Tuesday, July 31, 2012

தந்தை பெரியார்மீதான விமர்சனம்?


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு சா. இராமதாசு அவர்களின் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
தாங்கள் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் இருக்கும் மேடையிலேயே பெரியாரையே விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனரிடமிருந்து தெளிவான பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்வியேகூட வேறு மாதிரியாக இருந் திருக்க வேண்டும். பெரியாரைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறார்களே என்ற வகையில் வினா எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். விமர்சனம் என்பது வேறு - கொச்சைப்படுத்துவது என்பது வேறு.
அப்படியே பார்த்தாலும் தந்தை பெரியார் அவர்களை விமர்சிக்க இப்பொழுது என்ன அவசியம் வந்தது? அதன் மூலம் யாருக்கு லாபம்? விமர்சிக்க வேண்டிய பிரச்சினைகள் எத்தனை எத்தனையோ இருக்க, தந்தை பெரியார் அவர்களை சரியான புரிதல் இன்றி விமர்சிப்பது யாரைத் திருப்திப்படுத்த?
தந்தை பெரியாரைச் சொல்லியே வெளியில் வந்தார். இப்பொழுது தந்தை பெரியார் அவர்களை தமிழினத்துக்கு விரோதமானவர் என்று பா.ம.க., மேடைகளிலே பேசுவதன் மூலம் பெரும் வீழ்ச்சியை அந்தக் கட்சி சந்திக்கப் போகிறது என் பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
தமிழ்த் தேசியம் என்ற பதாகையை வீர தீரமாகத் தூக்கி வந்தவர்கள் பெரியார்மீது கை வைக்கப் போய் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் தெரிந்து கொள்வது நல்லது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யைத் தவிர, தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாத நிலைதான்.
சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு வகையில் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்த லாம் என்றால் அதனைத் தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. சமூகநீதி என்பது இந்த நாட்டில் வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல - அது விரிந்த பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டது.
தந்தை பெரியார் அவர்களின் எந்த கொள்கை தவறானது - தமிழர்களுக்கு விரோதமானது என்று இவர்களால் எடுத்து வைக்க முடியுமா?
பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் எவற்றை முன்னிறுத்தித் தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அவற்றையே இரவல் வாங்கி இவர்களும் அந்த வேலையைச் செய்வதன் மூலம் தமிழர்கள் மத்தியில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள்.
இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக் கூடாது. திராவிட இயக்கத்தையும் அதன் ஒப்பற்ற கொள்கையையும் இவர்கள் எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர் எதிர்ப்பைக் கைக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை; மாறாக அவர்களின் கைகளுக் குள் புதைந்துகொள்ள முடிவு செய்து விட்டார்கள் என்றே கருத வேண்டும்.
இது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அவர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பார்ப் பனர்கள் பற்றியோ அவர்களின் ஆதிக்கத்தைப் பற்றியோ, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்தோ ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.
பெரும்பாலும் தற்பெருமையும், அரசியல் கட்சிகளைச் சாடுதலும்தான் அதிகம் இருக்கும்.
தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தை கேவலமாக விமர்சிப்பதும் தான் அவர்களின் இன்றைய முதன்மைத் திட்டமாக இருந்து வருகிறது.
எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேராமலும், தந்தை பெரியார் அவர்களையும், திராவிட இயக்கத்தை விமர்சித்தும் வாக்கு கேட்டு வரட்டும்! தமிழர்கள் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்கத் தயாராகவே இருப்பார்கள்.
இடையில் கறுப்புச் சட்டை போட்டதெல்லாம் இவற்றின் மூலம் வெளிறி விட்டது. தமிழ்மண், தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தால் உழைப்பால்  பல நிலைகளிலும் தாக்கம் பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில் எந்தச் செங்கல்லை இவர்கள் உருவப் போகி றார்கள்? சந்திப்போம்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...