Sunday, April 22, 2012

வென்றார் சூகி


66 வயதை அடைந்த சூகி மியான்மாவில் நடைபெற்ற 44 இடங்களுக்கான இடைத் தேர்தலில் 43 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று, உலக மக்களின் கண்களையும், கருத்துக்களையும், தன் பக்கம் மிக அதிகமாகவே ஈர்த்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் எதேச்சதிகாரத்துக்கு இடமில்லை என்பதற்கான வெளிச்சம் மிகுந்த அடையாளம் இது. 1990இல் மியான்மாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி 86 விழுக்காடு பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியது என்றாலும், அதனைப் புறந்தள்ளி இராணுவ ஆட்சி, தன் நங்கூரத்தைப் பாய்ச்சியது.
சூகியின் கட்சி, தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றதாக இராணுவ ஆட்சி சொன்னது நல்ல கொழுத்த நகைச்சுவையாகவே கருதப்பட்டது - விமர்சிக்கவும் பட்டது.
இராணுவ ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஒரு ஜனநாயகக் கட்சி தில்லுமுல்லு செய்யும் என்று சொன்னால் அதைக் கேட்பவர்கள் எள்ளி நகையாடவே செய்வர்.
என்ன செய்வது! இராணுவ ஆட்சி, தன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா? ஊரையும், உலகத்தையும் ஏமாற்றத்தான் தேர்தல் நாடகம் எல்லாம்!
குழிபறித்ததும் அல்லாமல், ஆளை அந்தக் குழியிலேயே தள்ளிய குதிரை போல இராணுவ ஆட்சி, வெற்றி பெற்றவர்களை சிறையில் தள்ளி, தன் ஆணவத்தினைக் காட்டிக் கொண்டது.
சூகியின் தந்தையும் ஒரு போராட்ட வீரர். அன்றைய பர்மாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்.
சுதந்திர பர்மாவின் முதல் ஆட்சித் தலைவராகப் பதவியேற்கவிருந்த அவர் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த வகையில் சூகி இயல்பாகவே போராட்டக் குணம் கொண்டவராக இருந்தார். 8.8.1988இல் அன்றைய பர்மாவில் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. சூகியும் அதில் பங்கு கொண்டார் விளைவு - வீட்டுக் காவல் சூகிக்கு!
சிறை வைக்கப்பட்ட  சூகிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிசை நேரில் சென்று பெற்றுக் கொள்வதற்குக்கூட மியான்மா இராணுவ ஆட்சி அனுமதிக்கவில்லை. அவரின் மூத்தமகன் அலெக்சாண்டர்தான் சூகி சார்பில் சென்று நேரில் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
இன்னும் பெரிய கொடுமை, புற்றுநோயால் அவதிப்பட்ட லண்டனில் இருந்த தன் கணவரைச் சென்று சந்திக்கக்கூட மியான்மாவின் இராணுவ ஆட்சி அனுமதிக்கவேயில்லை. கணவரின் மரண நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ள முடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில் இருந்தார்.
சூகி, இங்கிலாந்து செல்ல வேண்டுமானால் மீண்டும் மியான்மாவுக்குத் திரும்பக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தது இராணுவ ஆட்சி. அதனை சுதந்திரமும், சுயமரியாதை எண்ணமும் கொண்ட சூகி ஏற்றுக் கொள்ளவில்லை. மடிந்தாலும், தம் தாய் நாட்டிலேயே மடிவது என்பதிலே தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
இப்படி அவரின் குடும்ப வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் துயரமான நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!!
இருந்தாலும் அந்நாட்டு மக்கள் அவரை நேசித்தார்கள் - நேசித்துக் கொண்டும் இருக்கிறார் கள். டாவ் என்று அன்பாக அழைக்கிறார்கள், போற்றுகிறார்கள். பர்மிய மொழியில் அந்தச் சொல்லுக்கு அத்தை என்று பொருள், வித்தியாச மான அழைப்புதான்.
இப்பொழுது நடைபெற்ற தேர்தல் இடைத் தேர்தல்தான்; இராணுவ ஆட்சி முறையான முழு தேர்தலை நடத்தும் பட்சத்தில் ஆங்சாங் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும் - ஆட்சித் தலைவராகவும் மலர்ந்து மணம் வீசுவார் சூகி என்பதில் அய்யமில்லை.
அந்தக் கால கட்டம், உலகில் எஞ்சியிருக்கும் சர்வாதிகாரிகளுக்கு - இனவெறி ஆட்சி நடத்து வோருக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை. வாழ்க சூகி!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...