Tuesday, March 20, 2012

அரசியல் கண்ணோட்டத்தோடு தமிழக முதல் அமைச்சர் மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்திருப்பது தேவையற்றது!


அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலை ஏற்று பிரதமரின் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது வரவேற்கத்தக்கது
அரசியல் கண்ணோட்டத்தோடு தமிழக முதல் அமைச்சர் மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்திருப்பது தேவையற்றது! தமிழர் தலைவர் விடுத்துள்ள   அறிக்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு முதல் அமைச்சர் பிரதமரின் தீர்மானத்தைக் குறை கூறி கருத்துத் தெரிவிப்பது தேவையற்றது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்.நா. மாமன்றத்தின் மனித உரிமைக் குழுவின் கூட்டம் - சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் நிலையில், வருகிற 23ஆம் தேதி அன்று, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை, இலங்கை அரசு அப்பட்டமாக போர்க் குற்றம் புரிந்துள்ளது; மனித உரிமைகளை மீறியுள்ளது. அப்பாவி இலங்கைக் குடிமக்களை - தமிழர்களை - சிவிலியன்களை, பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற சாக்கில் கொன்று குவித்துள்ளது. இதற்காக குற்றவாளிக் கூண்டில் அது உலக நாடுகளால் நிறுத்தப்பட வாய்ப்பளிக்கும் மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்திய ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
நாடுகளின் ஆதரவு
அய்ரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் சுமார் 27 நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போர்க் குற்றவாளியான இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசு அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சைனா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகளிடம் சரணடைந்துள்ளது!
இதற்குமுன் இந்திய அரசின் இராணுவ உதவி உட்பட, நிதி ஆதாரங்களையும் பெற்ற நினைப்பில், எப்படியும் இந்தியாவில் உள்ள ஒரு ஊடகத்தின் ஒரு சாரார், சில ஈழ தமிழர் விரோத வாழ்வுரிமையை விரும்பாத ஆரிய சிங்கள உறவின் மிச்சசொச்சமாகத்  திகழுவோர், சில அனாமதேய அரசியல் புரோகிதர்கள், இந்து ராஜ்யத்தை உருவாக்க முனையும் ஆர்.எஸ்.எஸ். போன்ற பார்ப்பனீய பாதுகாப்பு அமைப்புகள் இவைகளின் பிரச்சாரத்தையும், அதிகார வர்க்கத்தில் ஊடுருவிய தமிழின விரோத ஆதிக்க சக்திகளையும் நம்பி, இந்தியாவை எப்படியும் தன் வயப்படுத்தி விடலாம் என்று கருதி, பல அரசியல் சித்து வேலைகளை தங்கள் லாபி மூலம் செய்து கொண்டே உள்ளன!
தமிழ்நாட்டில் இன உணர்வும், மொழி உணர்வும், மனிதநேயமும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது; இந்த சக்திகளால் ஊதி விடப்பட்டதால் மிகப் பெரிய தீயாக மத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து விடுமோ என்ற நிலை வந்து விட்டது!
தி.மு.க.வின் முக்கிய பங்கு!
அனைத்துத் தரப்பு மக்களும், கட்சிகளும் ஓங்கிய குரலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தே தீர வேண்டும் என்பதில் அறப்போர்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் முழங்கிய நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சி களாய், செய்திகளாய் ஓங்கி நின்றன!
மத்திய அரசில், அய்க்கிய முன்னணி அரசில் முக்கிய அங்கம் வகித்து வரும் தி.மு.க. இம்முறை ஓங்கி போர்க் குரலை எழுப்பியது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்த வண்ணமே இருந்தனர்.
அதன் தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமான வேண்டுகோளில் தொடங்கி உண்ணாவிரதம் இருப்போம்  என்று தி.மு.க. உயர்நிலை செயற்குழு கூடி, இந்த ஆட்சியில் இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் தீர்மானத்தை ஜெனிவா கூட்டத்தில் இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதுபற்றியும் பரிசீலிப்போம் என்று திட்டவட்டமாக பிரகடனம் போல அறிவிக்க 20ஆம் தேதி தி.மு.க. முடிவு செய்யும் என்ற நிலையில் மத்திய அரசு தனது மவுனத்தைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!
