைமையகம் சென்று, அங்குள்ள அய்.நா. அரசியல் குழுவின் மூத்த அதிகாரியும் தென் கிழக்கு நாடுகளின் தலைமை அதிகாரியுமான திரு. ஹிட்டோடென் அவர்களை, அய்.நா. தொடர்பு அதிகாரி ரவிஸ் அம்மையாருடன் சென்று அய்.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அதன் பின்னரும் வாழும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் இன்னமும் முடங்கிக் கிடக்கின்ற நிலை, இலங்கை தமிழர்களின் மனித உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைப் பற்றியும் விரிவாக விளக்கி அய்.நா. அதனை மற்ற நாடுகளில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஹிட்டோடென் அவர்கள், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் - செய்வோம்.  அதே நேரத்தில் இந்திய அரசங்கத்திற்கும் நீங்கள் (தமிழ்நாட்டவர்) போதிய அழுத்தம் தாருங்கள் என்று கூறினார்.

அப்போது டெசோவின் பணிகள், கூட்டப்படவிருக்கும் மாநாடு பற்றியும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன்.

இந்தச் சந்திப்பு, கலந்துரையாடல் சுமார் 45 மணித் துளிகள் நியூயார்க் அய்.நா. தலைமையகத்தில் 27.6.2012 அன்று நடந்தது. அதன் பிறகே எனது மருத்துவம் பற்றிய சிந்தனை எனக்கு வந்தது.

இந்நிலையில் நான் எப்படி இங்கே இருக்க முடியும்?

குறுக்குசால் ஒட்டும் சகோதரர்களுக்கு...
 
டெசோ மாநாட்டின் மூலமும், அந்த அமைப்பு மூலமும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை, நாம் அனைவரும் ஒருமுகப்பட்டு குரல் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது!

உலகப் பார்வை, இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈழத்தில் நடைபெறும் கொடுமைகள் பற்றியும் விடிவு ஏற்பட வேண்டும் என்பதுபற்றியும் அக்கறை எழுந்துள்ளது. இத்தருணத்தில் நம் சகோதரர்கள் சிலர் குறுகிய நோக்குடனும், அரசியல் மனப்பான்மையுடனும் டெசோவை, கலைஞரை விமர்சிப்பது தேவைதானா?

அதன் பயன் யாருக்குப் போய் சேரும்? எண்ணிப் பார்த்தார்களா? சிங்கள இனவெறிக் கூட்டத்திற்குப் பாயசப் பரிமாறலாக அல்லவா அது அமையும்? நியாயந்தானா? சிந்தியுங்கள், நண்பர்களே!

நமக்கு பொது எதிரி யார்? சிங்கள இனவெறி ஹிட்லர் இராஜபக்சேவின் நடவடிக்கைகளா? அல்லது கலைஞரா? டெசோ அமைப்பா?

முடிந்தால், எங்களுடன் வாருங்கள் - வரத் தயங்கினால் வாய் திறவாமல் மவுனம் காத்து, டெசோவைவிட மேலும் புரட்சிகரமான செயற்பாடுகளைச் செய்யுங்கள் வரவேற்போம்; நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் இப்பிரச்சினையில் பங்கேற்றவர்கள்தான் டெசோ அமைப்பில் - மறவாதீர்!

அரசியல் பார்வைகளை வேறு களங்களில் - தளங்களில் - நாம் வைத்துக் கொள்ளலாம். அருள்கூர்ந்து வதியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காட்டாதீர்கள். அதையும் மீறி, பார்ப்பன ஊடக சடகோபங்களுக்கு ஆயுதமாகி, வீண் விமர்சனங்களை டெசோமீது வாரி இறைத்தால் அது டெசோவுக்கோ, கலைஞருக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாறாக, அது டெசோ எனும் வயலில் முளைவிட்டுக் கிளம்பக் காத்திருக்கும் பயிர்களுக்கு நீங்கள் பாய்ச்சும் நீரும் உரமுமாகவே அமையும் - என்பது உறுதி.
உண்மையான உணர்வாளர்கள். இதை அரசியலாகப் பார்க்க மாட்டார்கள். ஓர் இனத்தின் விடியலாகவே காண்பர்.

டெசோ மாநாட்டுக்கு வாரீர்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரளட்டும் - டெசோ மாநாடு நோக்கி!

வீரங்கொள் அக்கூட்டத்தின் உறுதி சிங்களக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவாயுதமாக மாறட்டும்!
உலகத்தை ஈர்ப்போம்!!
எம் இனத்தை உய்விப்போம்!

என்று சூளுரைக்கும் சுயமரியாதை வீரர், வீராங்கனைகளே, திரண்டு வாருங்கள்! வாருங்கள்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

பாஸ்டன் (USA)
2.8.2012


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...