Tuesday, April 17, 2012

திருமலை வெங்கடாசலபதி கோவிலில் நடக்கும் தில்லுமுல்லுகள் (2)


சாராயத் தொழில் அதிபர் விஜய் மல்லய்யா வரும் போதெல்லாம்  அவருடன் சென்று கோவில் வழிபாட்டுக்கு முன்னாள் தேவஸ்தான தலைவர் அவருக்கு சேவகம் செய்ததால், பக்தர்களின் தரிசனம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது என்று  முன்னாள் காவல்துறைத் தலைவர் சூரியநாராயணராவ் கூறுகிறார்.
லஞ்சமும், ஊழலும் திருமலை வாழ்வில் அன்றாட நிகழ்வாகவே ஆகிவிட்டது
லஞ்சமும் ஊழலும் திருமலை வாழ்வில் அன்றாட நிகழ்வாகவே ஆகிவிட்டது. பக்தர் களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டு மென்றால் 1+1 என்ற குறியீட்டுச் சொல்லைக் கூறினால் போதும். காரியம் கச்சிதமாக முடிந்துவிடும். இத்திட்டத்தில் பக்தர் தனது வேலைக்காக இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு ஏ.சி.ரூம் வாடகை 1500 ரூபாய். ஆனால் நான் 3000 ரூபாய் கொடுக்க வேண்டிவந்தது; அத்துடன் தரிசனம் மற்றும் பிரசாதங்களுக்காக மேலும் 2000 ரூபாய் கொடுக்க வேண்டிவந்தது என்று  இந்துப் பூர் வெங்காய வியாபாரி மாதவ ரெட்டி கூறுகிறார். இவ்வாறு கூடுதல் பணம் கொடுக் காவிட்டால், தங்குமிடத்திற்காகவும் மற்றவை களுக்காகவும் பக்தர்கள் இங்குமங்கும் அலையத்தான் வேண்டும்.
செயற்கைத் தனமான தேவை ஒன்றை பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் ஏற்படுத்துவதால், இங்கு லஞ்சம் என்பது அமைப்பு ரீதியாக நியாயப்படுத்தப்படுவ தாகவே ஆகிவிட்டது.
கல்யாண கட்டத்தில் மொட்டை அடித்துக் கொள்ள பணம் ஏதும் தரவேண்டியதில்லை; இலவசம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சிகைக் கலைஞரும் ஒவ்வொரு மொட்டைக் கும் 50 முதல் 100 ரூபாய் வரை வாங்கிக் கொள்கிறார்.இங்கு 500 க்கும் மேற்பட்ட சிகைக் கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களின் சங்கத் தலைவர், கண்காணிப் பாளரிடம் மாமூல் பணம் கொடுக்கும்போது கண்காணிப்புக் கேமிராவில் மாட்டிக் கொண் டார். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அவர், விரைவில் மீண்டும் வேலைக்கு வந்து விட்டார். தேவஸ்தான வெளியீடு விற்பனை நிலையங்கள் மூலைக்கு மூலை இருக்கின் றன; என்றாலும் அவை எப்போதுமே மூடிக்கிடப்பதால் பக்தர்களால் எந்த வெளியீடுகளையும் வாங்க முடிவதில்லை. இத்துறையில் மட்டுமே ரூபாய் 150 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று வழக்கறிஞர் சீனிவாஸ் குற்றம் சாட்டுகிறார்.
பக்தர்களுக்கென பல ஏ.சி. அறைகள் உள்ளன. ஆனால் அவை எப்போதுமே பழுது பட்டிருக்கும். எத்தனை ஏ.சி.கள் செயல்படு கின்றன, எத்தனை பழுது அடைந்துள்ளன என்பதைக் காட்டுவதற்கு எந்த ஆவணமும் இல்லை என்று பெயர் தெரிவிக்க விரும்பாத முன்னாள் தேவஸ்தான அலுவலர் ஒருவர் கூறினார்.
