Friday, July 20, 2012

புதிய சரஸ்வதி


பால்காரனிடம் என்ன சிரிப்பு வேண்டிகெடக்கு? புழக்கடையில போய் பீய்ச்சி ஊத்துனமா, வந்தமான்னு இருக்கணும், தெரியுமா? அரிசியக் களஞ்சு வெச்சிருக்கே, போய் அடுப்பைப் பத்த வைய்யடி!
மருமகளை ஓங்கிய குரலில் சத்தமிட்டவாறு தலையை அள்ளிமுடித்தாள் சரசுவின் மாமியார்.
சரசுவுக்குக் கோபமாய் வந்தது. பால்காரனிடம் சிரித்துப் பேசக்கூடாது; கேஸ் சிலிண்டர்காரனிடம் பேசக்கூடாது; மளிகைக்கடைக்காரனிடம் பேசக்கூடாது; அக்கம் பக்கத்தார்கூடப் பேசக்கூடாது.இந்தக் காலத்திலும் இப்படியா? யாரிடம்தான் பேசுவது? அத்தையிடம் பேசினால்கூட, சும்மா... என்னடி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே! வேலையப் பாரு! என்கிறாள். என்ன விசித்திரமான குடும்பம் இது?
சரசுவுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தையில்லை கணவன் அருகில் உள்ள ஓர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்கிறான். சுமாரான வசதியுள்ள பத்து ஏக்கர் தோட்டம் துறவுள்ள குடும்பம். பையன் சம்பாதிப்பதில் மிகவும் கெட்டிக்காரன். எந்தக்கெட்ட பழக்கமும் இல்லை. ஒரே பையன் மாமனார் இல்லை... என்றுதான் ஆறுபெண்கள் உள்ள குடும்பத்திலிருந்து மூத்தவள் சரசுவைக் கட்டிக்கொடுத்தார்கள்.
ஆனால், கை நிறைய எடுத்துக் கொஞ்சுவதற்கு குழந்தை பாக்யம் இல்லையே! இப்படி மாமியார்தான் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள். நாமும் எத்தனையோ கோயில் குளமெல்லாம் போய் வந்தோம். வேண்டாத சாமியில்லை. செய்யாத வேண்டுதல் இல்லை. இவள் மலடி; பிள்ளை பாக்யம் அற்ற பாவி! இவளை ஒழித்துவிட்டு வேறொரு நல்ல பொண்ணாப் பாத்து கட்டிக்கலாம்! என்னடா சொல்றே? மகனைக் கேட்டாள் மாமியார்.
இந்தச் சனியனை எப்படி ஒழிக்கிறதுண்ணுதான் தெரியலம்மா மனம் புழுங்கிச் சொன்னான் மகன்.
கண்டவனோட கூத்தடிக்கிறா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இல்லன்னு, அவ அம்மா வீட்டுக்குத் தொறத்திட்டாப் போச்சு! மேலும் புள்ள பெத்துக் குடுக்காத மலடிய எவன் வச்சுக்குவான்னு? அனுப்புடா! வாய் கூசாமல், தானும் ஒரு பெண் என்று பாராமல் சொன்னாள் அவன் அம்மா.
தாய்_மகனின் கூட்டுச் சதித்திட்டம் அரங்கேறத் தொடங்கியது.
ஒருநாள் அந்த முடிவுக்கும் வந்துவிட்டனர் இருவரும். தெருவில் காய்கறிக்காரனோடு பேசினாளென்று சரசுவைத் தர, தரவென்று கூந்தலைப் பிடித்து இழுத்து... பக்கத்து ஊரான அவளின் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டான் அவள் கணவன். அத்துடன், இவ குழந்தைப் பாக்யம் இல்லாத மலடி என்றும், இவளை இனி என்னுடன் வைத்து வாழ மாட்டேன் என்றும் கூறிவிட்டு வந்துவிட்டான்.
வேதனையும், தன்னால் எதுவும் முடியாதென்ற ஆற்றாமையும் ஒருசேர வெந்து முடங்கிப் போனாள் சரசு.
