Thursday, July 19, 2012

வரதட்சணை...?


இச்சமுதாயம் வெகு ஆண்டு களாக பெண்களை பிள்ளைபெறும் இயந்திரமாகவும், அலங்கார பொம்மை களாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே கருதி வந்தது.
ஆனால்,  பெண்ணுரிமைக் காவலர் பெரியார் அவர்கள் சமுதாய நோக்கத் தோடும், தொலைநோக்குப் பார்வை யோடும் சிந்தித்ததின் விளைவாக பெண்களுக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெற்றால் அவர்கள் யாருடைய தயவும் இன்றி சொந்தக் காலில் நிற்க முடியும் என்று பெண்களின் நலனிற்காகவும், உரிமைக்காகவும், வாழ் வின் விடியலுக்காகவும் தனி மனிதராக நின்று தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.
அதன் பயனாய், நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு பெண்கள் கல்வி கற்கவும், அதன்மூலம் வேலை வாய்ப் பினைப் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது.
பெரியாரால் கிடைக்கப்பெற்ற இத் தகைய நல் வாய்ப்பினை மகளிர் சமு தாயம் நன்கு பயன்படுத்திக் கொண்டு தற்போது கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் பீடுநடை போடத் தொடங்கி யுள்ளனர்.
ஆனாலும், பெண்கள் என்னதான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்தாலும் ஆணாதிக்கத்தின் விபரீதப் போக்கால் பெண்களுக்கு எதி ரான வன்கொடுமைகளும், வரதட் சணைக் கொடுமைகளும் இன்றளவும் தொடர் கதையாகவே உள்ளன.
அனைத்து நாடுகளிலும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும், உரிமைக்காகவும் தனிச்சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உலகில் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட பெண்களுக்கென தனிச் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவை அனைத்தும் ஆணாதிக்கத்தின் அலட்சியப் போக்கால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் பெண்களைப் பணம் பறிக்கும் இயந்திரமாகக் கருதி பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் நாளும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டு, வேறு வழியின்றி தற் கொலையை தற்காப்பாகக் கருதி தங் களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர் அல்லது கணவர் மற்றும் உறவினரால் உயிரோடு எரித்துக் கொல் லப்படுகின்றனர் என்பதே இன்றுவரை நிலவும் கசப்பான உண்மை நிலையாகும்.
எடுத்துக்காட்டாக, உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியைச் சேர்ந்த ஒரு பெண் மணியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது மட்டுமன்றி, 1996 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கணவர் மற்றும் மாமியார், மைத்துனர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பெண்மணியை உயி ரோடு எரித்துக் கொன்றனர் என்கின்ற கொடுமையான செய்தியினை அண்மை யில் (11.6.2012) நாளேட்டின் வாயிலாக அறிய முடிந்தது.
இப்படிப்பட்ட கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈவு, இரக்கமற்ற செயல் உத்தரகாண்ட் மாநிலத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதை எண்ணி, பெண்ணுரிமை மாண்பாளர்கள், சமூகநீதிச் சிந்தனையாளர்கள், பகுத்தறி வாளர்கள், மற்றும் மகளிர் அமைப்புகள், நடுநிலையாளர்கள் ஆகியோர் வெட்கித் தலைகுனிந்தனர். வேதனை மிகுதியால் வாயடைத்து நின்றனர். அதிர்ச்சியில் உறைந்து போயினர். செய்வதறியாது திகைத்து நின்றனர். மீளாத் துயரத்தில் மூழ்கினர்.
இத்தகைய துயரம் மிகுந்த சூழலில் தான், அனைவரும் சற்றே ஆறுதல் அடை யக் கூடிய செய்தியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுவந்தந்தர்குமார், ரஞ்சன் ககோய் ஆகியோர் மேற்கண்ட சம் பவத்தை ஒட்டிய வழக்கில், வரதட்சணைச் சாவில் ஆயுள் சிறைக்குக் குறைவான தண்டனை வழங்கமுடியாது என்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளனர் என்பதை சமீபத்தில் (11.06.2012) நாளிதழை நோக்கியபோது காண முடிந்தது.
வீட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் நன்மைக்கும் பயன்பட வேண்டிய ஓர் பெண்ணின் உயிரை சிறிதும் ஈவு இரக்க மின்றி கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொன்ற இதயமற்ற மனிதர் களுக்கு இத்தீர்ப்பின் வாயிலாக நீதிபதி கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
இத்தகு சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை நாளேட்டின் வாயிலாக அறிந்த மகளிர் அமைப்பினர், மாதர் சங்கத்தினர், நடுநிலையாளர்கள் ஆகியோர் கைகூப்பி வணங்கி வரவேற்கின்றனர். வாயார, மனமார பாராட்டி மகிழ்கின்றனர்.
மகளிர் சமுதாயம் பாராட்டி மகிழ்கின்ற அதே வேளையில்; சற்றும் மனிதநேய மின்றி உலாவருகின்ற ஏனைய மனிதர் களைச் சட்டத்தால் மட்டுமே திருத்திவிட முடியாது என்பதே சமுதாய நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர் களின் கருத்தாக உள்ளது.
எனவே, இந்தியாவில் இனிமேலும் வரதட்சணைக் கொடுமைகள் - வரதட் சணைக் கொலைகள் ஆகியவை  நடக் காமல் தடுத்து நிறுத்திடும் உயரிய நோக் கத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து வரதட்சணை வாங்கவும் மாட்டோம் - கொடுக்கவும் மாட்டோம் என்கின்ற புரட்சிகரமான முழக்கத் தினை முன்னிறுத்தி நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களி டையே எழுச்சி மிகுந்த பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகி விட்டனர்.
ஆகவே, வரதட்சணைக் கொடுமை மற்றும் வரதட்சணைக் கொலைகள் ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடையே போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும், மனிதநேயத்தையும் வளர்த்தெடுக்க மாபெரும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள இளைஞர் களையும், மாணவர்களையும் ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுப்போம்! துணை நிற்போம்!!
மலரட்டும் மனிதநேயம்!
மடியட்டும் வரதட்சணைக் கொடுமை!!


- சீ.இலட்சுமிபதி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...