லட்டு தயாரிப்பிலும் லட்டு லட்டாகக் கொள்ளை
மேலும், லட்டு வாயிலாக ஒப்பந்தக்காரர்கள் இனிப்பைச் சுவைக்கிறார்கள்! ஆந்திர அரசின் ஊழல் மற்றும் கையூட்டு தடுப்புப் பிரிவு, 2009இல் பல கோடி சிறீவாரி ஆர்ஜிதா சீட்டு வழங்குவதில் நடைபெற்ற ஊழலை விசாரித்து, திருமலை வாரியம், நிருவாகம், ஓட்டல் நடத்துபவர்கள், பயண அமைப் பாளர்கள் உள்ளிட்டோர்மீது குற்றம் சாட் டியது. தரிசன சீட்டுகள் ஓட்டல் நிருவாகத் திற்கும், பயண முகவர்களுக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டு, அவை மீண்டும் அதைவிட அதிக விலைக்கு பக்தர்களுக்கு விற்கப்பட்டது இந்த விசாரணையில் தெரிய வந்தது. இவ்விசாரணைப் பிரிவு, 2008இல் திருமலையின் முன்னாள் தலைவர்மீது சேவை சீட்டினைப் பதிவு செய்து, அதன் மூலம் வந்த கோடிக்கணக்கான  பணத்தை அவருடைய குடும்பத்தார் பெயர்களில் 2060 வரை கொடுத்துள்ளார் என சந்தேகித்தது. ஆனால், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என திரு மலையில் பணியாற்றிய முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி கூறினார். அமைப்பு சார்ந்த ஊழல் என்பது லட்டு உற்பத்தியிலும்கூட நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப் படுகின்றன. இதற்கான மூலப் பொருட்களைக் கொச்சியிலிருந்து சந்தைப் பிரிவு வாங்கு கிறது. சில சமயங்களில் இவை நெல்லூர், பெங்களூரூ, டில்லி ஆகிய இடங்களில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடமிருந்து வாங்கப் படுகிறது.
இவற்றிலும் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறினார் வி. நாயுடு. பெட்ரோல் ஊழல் தண்ணீராக ஓட்டம்
திருமலையில் நடைபெறும் போக்குவரத் திற்கென தனியே பெட்ரோல், டீசல் பிரிவு உள்ளது. ஆனால் இப்பிரிவில் எவ்வளவு பெட்ரோல், டீசல் வாங்கப்படுகிறது என்று ஒருவருக்கும் தெரியாத புதிர், பல லிட்டர் அளவுக்கு ஒவ்வொரு மாதமும் கார்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான எந்த ஒரு கணக்கும் இல்லை என ஓய்வு பெற்ற துணைச் செயல் அலுவலர் பிரபாகர் ரெட்டி கூறுகிறார். பொது கணக்குக் குழு அதனுடைய சிறப்பு அறிக்கையில் போதுமான உள் கட்டுமானப் பணிகளுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கிறது. ஆனால் அதற்கான பரிந்துரைகள் இன்னும் செயல் வடிவம் பெற்றதாகத் தெரியவில்லை. மிகப் பெரிய நிருவாகம் என்பதால் ஊழலற்றதாக அமைக்க முடியுமா என்பது சந்தேகமே. தலை சுற்று கிறதா! ஆன்மிகம் என்றாலே குழப்பம்தான். என்ன செய்வது? ஏழுமலையான் இதனை கருத்தில் கொண்டு ஆவன செய்வாராக தொழில் அதிபர்களின் சொந்த விருந்தினர் விடுதிகள்
திருமலையில் உள்ள அனைத்து நிலங் களும் பெருமாளுக்குச் சொந்தமானது என்றும், தனிப்பட்ட எவருக்கும் எந்த நிலமும் சொந்தமில்லை என்றும் கூறப்படுகிறது. திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தேவஸ்தான தங்கும் விடுதிகளில்தான் தங்கவேண்டும். ஆனால் பெரும் தொழில் அதிபர்கள் வசதிகள் குறைந்த இத்தகைய தங்குமிடங்களில் தங்குவதற்கு விரும்பு வதில்லை என்பதால், தங்கள் சொந்த செலவிலேயே விருந்தினர் விடுதிகளைக் கட்டி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். வருடத்தில் 30 நாட்கள் அந்த விடுதிகளை அவர்கள் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் 11 மாதங்களுக்கான வாடகையை அவர்கள் தேவஸ்தானத்துக்கு தந்துவிட்டு, ஆண்டு முழுவதிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 11  மாதத்துக்கான வாட கையை அவர்கள் தேவஸ்தானத்துக்கு தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலம் திருமலையில் இருப்பதால், புதியதாக தங்கும் விடுதிகள் கட்டத் தேவையில்லை. இப்போது இருக்கும் விடுதிகளிலேயே தினந்தோறும் 40,000 பக்தர்கள் தங்க முடியும். அதிகமாகக் கட்டடங்கள் கட்டுவதே அதிக பக்தர்களை வரவைக்கத்தான். அதனால் தரிசனத்துக்கும் கூட்டம் பெருகும் என்று தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி கூறினார்.