இவளை எப்படி கணவரிடம் மீண்டும் சேர்ப்பது என்று திகைத்துப் போயினர் சரசுவின் பெற்றோர். இன்னும் அய்ந்து பெண்களை எப்படிக் கரையேற்றுவது என்றும் விழிபிதுங்கி நின்றவேளையில் மூத்த மகள் சரசுவுக்கு இப்படி ஒரு தண்டனையா?
ஒரு வாரமிருக்கும்... சரசுவுக்கு லேசான காய்ச்சல். பக்கத்து நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு சரசுவின் பழைய சிநேகிதி வெண்பா, அதே மருத்துவமனையில் மருத்துவராக இருப்பதுகண்டு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். வெண்பாவோடு ஒன்றாகப் படித்த சரசு அய்ந்தாம் வகுப்போடு தன் குடும்ப சூழ்நிலையில் நின்றுவிட்டாள். தொடர்ந்து படித்த வெண்பா தற்போது மருத்துவராகிவிட்டாள்.
என்ன, சரசு எப்படியிருக்கே? நாம பார்த்து ரொம்ப காலமாயிருச்சு. திருமணம்கூட உனக்கு ஆயிருச்சு போல. ஆமாண்டி, எத்தனை குழந்தைகள்? கண் சிமிட்டியவாறு கேட்டாள் வெண்பா.
அவள் கேள்விகளுக்கு, காலம்தந்த கசப்பான வாழ்க்கை; கணவன், மாமியார் கொடுமைகள்! விடையிறுத்தாள் கண்ணீருடன் சரசு... எனக்குக் குழந்தை பிறக்காதாம். மலடி எனச் சொல்லி அவமானப்படுத்தி அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அதனால அம்மா வீட்டிலதா இருக்கேன்! மொதல்ல காய்ச்சலுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிடு! நீ சின்ன வயசிலேயே ரொம்பவும் கலகலப்பானவ. தன்னம்பிக்கை உனக்கு என்னைவிட அதிகமிருக்கும்.  யாருக்கும், எதுக்கும் அச்சப்பட மாட்டியே! நீயா, இந்த சமூகத்துக்குப் பயப்படறே? எதையும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையைப் போராடி வெற்றிகொள் சரசு! அது உன்னால முடியும்! வெண்பா, அவளுக்கு புதுத்தெம்பையும் _ வாழ்வின் சூன்யத்தை அறுக்கும் நம்பிக்கையைப் பாய்ச்சி விட்டாள். சரசு, உள்ளறைக்கு வா! உனக்கு முறைப்படி சோதனைசெய்து... பிறகு பேசிக்கலாம்!
கர்ப்பப்பைச் சோதனை மற்ற சோதனைகளையும் செய்துவிட்டு, அடி, அறியாப் பெண்ணே! உனக்குக் குழந்தை பெற்றெடுக்க எல்லா உடல் தகுதியும் இருக்குடி! முறைப்படி அனைத்துச் சோதனை களையும் செய்துவிட்டேன். ஆண்டுக்கு ஒரு குழந்தையென்று, பத்துப் பனிரெண்டுகூட பெத்துக்கிடலாம். எந்த மருத்துவர் உனக்குக் குழந்தை பிறக்காது என்று சொன்னார்? வினவினாள் வெண்பா.
என் மாமியாரும், கணவரும்தான் அப்படிச்சொல்லி என்னை உதாசீனம் செய்து வருகின்றனர்!
அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை! உன் கணவரையும் சோதனை செய்து பார்த்தால்...! ஒருவேளை தகுதியில்லையென்றாலும், தற்போதுள்ள நவீன மருத்துவத்தால், நீங்கள் இருவரும் குழந்தைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம்! என்றாள் மருத்துவர் வெண்பா.
அறியாமைக் களைகளை பகுத்தறிவு கொத்தியால் கொத்திப் பிடுங்கியதால் மனம் தெளிவு பிறந்தது சரசுவுக்கு. இனி வாழ்க்கையை போராடித்தான் வாழவேண்டும்! என்ற துணிச்சலான முடிவை எடுத்தாள். மீண்டும் தன் கணவனுக்கு ஒரு வாய்ப்பை நல்க எண்ணினாள். கணவனின் இல்லம் நோக்கிப் பயணித்தாள் சரசு.
