Wednesday, June 13, 2012

வருணாசிரமத்தைப் படைத்த கிருஷ்ணனாலேயே அதனை மாற்ற முடியாதாம் கீதை கூறுகிறது


வருணாசிரமத்தைப் படைத்த கிருஷ்ணனாலேயே அதனை மாற்ற முடியாதாம் கீதை கூறுகிறது
கிருஷ்ணனாலேயே மாற்ற முடியாததை மாற்றியமைத்த இயக்கம்தான் எங்கள் இயக்கம்
வேலூர் பெண்கள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம்
சென்னை, ஜூன் 12- பகவான் கிருஷ்ணன் கீதையிலே சொல்லுகிறான் - வருணாசிரம தர்மத்தை நானே படைத்தேன். அதை நானே நினைத்தாலும் என்னால் மாற்ற முடியாது என்கிறார் கிருஷ்ணன். அப்படி கடவுளாலேயே மாற்றப்பட முடியாததை மாற்றிய இயக்கம் இந்த இயக்கம் என்கிறார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
வேலூரில் 30.5.2012 அன்று நடைபெற்ற புத்துலக பெண்கள் எழுச்சி மாநில - திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்
தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்து அதற்கு மேலும் இந்த இயக்கத்தை வலிவோடும், பொலிவோடும் நான்கு ஆண்டுகள் நடத்தி திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றிலே தனித்துவம் வாய்ந்த சுவடைப் பதித்து மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற அன்னை மணியம்மையார் அவர்களைத் தந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலூர் மாநகரத்திலே பெண்கள் புத்துலக மாநாடு என்ற பெயராலே மிகச் சிறப்பான ஒரு மாநாடு மிக அருமையாக காலையில் இருந்தே கருத்தரங்கம் - பட்டிமன்றம் - கலை நிகழ்ச்சிகள் என்று பலவகை களிலும் சிறப்பாக நடந்தன.
எழுச்சியூட்டும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றது.
திறந்த வெளி அரங்கத்திலே இவ்வளவு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மகளிரால் மட்டுமே நடத்தப்படுகின்ற மாநாடு என்ற பெருமைக்குரிய மாநாடு இது. எப்படி ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்கு இலக் கணமான ஒரு மாநாடு.
மாநாடு இவர்களால் நடத்த முடியுமா?
வேலூரிலே மாநாடு நடத்த வேண்டும் என்று கேட்கிறார்களே மகளிர்களால் சிறப்பாக நடத்த முடியுமா? என்று நினைத்தோம். ஆனால் வேலூரிலே கோட்டை எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அதை விட கொள்கைத் தெளிவாக இருக்கிறது என் பதைக் காட்டக் கூடிய வண்ணம் மிக அருமையாக எல்லோரும் காலையிலிருந்து கருத்து விருந்து அளித்தார்கள்.
கண்ணுக்கு விருந்து செவிக்கு விருந்து என்பது மட்டுமல்ல. கொள்கையை எந்த அளவுக்கு சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பார்த்தோம்.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று சொன்னார்கள். ஆரூடம் கணித்தார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தார்களா?
திராவிட இயக்கமா என்று கேட்கிறார்கள். இன்றைக்குக்கூட ஊடகங்கள் சில வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நமது ஏ.பி.ஜே.மனோ ரஞ்சிதம் அவர்கள் சொன்னார்கள் அல்லவா? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
அதுமட்டுமல்ல அவர்களுக்குள்ள உறவு இந்த நகரத்திற்கு எப்படிப்பட்டது என்பதையும் மனோரஞ்சிதம் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் டார்பிடோ ஏ.பி.ஜே.ஜனார்த்தனம் அவர்களுடைய வாழ்விணை யர். டார்பிடோ அவர்களுடைய உறவை வைத்துக் கொண்டு இது எனக்கு மாமியார் வீடு என்று ஏ.பி.ஜே. சொன்னார்.
மாமியார் வீடு இங்குதான்!
எல்லோரும் உறவை சொல்லுகிறார்களே - நமக்கு ஏதாவது உறவு இருக்கிறதா? என்று நான் யோசனைப் பண்ணிக் கொண்டேயிருந்தேன்.
எனக்கும் ஒரு உறவு இருக்கிறது என்று சொன்னால்தான் எனக்கும் ஒரு ஆறுதல் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்தேன்.
எனக்கும் எங்க மாமியார் வீடு இருக்கிறது இன்னமும் கொஞ்சதூரம் போனால் இருக்கிறது.
மண்டல் ஆணையத்திற்காக தோழர்களுடன் இந்த வேலூர் சிறையில்தான் இருந்தேன் (பலத்த கைதட்டல்). இந்த மாமியார் வீட்டிற்கு போனால் வேளை தவறாமல் சாப்பாடு!
நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒழுங்காக சாப்பிட்டது சிறையில்தான். மணி அடித்தவுடனே சோறு வந்து விடும். அது மட்டுமல்லதாயினும் சாலப்பிரிந்து. ஒரு வேளை சிறையில் சாப்பிட வில்லையென்றாலும் அதிகாரி விடமாட்டார்.
அது மட்டுமல்ல ஏழ்மை, வறுமை, மின்வெட்டு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. வெளியில் இருந்தால் மின்வெட்டு, பணவெட்டு, எல்லா வெட்டும் உண்டு. ஆனால் சிறைச்சாலைக்கு வந்து விட்டால் அந்தப் பிரச்சினை இல்லை.
ஆகவே இந்த வேலூருக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அந்த வகையில் இது அற்புதமான நிகழ்ச்சியாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.
கொள்கையை சொல்லும் பேரணி
எல்லாத் துறைகளிலும் இந்த மாநாடு எடுத்துக் காட்டாக இருந்தது என்பதற்கு அடையாளம். நான் பேரணியைப் பார்த்தேன். பெரும்பாலும் மகளிர் களே வந்தார்கள்.
பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தி வந்தார்கள். மற்ற முழக்கங்களை ஒலித்துக் கொண்டு வந்தார்கள்.  தோழியர்கள் எல்லாம். ஒருவரும் சளைக்கவில்லை. ஒருவரும் கால் வலிக்கிறது என்று சொல்லவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியில் வந் தார்கள்.
எங்களுடைய பேரணியில் ஆடம்பரம் கிடை யாது. எங்களுடைய பேரணி என்றால் கொள்கை முழக்கங்களைக் கொண்ட கொள்கைகளை சொல்லிக் கொடுக்கின்ற கொள்கைப் பிரச்சாரப் பகுத்தறிவு வகுப்புகள் மக்களுக்கு. மிக அருமையாக சிறப்பாக பேரணியில் கொள்கை முழக்கங்களை சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
ஏன்? எதற்கு என்று கேட்காதே!
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று சொன்னார்களே யாரையும் வைவதற்காக பெரியார் இதை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வில்லை. இன்றைக்கு அந்தக் கடவுளைக் காட்டித் தானே ஜாதியை நிலைநாட்டி வைத்திருக்கின்றான்.
ஜாதிக்கு மூலாதார வேர் எங்கே இருக்கிறது? மூலாதாரம் எங்கே இருக்கிறது? அதற்கு அடித்தளம் எங்கேயிருக்கிறதென்றால் மதம். மதத்தினுடைய தத்துவம் வர்ணாஸ்ரம தர்மம்.
மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது. பகவத் கீதையிலே, இராமாயணத்திலே, பாரதத்திலே இவை எல்லாம் புனிதமானவை. ஏன்? எதற்கு? என்று கேட்கக் கூடாது. நம்பு, நம்பு என்று சொல்லி இவைகளை நம்ப வைத்தார்கள்.
அந்த சாஸ்திரத்திற்கு என்ன பெருமை? மதங் களால் உருவானது. கடவுளால் எழுதப்பட்டது.
அப்படி என்றால் அந்தக் கடவுள் யாரால் உற்பத்தி செய்யப்பட்டது என்று அடுத்த கேள்வியை பெரியார் கேட்டார். எனவே பெரியாருக்கு நேரடி யாக, கடவுள் பக்தனோடு சண்டை போட வேண் டும் என்ற எண்ணம் கிடையாது. அவர்களை மாற்ற வேண்டும். திருத்தவேண்டும் என்று நினைத்ததால் தான் தோழர்களே அவர்களுக்கு அந்த எண்ணத் திற்கு வந்து மிகத் தெளிவாகச் சொன்னார்.
வேறு கட்சிகள் ஊர்வலம் நடத்தினால் கடைகள் மூடப்படும்
பேரணியில் எங்கள் தோழியர்கள் தீச்சட்டி ஏந்திக் கொண்டு எங்கள் தோழர்கள் முழக்கங்களை முழங்கிக் கொண்டு கடவுள் மறுப்பாளர்களாக வந்தார்களே இதனால் யாருக்கு என்ன நட்டம்?
பல கட்சிகள் ஊர்வலம் நடத்தினால் கடைகளை எல்லாம் மூடிவிடுவார்கள். எங்களுடைய இயக்கம் பேரணியை நடத்தினால் ஒரு சிறு துரும்பு கூட யாருக்கும் சங்கடம் இருக்காது (பலத்த கைதட்டல்).
பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற் றிலே ஒரு கிளர்ச்சியினாலே மக்களுக்குப் பொது வாழ்க்கையிலே யாருக்காவது சிரமம் ஏற்பட்டதா? பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்பட்டதா? பொது ஒழுங்குக்குக் கேடு ஏற்பட்டதா? என்று பார்த்தால் எதுவுமே இல்லை. இதுதான் ரொம்ப மிக முக்கியமான ஒரு அம்சம்.
காரணம் என்ன? கட்டுப்பாடு. மனித நேயம். மனிதர்களை மனிதர்களாக மதிக்கிற இயக்கம். மற்றவர்களையும் மனிதர்களாக்க வேண்டும்.
மனிதர்களாக ஆக்குவதுதான் கடினம்
நமது நாட்டில் மனிதர்களாக ஆக்குவதுதான் கடினமான ஒன்று. இந்த நாட்டில் சாமியார் ஆவது ரொம்ப சுலபம். அதுவும் இப்பொழுது எவ்வளவு சுலபம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
கொஞ்சம் சாயம் பூச வேண்டும். அவ்வளவு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதிலும் இப்பொழுது சாமியார்கள் எல்லாம் எவ்வளவு சிறந்த நிலையில் இருக்கிறார்கள். தவயோகத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் செய்கிற தவமும் எப்படிப் பட்டது? மடாதிபதிகள் எல்லாம் எவ்வளவு அற்புதமாக தவம் செய்கிறார்கள் என்பதை எல்லாம் அவர்களே விளக்கிச் சொல்லுகிறார்கள்.
இரண்டு மடாதிபதிகளுக்குள்ளே சண்டை வந்தால் எத்தனையோ விசயம் வெளியே வருகிறது.
கடவுள் உண்டு என்பவன்தான் கடப்பாரையைத் தூக்குகிறான்
கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இதுவரை யில் கோவிலை இடித்தது இல்லை. மசூதியை இடித்தது இல்லை. சர்ச்சை இடித்தது இல்லை. அதே நேரத்தில் கடவுள் உண்டு என்பவன்தான். கடப்பாரையைத் தூக்கியிருக்கின்றான். என் கடவுள் அது அல்ல எங்க கடவுள் இங்குதான் பிறந்தார். அந்த இடத்தில் நீ கோவிலைக் கட்டிவிட்டாய். மசூதி கட்டிவிட்டாய் என்று ஒருவன் கடப்பாரையைத் தூக்குகின்றான்.
இல்லை இல்லை எங்கள் கடவுள் இங்குதான் இருந்தார். அங்கு நீ பாலம் கட்டாதே என்று சொல்லி ரூ.2,500 கோடி ரூபாய் செலவில் மக்களுக்குப் பயன்படக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். பக்தி என்பதன் பெயராலே இந்த நாட்டிலே எவ்வளவு பெரிய வளர்ச்சி தடைபடுகிறது என்று பாருங்கள். எவ்வளவு பெரிய மனித நேயம் அழிபடுகிறது என்று பாருங்கள்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை இங்கு மிகச் சிறப்பாக நடத்திக்காட்டினார்கள்.
முதலில் காவல்துறையினர் கூட கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் அதைப் புரிந்து கொண்டு கேட்டபொழுது மறுபடி ஒத்துழைப்புக் கொடுத் தார்கள். அவர்களுக்கு எங்களது உளப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுக்குக் காவல் துறை தேவையில்லை
எங்களுக்குக் காவல் துறை தேவையில்லை. கறுப்புச் சட்டைக்காரரைவிட இந்த நாட்டுக்கு காவலாளி வேறு யார் தேவை? கறுப்புச்சட்டைக் காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் (கைதட்டல்). எங்களுடைய இனத்திற்கே பாதுகாப்பு.
மற்றவர்களைப் போல கறுப்புப்படை, பூனைப் படை, அந்தப் படை இந்தப் படை இதெல்லாம் கிடையாது. எங்க படையே போதும். தெளி வாகவே மக்கள் நலப் பணிகளை செய்து கொண்டி ருக்கின்ற ஓர் அற்புதமான இயக்கம்.
கடவுளை வைத்துத்தானே ஜாதியைச் சொல்லு கிறார்கள். கிருஷ்ணன் என்று ஒருத்தன் பகவத் கீதையை எழுதியிருக்கின்றான். இதைத்தான் பிரமாதமாகப் பேசுகிறார்கள். படித்தவர், படிக்காதவர், நீதிமன்றத்திற்குப் போகக் கூடியவர் எல்லோரும் சொல்கிறார்கள்.
பகவான் கண்ணன் கீதையிலே சொன்னபடி என்று சொல்லுகிறார்கள். ஒருத்தரும் கீதையை ஒழுங்காகப் படித்ததில்லை.