இந்தத் தங்கும் விடுதிகளை சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்க தேவஸ்தான அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். இந்த விடுதிகளை ஒதுக்கும் பணிக்கென்றே இரு உதவி நிருவாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். பிரமுகர்களின் அந்தஸ்து, தகுதிக்கு ஏற்ப எந்த விடுதியை அவர்களுக்கு ஒதுக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று ஓய்வு பெற்ற தேவஸ் தான கண்காணிப்பாளர் ஜெயராமையா கூறுகிறார். பெருநகரங்களிலிருந்து வரும் வசதி படைத்த பக்தர்கள் விடுதியைப் பெறு வதற்கு பணத்தை தூக்கி எறிவதற்குத் தயங்குவதில்லை என்று முன்னாள் நிரு வாக அதிகாரி பிவிஆர்கே.பிரசாத் கூறுகிறார்.
பணவசதி, அரசியல் அதிகாரம், செல்வாக்கு, புகழ் இவைகளில் எது இருந் தாலும் போதும். உங்களுக்கு தேவஸ்தானம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும். திருமலை என்பது சுற்றுலாத்தலமல்ல, அது ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை தேவஸ் தானம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான முன்னாள் வழக்கறிஞர் பர்வதராவ் கூறுகிறார்.
கட்டடங்களை மேலும் மேலும் கட்டிக் கொண்டே செல்வதால் மலைமீதிருக்கும் சுற்றுச்சூழலுக்கு கேடு நேரும் என்று ஆர்வலர்கள் எழுப்பிய கூக்குரல் காரணமாக புதிய விருந்தினர் விடுதிகளைக் கட்டும் பணி தடை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்னும் செய்தி ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்துள்ளது.
கோவில் விதிகளுக்கு மாறாக பணக்காரர்களுக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள்
திருமலை தேவஸ்தான  அர்ச்சகர்கள் தனிப்பட்டவர்களின் விழாக்களில், சடங்கு களில் கலந்து கொள்ளக்கூடாது என்பது விதி. எம்பெருமானுக்கே நாள் முழுவதும் 24 மணி நேரமும் ஆகமவிதிகளின்படி  சேவை செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது நியதி. எம்பெருமானின் கருவறைக்குள்ளேயே நித்திய கைங்கர்யங்களையும் (சேவைகளை) சடங்குகளையும் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்ற இந்த விதி தலைமை அர்ச்சகருக்கும் (இது போல் உள்ள நான்கு முதன்மை அர்ச்சகர்களுக்கும்)  பொருந்தும். தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.வி.ரமண தீக்சதலு, இந்து தர்ம பிரச்சார தொண்டர்கள் குறை கூறும் ஒரு பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் நடை பயில்கிறார். திருமலையில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் 2010 ஏப்ரல் 10 அன்று ஒரு பெரிய தொழிலதிபருக்கு, கோவில் விதிகளை மீறி, சிறப்பு சடங்குகள் செய்ததற் காக விளக்கம் கேட்டு தேவஸ்தானம் அவருக்கு ஒரு தாக்கீது அனுப்பியது. இந்தத் தலைமை அர்ச்சகரும், டாலர் சேஷாத்திரி (தங்க டாலர் அணிந்திருப்பதால் இந்தப் பெயர்)யும் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வது இது முதல் முறையல்ல. தீக்சதலுவும், சேஷாத்திரியும் எப்போது பார்த்தாலும் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களுடன், சினிமா கலைஞர் களுடன், புகழ் பெற்ற பிரமுகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு பெரிய தொழிலதிபரின் பேத்தியின் திருமணத்தின்போது ஆசி வழங்க தலைமை அர்ச்சகர் மும்பைக்கு விமானத்தில் சென்று வந்தார். கருவறையில் மூலவருக்கு அருகில் நெருங்கி நிற்கக் கூடிய அவர், பெருமாளுக்கு சேவை செய்பவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று கமலானந்த பார்வதி சுவாமி கூறுகிறார்.
