Friday, June 22, 2012

மாண்புமிகு அப்துல்கலாமை சர்ச்சைக்குட்படுத்தவேண்டாம்!


விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவராக முன்பு வந்ததுகூட அவர் சற்றும் எதிர்பாராத ஒன்றுதான். இரண்டாவது முறையாகவும் அவர் தொடர விரும்பியிருந்தால் அந்த வாய்ப்பு எளிதாகவே கடந்த முறை அவரை நாடி வந்திருக்கும்.
இந்த முறைகூட அவர் பெயர் நல்லெண் ணத்தின் அடிப்படையிலேயே முன்மொழியப் பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவது நல்லது என்ற எண்ணம் பொதுவாக இருந்து வருகிறது.
அரசியல் போட்டிகளின் இடையே அவர் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ஒருமித்த முறையில் அவர் தேர்வு செய்யப் படக் கூடிய வாய்ப்பு இருந்திருந்தால் கலாம் அவர்கள் இசைவு தந்திருக்கக் கூடும்.
அந் நிலை இல்லாத சூழலில் அரசியல் போட்டியில் தன்னை ஒரு பாத்திரமாகவோ, பகடைக் காயாகவோ ஆக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை, காரணம் அவர் அரசியல்வாதி அல்லவே!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை எதிர்ப்பதற்குத் தக்கவர் கிடைக்காத நிலையில், கலாம் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொண்டுள்ளனர் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நிலையில்தான் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தாம் அல்ல என்பதை தக்க நேரத்தில் அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், தேவையில்லாமல் கலாம் அவர்களை மய்யப்படுத்தி சர்ச்சைகளைத் தொடருவது பண்பாடானது அல்ல.
அதிலும் ஊடகங்களுக்கு ஏதாவது தீனி தேவைப்படுகின்றது. அதனால்தான், அப்துல் கலாம் அவர்கள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்ட பிறகும்கூட அவரை மய்யப்படுத்தி சர்ச்சைகளை உருவாக்கும் ஒரு வேலையில் இறங்கியிருக்கின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கலாம் என்று  பயன்படுத்திய வார்த்தையைத் தவறான வகையில் திசை திருப்பி விளையாடிப் பார்த் தனர்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? திடீ ரென்று பி.ஜே.பி. மதச் சார்பற்ற தன்மையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பதுதான். சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்த கலாமை ஆதரிக்கவேண்டாமா என்று பேச ஆரம் பித்துள்ளது.
இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக ஆக்க வேண்டும் - ராம ராஜ்ஜியமாக உருவாக்கப் போகிறோம் என்று சொல்பவர்களா மதச் சார்பின்மைபற்றியும், சிறுபான்மையினர் நலம்பற்றியும் பேசுவது?
அயோத்தியில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை  இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், மக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்த ஆசைப்படுவது அசாத்திய துணிச்சல்தான்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரி, மதிப் பிற்குரிய விஞ்ஞானி மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களை தேவையில்லாமல் சர்ச்சைக்கு உட்படுத்தாமல் இருப்பதுதான் அவருக்குக் காட்டப்படும் தலைசிறந்த மரியாதையாக இருக்க முடியும்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...