Friday, June 8, 2012

முதல் அமைச்சருக்குத் தெரிந்துதான் நடந்ததா? முதல் அமைச்சர் தலையிடுவாரா?




திருச்சி - அரசு பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்குச் சூட்டப்பட்டிருந்த பெரியார், அன்னை மணியம்மை பெயர்களை நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மேலே காட்டியுள்ள ஆணை 3 நாள்களுக்கு முன் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பெயரில் வந்துள்ளது; இப்படி ஒரு மாற்றத் திற்குரிய காரணங்கள் என்னவென்பது புரியவில்லை.
இதனுடைய வரலாறு என்ன?
இதனுடைய வரலாறு தற்போதுள்ள தமிழக அரசுக் கும், முதல் அமைச்சர் அவர்களுக்கும் தெரிய வேண்டும்.
1965-66-லேயே திருச்சியில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி (பெரிதும் ஒடுக்கப்பட்ட சமுதாய ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தவர்கள் பயன்பட) வர வேண்டும் என்பதற்கு, தந்தை பெரியார் அவர்கள் தமது அறக் கட்டளையிலிருந்து அய்ந்தரை லட்ச ரூபாய் (5.5. லட்சம் ரூபாய்கள்) தமிழக அரசு, அந் நாள் முதல் அமைச்சர் எம். பக்த வத்சலம் அவர்களிடம் கொடுக்கப் பட்டது. அந்தக் கல்லூரிக்குபெரியார் ஈ.வெ.ரா. அரசினர் கலை அறிவியல் கல்லூரி என்றும் அரசால் பெயர் சூட்டவும் பட்டது. அன்று முதல் இன்று வரை பல்லாயிரம் மாணவர்கள் படித்து பட்டதாரியாகி, அதில் சிலர் நாடாளுமன்றவாதிகளாகவும் ஆகியுள்ளனர்! அந்த நிலையில், திருச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலம் காக்க ஒரு பிரிவு (Pediatric Ward) இல்லை என்ற குறையைப் போக்க நினைத்த அந்நாள் மருத்துவத்துறை இயக்குநர் (டைரக்டர் ஆஃப்மெடிகல் சர் வீஸ்) டாக்டர் ஏ.பி. மரைக்காயர் அவர்கள் என்னிடமும், தந்தை பெரியார், அன்னை மணியம் மையார் ஆகியோரிடமும் இத் தேவையைக்கூறி, நன்கொடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்!
இதை அம்மா, அய்யாவிடம் சொன்னவுடன், அய்யா அவர்களும் (1966-ல்) நிச்சயம் உதவுவோம் என்று கூறி விடுங்கள் என்றார்கள்.
அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது...
அதன்படி ஒரு லட்ச ரூபாயை பெரியார் அறக் கட்டளை சார்பில் அய்யா அவர்கள் அளிப்பதாக அறிவித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் 1967-இல் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அந்த நிலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் அய்யா காசோலை (Cheque) தந்து, என்னை முதல்வர் அண்ணா அவர்களிடம் நேரில் சென்று கொடுத்து விட்டு வருமாறு பணித்தார்கள். நான் அண்ணாவை ஆட்சிக்கு அவர் வந்தவுடன் அவர் வீட்டில் சந்தித்த முதல் சந்திப்பு அது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அய்யாபற்றி விசாரித்து வணக்கம் தெரிவிக்கும்படிக் கூறி, காசோலையைப் பெற்றுக் கொள்ள அன்றைய மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சாதிக் பாட்சா அவர்களையும் உடன் வரச் சொன்னார்.
என்ன அண்ணா, தந்தை பெரியார் இன்னும்கூட கூடுதல் தொகை கொடுத்திருக்கலாமே! என்று சொன்னவுடன், முதல்வர் அண்ணா குறுக்கிட்டு சாதிக் உனக்குத் தெரியாது எனக்கும், வீரமணிக்கும் தெரியும். அய்யாவைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய தொகை இது தெரியுமா? என்று சிரித்துக் கொண்டே நன்றி கூறுங்கள் என்றார்.
முதல்வர் அண்ணா பங்கேற்றார்
ஒரு சில வாரங்களுக்குப்பின் திருச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு 2,3 நாள்கள் நடைபெற்றது. அதில் ஒன்பது அமைச்சர்களும் கலந்து கொண்டனர்; அந்த நேரத்தில் அய்யா அம்மாவையும் அவ்விழாவிற்கு அழைத்து, குழந்தைகள் பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழா மிகவும் சிறப்பான அரசு விழாவாக நடைபெற்றது.
அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதில் முதல் அமைச்சர் அண்ணாவின் உரை அற்புதமான உரை; அய்யா அவர்கள் இறுதியாக உரையாற்றினார்கள் 31.1.1968.  (3ஆம் பக்கம் காண்க).
அதிமுக ஆட்சியில் பெரியார் மணியம்மை பெயர் இருக்கக் கூடாதா?
அந்தக் கட்டடம் கட்டி இயங்கத் துவங்கி, சுமார் 44 ஆண்டுகள் ஆகி, நடைமுறையில் இருந்து வந்த ஆவணங்களில் இப்படி திடீரென்று மாற்ற ஆணை பிறப்பித்தது என்ன நியாயம்? இதற்கு என்ன தேவை? என்ன நோக்கம்?
பெரியார் - மணியம்மை பெயர்  அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருக்கக் கூடாதா?
அண்ணா செய்ததைக்கூட இப்படி மாற்றுவது அசல் விஷமத்தனம் அல்லவா இது! ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளின் சில்லறை விஷமம் அல்லாமல் வேறு என்ன?
ஏற்கெனவே அண்ணா ஆட்சி; கலைஞர் ஆட்சி (தி.மு.க. ஆட்சி) அதன்பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி, (இந்த ஆட்சியே இரண்டு முறைகள் இருந்தபோதும்) மாற்றப்படாமல் இருந்ததே இப்பொழுது திடீரென்று இப்படி ஒரு மாற்ற ஆணை ஏன்?
முறைப்படி முதல்வரிடம் முறையீடு!
நேற்று கொதித்தெழுந்தார்கள் - திருச்சி வாழ் பொது மக்கள் - கட்சி, ஜாதி, மத வேறுபாடு இன்றி! முக்கிய பொறுப்பாளர்கள் ஆவேசப்பட்டனர். எந்தவித ஆர்ப்பாட்டம், கிளர்ச்சிகளில் இதற்காக ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிகாரம் தேடிட, பழைய நிலை நீடிக்க முயலுவோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை
அது தாமதமின்றி, உடனடியாக நியாயம் கிடைக்காவிடில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று சமாதானப்படுத்தியுள்ளோம்!
தமிழக முதல் அமைச்சர் அவர்கள் நிலைமையைத் தெளிவுபடுத்தி, ஏற்கெனவே இருந்தபடி (Status Quo Ante) ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...