மூலக்கூறு உயிரியல் பாடத்தில் முதுகலை ஆய்வுப் பட்டம் பெற்றவரும், ஆகம விதிகளை முழுவதுமாகக் கற்றறிந்திருப்பவருமான தீட்சதலு சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், திருமலை கோவில் கடைப் பிடிக்கும்  வைகாசன ஆகம விதிகளின் படி, திருமலை கோவில் அர்ச்சகர்கள், எந்தவிதக் கவனச் சிதறலும் இன்றி, பெருமானின் வழிபாட்டிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
திருமலை அர்ச்சகர்கள் தனிப்பட்ட சடங்குகளைச் செய்வதை தான் ஆதரிப்ப தில்லை என்று கூறும் அவரது கருத்தை எள்ளி நகையாடும்  கோவில் பாதுகாப்புக் கமிட்டியின்  டி.ஆர்.நரேந்திரா, காலம் சென்ற ஒய்.ஆர்.ராஜசேகர ரெட்டிக்கும் அவரது மகன் ஜெகனுக்கும் 2009 இல் தீட்சதர் திருமலையில் சுதர்சன ஹோமம் செய்தார். ஒய்.எஸ்.ஆருக்காக சடங்குகள் செய்ய அவர் புலிவேந்துலாவுக்கும் ஹைதரா பாத்துக்கும் சென்றுவந்துள்ளார் என்று கூறுகிறார்.
தனது செயலை நியாயப்படுத்திக் கொள்வதற்காக, ஒரு பூசாரி நாட்டின் வளத்திற்காக ஹோமம், யக்ஞம் செய்வதை எந்த தர்ம சாஸ்திரமும் தடுக்கவில்லை என்று தீக்சதலு கூறினாராம். இது போன்ற தவறுகளை மனதில் கொண்டு, அர்ச்சகர் நடைமுறையே அழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக தேவஸ்தானம் சில விதிகளை உருவாக்கியது. கோவிலுக்கு வெளியே அர்ச்சகர்கள் யாகங்கள் செய்யக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன. நாங்கள் ஆகமத்தில் தலையிடுவதில்லை. ஆனால் தேவஸ்தானம் சில வழிகாட்டுதல்களை நிர்ணயித்துள்ளது என்று தேவஸ்தானத் தின் செய்தித் தொடர்பாளர் டி.ரவி கூறுகிறார்.
அனைத்து அர்ச்சகர்களுக்கான வேலை களையும் முதன்மை அர்ச்சகர்களே பகிர்ந் தளிப்பார்கள் என்பதையும், பாரம்பரிய அர்ச்சகர் நியமனம்  தேவஸ்தான சட்டத்தின் 34(3) விதியின்படியே செய்யப்படுகின்றது என்பதையும் தேவஸ்தானம் தெளிவு படுத்தி யுள்ளது. வைகாசனா பிரிவைச் சேர்ந்தவர்கள் கோவில் அர்ச்சகர்களாகப் பணியாற்றும் உரிமை படைத்தவர்கள் என்றும், அர்ச்சகர் களாக ஆவதற்கு வேறு எந்த சிறப்பு புனிதமோ, தகுதியோ அவர்களுக்குத் தேவையில்லை  என்றும் தேவஸ்தான அலுவலர் கூறுகிறார். வைகாசனர்கள் என்பவர்கள் வைஷ்ணவ பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இப்பிரிவைச் சேர்ந்த 2,500 குடும்பங்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளனர். திருமலை ஏழுமலையான் கோவிலினுள் சேவை செய்ய 20-30 நிரந்தர அர்ச்சகர்களும், சம்பாவணை செய்யும் 40-50 பூசாரிகளும் உள்ளனர்.
