Wednesday, June 27, 2012

தலைக்கவசம் உயிர்க்கவசம்


சைக்கிள் என்பது இப்பொழுது அரிதாகி விட்டது. இரு சக்கர மோட்டார்கள், ஸ்கூட்டர்கள் நடமாட்டம் பெருகிவிட்டது. இது ஏதோ மாநகர, நகர்ப் புறங்களில் மட்டுமல்ல - கிராமப்புறங்களிலும் இன்று அதிக புழக்கத்திற்கு வந்துவிட்டன. இது ஒரு வளர்ச்சிப் போக்கின் அடையாளம் என்பதில் அய்யமில்லை.
அதேபோல, நான்கு சக்கர வாகனங்களும் (கார்களும்) பெருகிவிட்டன. இதன் காரணமாகப் போக்குவரத்துப் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறுகிறது.
இதில் மாணவர்கள், இளைஞர்கள் என்பவர்கள் இரு சக்கர மோட்டார்களில் பயணம் செய்யும் முறை, போகும் வேகம் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இதன் காரணமாக சாலை விபத்துக் கள் அன்றாடம் நடந்துகொண்டே இருக்கின்றன!
விபத்துகள் நடந்தாலும் உயிர் பிழைக்கவேண் டும் என்பதற்காகவே தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியவேண்டும் என்று அரசும், போக்குவரத்துக் காவல்துறையும் கூறுகின்றன.
சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக சாலை விபத்துக்குப் பலியாவோர் 1500 பேர்கள். இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் பலியாவோர் எண்ணிக்கை 375 பேர்.
இதில் 95 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்று காவல்துறை தரும் புள்ளி விவரம் கூறுகிறது.
தலையில் காயம் இல்லை என்றால், பெரும் பாலும் பிழைக்க வைக்க வாய்ப்புண்டு. தலைக் கவசம் அணிந்திருந்தால் தலையில் காயம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
இந்த உண்மை வெளிப்படையாகத் தெரிந் திருந்தும், படித்தவர்களேகூட தலைக்கவசம் அணிவதைத் தவிர்ப்பது அசல் தற்கொலை யல்லாமல் வேறு என்னவாம்?
ஏதோ அரசோ, காவல்துறையோ அவர்களின் நன்மைக்குச் சொல்லுவதாக அல்லது சட்டப்படி சொல்லுகிறார்கள் என்று கருதுகிறார்களே தவிர, வாகனங்களில் செல்லுவோரின் நன்மைக்குத் தான் என்பதைக்கூட எண்ணிப் பார்க்கும் பக்குவமற்றவர்களாக இருப்பது பரிதாபமே!
அபராதம் உண்டு என்று சொன்னாலும்கூட அபராதம் கட்டினால் போச்சு என்ற அலட்சிய மனப்பான்மையில் பயணம் செய்கிறார்கள். காவல்துறையினரும் இதில் கண்டிப்பாக இருப் பதில்லை; கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இந்தத் துணிவில்தான் தலைக்கவசம் அணியாமல் சவாரி செய்கிறார்கள்.
இந்த அணுகுமுறையில் கண்டிப்பாக மாற்றம் வந்தாகவேண்டும். அமைச்சர் ஒருவர் மகனே தலைக்கவசம் அணியாததால் பரிதாபகரமாக மரணம் அடைந்ததைப் பார்த்தாவது வாகன ஓட்டிகள் திருந்திடவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!
போக்குவரத்துத் துறை சற்றுக் கறாராக இருக்கவேண்டும். சிக்னலை மதிக்காமல் செல்லு பவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்கவேண்டும் - பச்சை விளக்கு வந்த நிலையில், பாதசாரிகள் நடக்க ஆரம்பித்தாலும் வாகனங்கள் நிற்பதில்லை.
நடந்துசெல்லும் பாதைகளை எல்லாம் வாகனங் கள்தான் ஆக்கிரமிக்கின்றன. இதனை போக்கு வரத்தினைஒழுங்குப்படுத்தும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கண்டுகொள்வதில்லை.
நடைபாதைகளில் குட்டிக் குட்டிக் கோயில்கள் (உண்டியலுடன்) வேறு!
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் நம் அமைச்சர்களும், நமது அதிகாரிகளும் எதைத் தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.
போக்குவரத்தினை ஒழுங்கு செய்வதில் சற்றுக் கடுமை காட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுமக்களும், அலுவலர்களும் மனது வைத்தால் சாலை விபத்துகள் அருகிட அதிக வாய்ப்பு உண்டு.
உயிர்மீது ஆசை உள்ளவர்கள் சிந்திக்கட்டும்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...