ராமகோபாலன் என்பவர் பகவத்கீதை என்ற நூலை கலைஞரிடம் கொடுக்க வந்தார். கலைஞர் யாரால் தயார் பண்ணப்பட்டவர்? கலைஞர் படித்த பள்ளிக்கூடம் ஈரோட்டுப் பள்ளிக்கூடம்.
ராமகோபாலன் கலைஞருடைய வீட்டிற்கே வருகிறார் என்றவுடன் தி.மு.க. தோழர்கள் பதற்றமாக இருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.
ஒன்றும் இல்லை நீங்கள் பேசாமல் இருங்கள். அவர் வந்தால் நான் சந்தித்துக் கொள்கிறேன் என்று தனது தோழர்களுக்குச் சொல்லி விட்டார்.
ராமகோபாலன் கலைஞர் வீட்டிற்கு வந்தார். அவரை வரவேற்றார்கள். ராமகோபாலன் அய்யர் கலைஞரிடம் பகவத் கீதையைக் கொடுத்தார்.
ராமகோபாலனுக்கு கலைஞர் கொடுத்த அதிர்ச்சி
கலைஞர் என்ன செய்தார்? அவருடைய முத் திரையை செய்தார். ஏனென்றால் ஈரோட்டு முத்திரை. வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் புத்தகத்தை முன்னமேயே தயாராக கொண்டு வந்து வைத்திருந்து அதை உடனே ராமகோபாலனுக்கு இந்தாருங்கள் பிடியுங்கள் என்று கொடுத்துவிட்டு எனக்கு உடனே ஃபோன் பண்ணினார்.
ராமகோபாலன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவர் கீதையைக் கொடுத்தது அடிபட்டு போய் விட்டது. கலைஞர் கீதையின் மறுபக்கம் கொடுத்தது அதனுடைய விளைவு என்ன ஆனது? காவல்துறையிலிருந்து மற்ற துறையிலிருந்து பெரியார் திடலுக்குப் படை எடுக்கிறார்கள்.
காரணம் அப்பொழுது கலைஞர் முதலமைச் சராக இல்லை. அப்பொழுது வேறு ஆட்சி இருந்தது.
கீதையின் மறுபக்கம் என்ற நூலை கலைஞர் கொடுத்திருக்கிறாரே - அந்தப் புத்தகம் எங்கேயிருக் கிறது? எங்கேயிருக்கிறது என்று மற்ற இடங்களிலும் பெரியார் திடலிலும் தேடினார்கள்.
கீதையின் மறுபக்கம் இன்னொரு பதிப்பு கூடுதலாக
அதனுடைய விளைவு என்ன ஆனது? இன் னொரு பதிப்பு கூடுதலாகப் போட்டு பரவியது. எங்களைப் பொறுத்தவரையிலே எப்பொழுதுமே நாங்கள் விளம்பரப்படுத்துவதைவிட எதிரிகள் கொடுக்கிற விளம்பரத்தினால்தான் இந்த இயக்கமே வளர்ந்து வருகிறது (கைதட்டல்).
இன்றைக்கு நாங்கள் இந்த பகுத்தறிவுப் பணியை செய்கிறோம் என்றால் யாரையும் புண்படுத்த அல்ல. மக்களைப் பண்படுத்த.
கடவுளைக் காட்டி கீதையில் எழுதப்பட்டிருக் கிறது பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர் கள் என்று. ஒரு தாய் வயிற்றிலிருந்து நாம் பிறந்த வர்கள் அல்லவா?
கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன் என்று பகவான் கண்ணன் சொல்லுகிறான். இப்படி உண்டாக்கினேன் என்று சொல்லிவிட்டு, அவனவன், அவனவன் குல தர்மத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். வேறு எதையுமே பின்பற்றக் கூடாது.
அரசியல் சட்டத்தையே மாற்றுகிறார்கள்
பகவான் கண்ணன் சொல்லுகிறான். இதை நான் தான் உண்டாக்கினேன் இதை யாராலும் மாற்ற முடியாது. நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று சொல்லுகின்றான். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பாருங்கள்.
அரசியல் சட்டத்தை உருவாக்கினார்கள். அதிலேயே காலத்திற்கு ஏற்ப நூறு திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டார்கள்.
கண்ணன் சொல்லுகிறான் நானே நினைத்தாலும் மாற்ற முடியாது எதை? சூத்திரத்தன்மையை.
கடவுளால் கூட மாற்றப்பட முடியாதாம்!
கடவுளாலே மாற்றப்பட முடியாத சூத்திரத் தன்மையை மாற்றி மனிதனாகக் காட்டிய இயக்கம் ஒன்று உண்டென்றால் அதுதான் திராவிடர் இயக்கம். அந்தத் தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
(தொடரும்)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...