ஆனால், ஆகமம் என்ன கூறுகிறது? அன்றாட சடங்குகள் பலவற்றின் மூலம் பெருமாளுக்கு சேவை செய்யப்படுகின்றது.  இந்த சடங்குகள் நீர்த்துப் போகாத வண்ணம் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யா பீடத்தின் இணைப் பேராசிரியர் சக்ரவர்த்தி ராகவன் கூறுகிறார். ரூபாய் 10 லட்சம் செலவு பிடிக்கும் பாசு, சேனா யக்ஞங்களைச் செய்வதன் மூலம் பூசாரிகள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். இந்த யாகங்களில் பெரும் பணம் கிடைக்கிறது. பணக்காரத் தொழிலதிபர்கள் பணத்தைச் செலவிடுவது பற்றிக் கவலைப்படுவதில்லை என்று பூசாரி நாராயண சாஸ்திரி கூறுகிறார்.
இந்த வருவாயுடன், முதன்மை அர்ச்ச கர்கள் மாதம் ரூ. 50,000 மும், முக்கிய அர்ச்சகர்கள் ரூ. 25,000மும், அர்ச்சகர்கள் மாதம் ரூ 15,000 மும் மாத சம்பளமாகப் பெறு கின்றனர்.  அவர்களது ஊதியத்தை அண்மை யில் தேவஸ்தானம் மேலும் உயர்த்தியுள்ளது.
100 கிலோ தங்கம் நன்கொடை அளித்த அடையாளம் தெரியாதவர்கள்
திருமலை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட 100 கிலோ தங்கம் உண்மை யில் யாருடையது? இன்று திருப்பதி வட்டாரத் தில் கேட்கப்படும் மதிப்பு மிகுந்த கேள்வியே இதுதான்.  ஆனந்த நிலையம், ஆனந்த சொர்ணமயம் என்னும் கோவிலுக்குத் தங்கத் தகடுகள் வேயும்  திட்டத்துக்கு தங்கம் நன்கொடையாக அளித்தவர்கள் அடையாளம் தெரியாத போலி நபர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டதனால் தேவஸ்தானம் ஒரு தர்ம சங்கடமான நிலையில் சிக்கிக் கொண் டுள்ளது.
உச்சநீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடை விதித்ததற்குப் பின்னர், தாங்கள் நன்கொடை யாக அளித்த தங்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்களா அல்லது கோவிலின் மற்ற திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதை விரும்புகிறார்களா என்று கேட்டு அவர்களுக்குக் கடிதங்களை தேவஸ் தானம் அனுப்பத் தொடங்கியது. நன் கொடையாளர்கள் சிலரது விலாசமே போலி யானது என்று தெரிய வர தேவஸ்தானம் அதிர்ச்சி அடைந்தது.
தங்கம் அவர்களின் பெயரால் நன் கொடை அளிக்கப்பட்டிருந்தபோதிலும், அளிக்கப்பட்டிருந்த அவர்களின் விலாசங்கள் போலியானவை என்று அறிந்து நாங்கள் திடுக்கிட்டோம் என்று ஒரு மூத்த  தேவஸ் தான அலுவலர் கூறுகிறார்.