அவ்வேளை, மாமியாரும் கணவனும் பெண் பார்க்கும் படலத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். சரசு, வீட்டிற்கு மீண்டும் வந்தது அவர்களுக்கு ஆத்திரமாகவும், வேண்டா வெறுப்பாகவும் இருப்பதில் வியப்பேதுமில்லை! எப்படியாவது வலுக்கட்டாயமாக ஏதாவது காரணம் கற்பித்து, அல்லது விவாகரத்து செய்தாவது துரத்திவிட வேண்டுமென்று முடிவு செய்தனர்.
தனக்கு ஒரு வாரிசு பெற வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா? அல்லது தனக்கு ஏதாவது தோஷம் கீஷம் இருக்கிறதா? ஜாதகத்தில் என்ன குறை என்று திருச்சி சென்று தொலைக்காட்சியில் புகழ்பெற்ற அந்தச் ஜோதிடரைப் போய்க் கேட்டான் சரசுவின் கணவன்.
உனக்கு எந்த தோஷமும் இல்லை. நா சொல்ற மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பாரு! குழந்தை பெற தகுதியில்லை! என்று ஒருவேளை அவர் சொன்னால்... உடனே, உன் மனைவியின் மீது மலடி என்ற பழியைப் போட்டு, அவளை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு, என்னிடம் வா! உனக்கு நல்லதொரு குழந்தைப் பாக்யம் உள்ள பெண்ணாகப் பார்த்து கட்டிவைக்கிறேன். உனக்கு வாரிசு உருவாக நான் உதவி செய்கிறேன்! என்றார் ஜோதிடர். பாதி அறிவியல்படியும் _ பாதி மூடநம்பிக்கையும் ஊட்டி காசைக் கறந்து கொண்டார் அந்தப் புகழ்பெற்ற ஜோதிடர்.
மருத்துவரிடம் சென்று தன்னை சோதனை செய்து பார்த்ததில் தனக்குத் குழந்தைபெற எந்தத் தகுதியும் இல்லையென்று முடிவு சொன்னார் மருத்துவர். ஆனாலும் முறைப்படி படிப்படியாக மருத்துவம் செய்தால் குழந்தைபெற தகுதியடையலாம். துணைவியை அழைத்துவரச் சொன்னார் மருத்துவர்.
வேண்டாம் என்ற மனைவி கைப்பட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம் என்ற நிலையில்... யோசித்தான் சரசுவின் கணவன். மருத்துவரிடம் மனைவியை அழைத்துவருகிறேன் என்று கூறியவன் போகவில்லை. தனக்கு குழந்தைக்குத் தந்தையாகும் தகுதியில்லை என்று மருத்துவர் கூறியது மிகவும் ஆற்றாமையும் கவலையும், கொண்டான். தன் துயரை _ தன் குறையை வெளிக்காட்டாமல் பலவீனமடைந்த அவன், பழியை சரசுமீதே போடுவதென்று தீர்மானித்தான்.
தான் ஆண்மையுள்ளவன் என் நிரூபிக்கச் சோதிடர் சொன்னபடி, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அவர் மூலமாவது குழந்தை (வாரிசு) பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை சரசுவை அந்த மருத்துவரிடம் அழைந்துவந்து காண்பித்தால்... அவளுக்குக் குழந்தை பிறக்கும் தகுதியிருக்கிறது என்று சொல்லிவிட்டால்...! நமக்கு எத்தனை அவமானம்? ஆண்மகன் என்ற தகுதி போய்விடும். ஆண்மையற்றவன்  என்று ஊரார் பேசுவார்களே...! என்ற அறியாமையாலும், ஜோதிடர் சொன்னதே வேதமென்ற மூடநம்பிக்கையாலும் _ தன்மீதே தன்னம்பிக்கையின்மையாலும் தாழ்வு மனப்பான்மையாலும் ஆணாதிக்கச் சிந்தனையாலும், சரசுவை வீட்டைவிட்டுத் துரத்த நாள் குறித்தான் அவள் கணவன்.
