Friday, June 22, 2012

டெசோ கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!


ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகும்கூட இலங்கை சிங்கள அரசின் திமிர் அடங்கிப் போனதாகத் தெரியவில்லை.

போர் விதி முறை மீறப்பட்டுள்ளதா? ஈழத் தமிழர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டனர் என்பதை - இந்தக் குற்றங்கள் இழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இலங்கை அரசே விசாரிக்கும் என்றால், அந்த அரசுக்கு அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏது? அதனால்தான் இலங்கை அமைச்சர் சம்பிகாரன வாக வெறி முறுக்கேறிய வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். ஈழத் தமிழர்கள் உரிமை கிரிமை என்று போராடவும் பேசவும் ஆரம்பித்தால் முள்ளி வாய்க்கால் சம்பவம் போல நூறு முள்ளிவாய்க் கால்கள் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
இதற்குப் பிறகாவது இந்திய அரசு விழித்துக் கொள்ளுமா? ஜெனிவாவில் இலங்கை அரசு பக்கம் கை தூக்கிய அந்த நாடுகளாவது கண் திறந்து பார்க்கும் என்று நம்புகிறோம்.
இலங்கை அமைச்சரின் வெறிப் பேச்சைக் கண்டித்து திமுக தலைவரும் டெசோ அமைப்பின் தலைவருமான மானமிகு கலைஞர் அவர்கள் பிரதமருக்குத் தந்தி கொடுத்துள்ளார்.
நூற்றுக்கணக்கான இனப்படுகொலைகள் நடைபெறும் என்று எச்சரித்ததுடன், ஒரு முள்ளிவாய்க்கால் போதுமென்றும், மேலும் நூறு முள்ளிவாய்க்கால்களுக்கு எவரும் முயற்சிக்கக் கூடாது என்றும் இலங்கை அமைச்சர் சம்பிகாரண வாக பேசியுள்ளதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
இலங்கை அமைச்சரின் பேச்சு மிகவும் ஆத்திர மூட்டுவது என்பதால் கண்டனத்துக்குரியது. இலங்கை அமைச்சரின் கண்டனத்துக்குரிய பேச் சினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருமளவு கலக்கம் அடைந்துள்ளனர். தாங்கள் இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துக்கூறி கட்டுப்பாட்டுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்.  இலங்கை அரசின் கடுமையான நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் தெரிவிக்கலாம். என்று கலைஞர்  அவர்கள் பிரமதரைக் கேட்டுக் கொண் டுள்ளார்.
முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் உலக மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் தந்திரம் தான்; ராஜபக்சேவின் கடந்த கால நட வடிக்கைகளை அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் - வாக்கைக் காப்பாற்றும் நாணயம் அந்த மனிதரிடம் அறவேயில்லை என்பது வெளிப்படை! சுஷ்மா சுவராஜ் எம்.பி. தலைமையில் சென்ற 12 பேர்கள் கொண்ட குழுவிடம் தெரிவித்ததையே, அந்தக் குழு இந்தியா வந்து சேர்வதற்கு முன்பாகவே மறுத்து விட்டாரே!
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்ந்தளிப்பு குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்று இதே இலங்கை அரசு கூறவில்லையா!
தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க வழி செய்யும் 13ஆவது சாசனம் குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் பேசியதாகவும் ராஜபக்சே அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இதனை மறுப்பதாக இலங்கை அரசு கூறியதை தி அய்லண்ட் ஏடு வெளியிட்டதே!
நாடாளுமன்றக் குழுதான் ஈழம் சென்றதே - சுதந்திரமாக அவர்களால் செல்ல முடிந்ததா? இலங்கை அமைச்சர்களும், இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் இவர்களுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர் என்கிற தகவலை இந்தியா டுடே (2.5.2012) அம்பலப்படுத்த வில்லையா?
வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழர்களின் எண் ணிக்கை 13 லட்சம் என்றால், அங்கு குவிக்கப்பட்டு இருக்கும் இராணுவத்தினரோ ஒரு லட்சம்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்துப் பேரணி நடத்திய தமிழர்கள்மீது சிங்கள இராணுவம் கொடூர தாக் குதலைத் தொடுத்திருக்கிறது. முள்வேலி முகாமுக் குள் இன்னும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில்.
இதற்குப் பிறகும் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஒரே நாட்டின் கீழ் சிங்களவர்களோடு இணைந்து ஈழத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று எவரேனும் நாக்கைச் சுழற்றுவார்களேயானால் அவர்களைவிட மனிதநேய மற்ற மாக்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.
தனியீழம்தான் ஒரே தீர்வு எனும் டெசோவின் குரலைக் கேளுங்கள் கேளுங்கள்!!
வரும் ஆகஸ்டு 5இல் விழுப்புரத்தில் கூடும் டெசோ மாநாட்டில் உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த குரல் ஓங்கி ஒலிக்கப் போகிறது! உலகத் தமிழர்களே எதிர்பாருங்கள்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...