இத்தகைய போலியான நன்கொடையாளர் கள் அளித்த தங்கத்தை என்ன செய்வது என்பது புரியாமல் தேவஸ்தானம் தவித்துக் கொண்டிருக்கிறது. இத் திட்டத்துக்காக இதுவரை தேவஸ்தானத்துக்கு 100 கிலோ தங்கம் வந்துள்ளது. பெரும்பாலான நன் கொடையாளர்கள் தங்களது தங்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தலைமைக் கணக்கு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமியின்  மனுவைத் தொடர்ந்து, இத்தங்கத் திட்டத்தின் கீழ் மேலும் எந்தப் பணியையும் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இத் திட்டத்திற்கு மூளையாக இருந்த தேவஸ் தானத்தின் முன்னாள் தலைவர் டி.கே.ஆதி கேசவலு நாயுடு 2011 பிப்ரவரியில் இத்திட்டப் பணிகளைத் தொடர தேவஸ்தானத்துக்கு உத்தரவிடக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்தார். கோவிலுக்கு தங்கத் தகடுகள் பொருத்துவது, கோவில் சுவர்களில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல் வெட்டுகள், சாசனங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால்,  அதற்குஆந்திர உயர்நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்த பிறகு தாக்கல் செய் யப்பட்ட மனு இது. தங்கத் தகடுகளை சுவர்களில் பதிப்பதால், கல்வெட்டுகளுக்கு அழிவு ஏற்படும் என்று தொல்பொருள் துறை யும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
2008 ஆகஸ்டில் பதவியேற்றுக் கொண்ட உடனே ஆதிகேசவலு நாயுடு இத்தங்கத் திட்டத்தை அறிமுகப் படுத்திவிட்டு, பின்னர் தேவஸ்தானத்தின் பின்னேற்பினைப் பெற் றார். 200 கிலோ தங்கம் தேவைப்படும் இத்திட்டத்தின் மதிப்பீடு 100 கோடி ரூபா யாகும். 2008 அக்டோபரில் இத்திட்டம் தொடங்கப் பட்டது.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பாரம்பரிய கலைச் சின்னங்களின் பாதுகாவலர்கள், தேவதஸ்தான உறுப்பினர்கள் இத்திட்டத் திற்கு ஆட்சேபணை எழுப்பிய போதும், தனது கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியே தீருவது என்று ஆதிகேசவலு பிடிவாதமாக இருந்தார். 2010 மார்ச் மாதத்தில் கோவி லுக்கு வந்திருந்த கிங்பிஷர் விமான நிறு வனத் தலைவர் விஜயமல்லையா, கதவு களுக்கு தங்கத் தகடுகள் பொருத்த தான் 6 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாகக் கூறினார். தமிழ்நாட்டிலிருந்து தலைசிறந்த கலைஞர்களை அழைத்து வந்து துவார பாலகர்கள் பொம்மைகள் காவல் காக்கும் கோவிலின் முக்கிய கதவினைச் செய்வித்த வரும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான பெரும் நிதிநிறுவன அதிபர் எம்விஎஸ். ஆனந்தகிருஷ்ணனும் இத் தங்கத் திட்டத்தில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார்.
தங்கத் தகடுகள் பதிப்பது சுவர்களில் உள்ள, மதிப்பு மிகுந்த 10 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்திய தமிழ், தெலுங்கு மற்றும் தேவநாகரி மொழிகளில் உள்ள கல்வெட்டுகளை நிரந்தரமாக மறைத்து விடும் என்று தலைமை அர்ச்சகர் தீக்ச தலுவும் கூறினார். கோவில் சுவர்களில் உள்ள 640 பழைமையான கல்வெட்டுகள் சோழர்கள், பல்லவர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்திய சமூக மற்றும் பாரம்பரிய அம்சங்களை வெளிக்காட்டுபவை இந்தக் கல்வெட்டுகள் என்று  வெங்க டேஸ்வரா பல்கலைக் கழகத்தின் கிரண்க்ரந்த் சவுத்தி கூறுகிறார். தாமிரம் மற்றும் தங்கத்தினால் தகடுகள் அமைப்பது கோவில் கட்டுமானத்தையே பலமிழக்கச் செய்துவிடும் என்று ஓய்வு பெற்ற தேவஸ்தான தலைமைப் பொறியாளர் வி.ஆஞ்சநேயலு நாயுடு கூறுகிறார். இத் திட்டம் மட்டும் தொடர அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய கேடு நேரும் என்று, முதல் முதலாக இத்திட்டத்திற்கு ஆட்சேபணை எழுப்பிய  சமூக ஆர்வலர்  சீனிவாச ராமானுஜ அய்யங்கார் கூறுகிறார். நமது நினைவுச் சின்னங்களைத் தங்கத் தகடு களால் நாம் மறைக்கத் தொடங்கினால், நமது வரலாற்றுப் பாரம்பரியமே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று அவர் எச்சரிக் கிறார்.
(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா - தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...