Wednesday, April 11, 2012

குஜராத் மாநிலத்தில் 23 பேர்களுக்குத் தண்டனை


கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் முழு முயற்சியால் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள் இடிக்கப்பட்டன அல்லது தீ வைத்துக் கொளுத்தப் பட்டன.
ஓடே என்னும் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 சிறுபான்மையினர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். வழக்குகளைகூட மோடி அரசு ஒழுங்காகப் பதிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணையினால் மீண்டும் குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டன. சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த ஆணையிடப்பட்டது. 23 பேர்கள் துடிக்கத் துடிக்க எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 47 பேர்மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. இதில் 23 பேர்கள் குற்றவாளிகள் என்று பெண் நீதிபதி பூனம்சிங் குறிப்பிட்டுள்ளார். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கு முந்தைய குஜராத் கலவர வழக்கில் 35 பேர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கலவரம் மிகவும் மோசமானதுதான் - ஆனாலும் முதல் அமைச்சர் மோடிக்கும் கலவரத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சோ போன்ற ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையினர் வக்காலத்து வாங்கினர்.
குஜராத் கலவரத்தை அடக்க வேண்டும்; இராணுவத்துக்குச் சுடும் அதிகாரமும் கொடுக்கப்பட வேண்டும் என்று அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் அன்றைய பிரதமர் வாஜ்பேயிக்கு வேண்டுகோள் விடுத்தும் - வாஜ்பேயி காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு கேவலம்!
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் பிற்காலத்தில் மாணவ சமஸ்கிருதி என்ற மலையாள ஏட்டுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலைத் தெரிவித்ததுண்டே!
குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான இனப் படுகொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனேயே நடந்ததாகும். ஏனெனில் அதற்குமுன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு பெருந் தோல்வியைச் சுமந்திருந்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை சில முக்கிய வினாக்களை எழுப்பி யுள்ளது. குஜராத், இந்தியாவின் ஓர் அங்கம் தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டங்கள் குஜராத்துக்கும் பொருந் துமா? என்று பிரபல சமூக சேவகரான அருந்ததிராய் கூறினாரே!
இவ்வளவுக் குற்றங்களும், படுகொலைகளும், சூறையாடல்களும் நடந்திருக்கின்றன என்றால் இவற்றிற்கெல்லாம் மூலப் புத்திரராக - கருவறை மனிதராக  இருந்தவர் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான்.
குஜராத்தில் நடத்தப்படும் கலவரங்கள் தொடர்பாக விசாரணைக்கு  உதவுவதற்காக நியமிக்கப்பட்ட அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் தனது அறிக்கையில் மிகவும் தெளிவாகவே குறிப் பிட்டுள்ளார். முதல் அமைச்சர் மோடிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தயார் செய்ய போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே!
குஜராத் உயர்நீதிமன்றமும், டில்லி உச்சநீதி மன்றமும் குஜராத் முதல் அமைச்சர் மோடியின் தலையில் மிக ஆழமாகவே குட்டியதுண்டு.
குறிப்பாக இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரால் சுட்டுத் தள்ளப்பட்ட வழக்கின்போது குஜராத் உயர்நீதிமன்றம் உதிர்த்த வார்த்தை குஜராத் காவல்துறையை நம்ப முடியாது என்று கூறி வழக்கினை சி.பி.அய்.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறவில்லையா? காவல் துறையைக் கையில் வைத்துக் கொண்டுள்ள மோடி இதற்குப் பொறுப்பேற்று இருக்க வேண்டாமா?
பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கில் உச்சநீதி மன்றம் மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டதே! அடுத்த பிரதமர் என்று பார்ப்பனர் வட்டாரத்தால் தூக்கி நிறுத்தப்படும் நரேந்திர மோடி அடுத்த தேர்தலுக்குள் சிறைக்குள் செல்லும் வாய்ப்பு இருப்பது மறுக்க முடியாது.


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...