Sunday, April 22, 2012

உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?


சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான பிரச்சினை ஒரு முக்கிய புள்ளிக்கு நகர்ந்திருக்கிறது. அறிவி யலுக்கு மாறான ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து போட்டு அத்திட்டத்தை முடக்கப் பார்த்தனர்.
17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமனால் கட்டப்பட்ட பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூறக் கூடிய மதவாத சக்திகள் இந்தியாவில் இருக்கின்றன.
இந்தியா முன்னேற்றம் பெறாமல் இருப்பதற்கு இந்த மதவாத புத்திதான் முக்கிய காரணம் என்று பல வரலாற்றாளர்களாலும் கூறப்பட்டுள்ளது - நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இந்த அடாத செயல் மேலும் நிரூபிக்கிறது.
மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  (51 ஹ- () கூறுகிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனை அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே - ஒரு மத்திய அரசு தொடக்கத்திலேயே ராமன் பாலம் என்ற கருத்தோட்டம் கிளம்பியபோது, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா?
மெத்தப் படித்த மேதாவிகள் நிறைந்த உச்ச நீதி மன்றம், ராமன் பாலம் என்ற கருத்துருவை முன் வைத்த அந்தக் கணத்திலேயே அதனைத் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே அனுமதிக்கத் தகுந்ததல்ல, உகந்ததல்ல என்று தள்ளியிருக்க வேண்டாமா?
பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா (ராம் சரஸ் சர்மா) என்ன கூறுகிறார்?
இராமாயண காலத்தில் பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போல தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. கிடைத்துள்ள சான்றுகளின் படி இராமாயணம் எழுதப்பட்டது கி.மு. 400 ஆகும் என்று எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள், கடல்சார் பொறியாளர்கள் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதுதானே முறைமை?
வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் விதண்டாவாதம் பேசும் வெறியர்களின் கூற்றுக்கு உச்சநீதிமன்றம் செவி சாய்த்ததேகூட தேவையற்றதே!
தொல்பொருள் ஆய்வுத் துறையினர், ராமன் என்பதே கற்பனைப் பாத்திரம் - அப்படி இருக்கும் போது ராமன் பாலம் எங்கிருந்து வந்தது? என்று அறிக்கை கொடுத்த நேரத்தில், மத்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த கொடுமையை என்னவென்று சொல்ல!
உனக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று பரிசோதித்துச் சொன்ன மருத்துவர் மீது கோபப்பட்ட நோயாளிகளின் நிலைக்கு மத்திய அரசு ஆளாகலமா?
பாதி பி.ஜே.பி. மனப்பான்மையோடு  மத விடயத்தில்  காங்கிரஸ் தள்ளாடுவதால்தான் இந்த நேரக் கேடும், பொருள் கேடும், மக்கள் நலக்கேடும் ஆகும்.
நாக்பூரில் உள்ள நீரி என்ற தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு நிலையம் தேர்வு செய்த பாதைதானே கடல் நீர்த்தடம் 6 ஆவது பாதை.
இந்தப் பாதையை ஏற்றுக் கொண்டதும் பி.ஜே.பி. ஆட்சிதானே? இப்பொழுது எங்கிருந்து வந்து குதித்தான் இந்தத் தசரதராமன்?
இதில் உச்சநீதிமன்றம் தெளிவாக இருந்து மதச் சார்பற்ற கண்ணோட்டத்தோடு, விஞ்ஞான மனப் பான்மையோடு செயல்படும் என்று இந்தியா மட்டுமல்ல - உலகமே எதிர்பார்க்கிறது. இந்தியா இன்னும் மதவாதக் குட்டையில் கிடக்கிறதா? அல்லது விஞ்ஞான மனப்பான்மையோடு செயல்படுகிறதா? என்பது இதன் மூலம்தான் உறுதி செய்யப்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...