ஒரு வாரம் போனபிறகு... மீண்டும் அதே பால்காரனைத் தொடர்புபடுத்தி சரசுவை அவமானப்படுத்தினார்கள் மாமியாரும்_கணவனும். ஓர் நாள் ஊர் பொது மந்தையில் சரசுவை அடித்து இழுத்துக் கொண்டுபோய் கீழே தள்ளினான்.
அடியே...! இனி நான் உனக்குப் புருஷன் இல்லை. அந்தப் பால்காரன்தான் உனக்குப் புருஷன்! அவனோடயே போயிரு! இனிமே உனக்கு குழந்தையும் பொறக்காது. எனக்கும் வாரிசு இருக்காது. நீ மலடி...! குழந்தையைப் பெத்துக்குடுக்க முடியாத வக்கத்த சிறுக்கி! ஊர் மேயிற உன்னை வைத்து இனி குடும்பம் நடத்த முடியாது... போடி...! என்று வாய்க்கு வந்தபடி பேசி அடித்தான், உதைத்தான்! ஊராரின் முன்பு சரசுவை வேண்டுமென்றே அவமானப்படுத்தினான்.
சரசுக்கு சினம் எல்லை மீறிப் போனது. கீழே விழுந்தவள் தன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி கையிலெடுத்து... டே இனி எனக்கு நீ கணவனில்லை! உன்னோட வாழப்போறதில்லை! சுதாரித்து எழுந்தபோது...
பொம்பளை, செருப்பைக் கையில எடுத்து, ஆம்பிளைய அடிச்சிருவியா? என்று அவள் மாமியார் கையில் அரிவாளோடு வந்து... சரசுவைப் பிடித்துக்கொள்ள, அவள் கணவன் சரசுவின் தலைமுடியை அரிவாளால் அறுத்தான். ஊரே திகைத்துப்போனது! சிலரின் முயற்சியால் அவர்களை தடுத்தபோது, அவர்களையும் திட்டிக் கொண்டே போனாள் அவள் மாமியார். உன்னை இன்னும் என்னவெல்லாம் செய்யறம் பார்! என்று சொல்லிவிட்டுப் போனான் அவள் கணவன்.
சரசுவைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. உடலெங்கும் இரத்தக் காயங்களோடு... எவ்வளவு கொடுமை! ஊரார் எதிரில் தன் கணவனே தலைமுடியைக் கொய்தது... அருவறுப்புடன் காரி உமிழ்ந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவள், கணவனை கைதட்டி அழைத்து.. சொன்னாள்.
இனி, நீ விரும்பினாலும் உன்னோடு நான் வாழப் போறதில்லை. என்னை குழந்தை பெத்துக் குடுக்கமுடியாத மலடின்னு சொன்னே! நான் மலடி இல்லேங்கிறதை காலம் உருவாக்கும். நா உருவாக்குவேன்! ஆண் எஜமான பெண் அடிமை என்கிற காலம் இப்ப இல்லை! வர்றேன்! ஆவேசத்துடன் சென்றாள். அம்மா வீட்டிற்குப் போனாள். சட்டப்படி அவள் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றாள்.
காலம் கணிந்ததால் அதே பால்காரனை மறுமணம் புரிந்தாள். அடுத்த ஆண்டே ஓர் அழகான ஆண்மகவை ஈன்றாள். அன்றாடம் கூலிசெய்து உழைத்து வந்தாலும் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள் சரசு. பழைய சரஸ்வதிகள் பத்தாம்பசலிகள். இவள் புதிய சரஸ்வதி! ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி... பெண்மைக்கும் ஆண்மையுண்டு என நிரூபித்துக் கொண்டிருக்கிறாள்.
முன்னாள் கணவன், தற்போது அந்தச் சோதிடரைப் பார்த்து கோயில்தேடி... பெண்ணைத் தேடி... வாரிசைத் தேடி... ஆம்! அவனின் ஆணாதிக்க மனோபாவமும் _ மூடநம்பிக்கையும் அறியாமைச் சேற்றில் மூழ்கடித்தும் கொண்டிருக்கிறது!

1 comment:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...