Tuesday, June 26, 2012

இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு...


மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியுள்ள தகவல்களும். கருத்துகளும் மிக முக்கியமானவை.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனைத்து மத, அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல சமயத் தலைவர்கள் அடங்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு பின்னால், தமிழர்களின் பகுதிகளை மறு கட்டமைப்பு செய்வதாகக் கூறிய ராஜபக்சேவின் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் அதிகளவு ராணுவ மயமாக்கல் திணிக்கப் பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டினர் அளிக்கும் உதவியோடு கட்டப்படும் வீடுகள் சிங்களர்களுக்கே கையில் கொடுக்கப்படுகிறது. கோவில்கள், கிறித்துவ தேவாலயங்கள், மசூதிகள் தொடர்ந்து தாக்கப் படுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேலான இந்துக் கோவில்களும், 300-க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.  கிறித்துவ தேவாலயங்களை தகர்ப்பதோடு, கத்தோலிக்க பாதிரியார்களை கொலை செய்தும் கடத்தியும் சென்று விடுகின்றனர். இலங்கை அரசின் அடக்குமுறைகளை உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்குவாழ இனி வாய்ப்பே இல்லை.
எனவே, அய்க்கிய நாடுகள் சபையும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஆணையமும், உடனடியாகத் தலையிட்டு, தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்தும், திட்டமிட்ட அழித்தொழிப்பு குறித்தும் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும்  இவ்வாறு பேராயர் கூறினார். அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இஸ்லாமியர்கள் உட்பட 11 அமைப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்றை இந்த இடத்தில் குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்கள ராஜபக்சே இன வெறி அரசைப் பொறுத்தவரையில் இந்துக்களாக இருந்தாலும் சரி, சைவர்களாக இருந்தாலும் சரி, கிறித்துவர்களாக இருந்தாலும் சரி, முசுலிம்களாக இருந்தாலும் சரி - அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் தமிழர்களாக இருக்கும் மாத்திரத்திலேயே, தங்களின் பகைவர்களாக, வெறுப்புக்கு உரியவர்களாகவே கருதுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
இலங்கையில் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் - அங்கே தீவிரவாதமும் போராளிகளால் தலைதூக்கி நிற்கிறது  என்று வாய்க் கூசாமல் பேசுகிறவர்களும், கைக்கூசாமல் எழுதுகிற எழுத்தாளர்களும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்ச்சுகளும், மசூதிகளும் சிங்கள அரசின் துணையோடு இடிக்கப்படுகின்றனவே - இவர்கள் எல்லாம் தீவிரவாதி களா?
இலங்கைத் தீவில் மூர்க்கத்தனமான போர், குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டு - அதன் தொடர்ச்சியாக இலங்கை அதிபர் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் இது.
அய்.நா.வின் மனித உரிமை அமைப்பு ஜெனீவாவில் கூடி ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான முகாந்திரம் இருப்பதை ஒப்புக் கொண்டு, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தினை இடிக்கும் மூர்க்கத்தனத்தில் சிங்கள மக்கள் இறங்குகிறார்கள் - அதற்கு அரசின் ரத கஜ துரக பதாதிகள் துணை போகி றார்கள் என்றால், எந்தத் தைரியத்தில் இவை நடக்கின்றன?
அய்.நா. மிரட்டினாலும் சரி, உலக நாடுகள் கண்டனம் செய்தாலும் சரி, தமிழன் அழிப்பு என்பதில் பின்வாங்கப் போவதில்லை என்று முகத்தில் அறைந்து சொல்லுவது போன்றதல்லவா இந்த நடவடிக்கைகள்?
உலகின் கிறித்துவ நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனவே - அவை இந்தப் பிரச்சினையில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
இலங்கை மீதான போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு உரிய தண்டனை வழங்குவதில் அய்.நா. சுணக்கம் செய்யுமேயானால் மேலும் மேலும் தமிழர்களுக்கு அதிக தொல்லையும், வாழும் உரிமைகளுக்கான கேள்விக் குறியும் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்ற சட்டரீதியான பொன்மொழியை இந்த இடத்தில் நினைவு கொள்வது பொருத்தமே.
இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு ஒரு வேண்டு கோள். ஈழப் போராளிகளுடன் அங்குள்ள சிறுபான்மை மக்கள் முரண்பட்டு வாழ்கிறார்கள் என்ற செய்தி ஒன்று கடலைத் தாண்டி உலவிக் கொண்டிருப்பது உண்மையே.
இது உண்மை என்றால், இதற்குப் பிறகாவது மதம் உள்ளிட்ட தடைகளைக் களைந்து தமிழர்கள் வாழ்வுரிமை - சுயமரியாதை வாழ்வு காப்பாற்றப்பட சிறுபான்மையினர் ஓரணியில் நிமிர்ந்து நிற்பார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...