வரவேற்கத்தக்க பிரதமரின் அறிவிப்பு
பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நேற்று (19.3.2012) மக்களவையில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று திட்டவட்டமாக, சுயமரியாதையுடன் ஈழத் தமிழ் மக்கள் வாழ வகை செய்ய வேண்டும் என்று சிறப்பாகக் கூறியது - அனைத்துத் தரப்பு மக்களாலும், உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், மனிதாபி மான  உரிமையை மதிக்கும் மாண்பாளர்கள் அனைவ ராலும் வரவேற்கத்தக்க அறிவிப்பாக கருதப்படுகிறது.
அதற்காக பிரதமருக்கும் அவர் சார்ந்த கூட்டணித் தலைமைக்கும் நாம் நமது பாராட்டத்தக்க நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!
முதல் முறையாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வெளிப்படை யாக தங்கள் கருத்தை மத்திய அரசுக்கு எடுத்து வைத்து அதன் மூலம் ஒரு திருப்பத்தையும் நிலை நாட்டியுள்ளனர்.
அரசியல் மாச்சரியங்களுக்கு இடமில்லை
இதில் அரசியல் மாச்சரியங்களுக்கு இடமில்லை என்பதற்கொப்ப, தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் அவரது கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, மத்திய அரசு நிலைப்பாடு எடுக்கத் தூண்டியுள் ளனர். இடதுசாரிக் கட்சியினரும் தங்களது குரலை ஓங்கி ஒலித்தனர்;  நாடாளுமன்றத்திலும் அனைத்துத் தரப்பின ரும், வீதிகளில் மாணவர்கள், இளம் வழக்குரைஞர்கள், வணிகர்கள் போன்ற அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பினர்.
அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் ஜெனிவாவில் விரைவில் கூடும் கூட்டத்தில், இலங்கை சிங்கள இராஜபக்சே அரசு போர்க் குற்றவாளியென்ற அய்.நா. குழுவின் அறிக்கைப்படி, மனித உரிமைகள் மீறல் பற்றிய இலங்கை அரசுமீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கப்பட்டது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்?
முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கும் கடிதங்கள் எழுதிவிட்டு, இப்போது பிரதமர் முன்வந்து நேற்று மக்களவையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற கூறியதோடு, இலங்கையில் உள்ள தமிழர்கள் வருங்காலத்தில் சமத்துவம், கவுரவம், நீதி, சுயமரியாதையுடன் நடத்தப்படுவ தற்கான அம்சங்கள் அத்தீர்மானத்தில் முக்கியம். நிச்சயம் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றுதானே முதல் அமைச்சர் பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்; பிரதமர் அறிவிப்பை அவர் வரவேற்று மேலும் இந்திய அரசு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புத் தேட வேண்டிய கடமை படைத்த முதல் அமைச்சர் ஏன் இப்படி அறிக்கை விடுகிறார்?
இப்போது திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, பிரதமர் நாடகம் ஆடுகிறார்; கருணாநிதிக் குத் துணை போகிறார் என்றெல்லாம் அறிக்கை விட்டிருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது; வெறும் அரசியல் பார்வை கொண்டது!
பழைய கூற்றுகளைக் கிண்டினால் முதல்வருக்குத்தான் தர்மசங்கடமாகும்
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் டில்லிக்கு அழுத்தம் கொடுத்து, ஒரே அணியில் நிற்காவிட்டாலும்,  ஒரே மாதிரி குரலில் சுருதி பேதமின்றி தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே இப்போது உள்ள முக்கிய பிரச்சினை என்பதை வசதியாக மறந்துவிட்டு, இதனால் தி.மு.க.வுக் குப் பெருமை வந்துவிட்டதே, காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற மத்தியில் உள்ள அரசுக்கு எதிரான பிரச்சார ஆயுதம் பறிக்கப்பட்டுவிட்டதோ என்பதாலோ என்னவோ திடீரென்று இப்போது பிரதமர் பதில் தெளிவற்றது என்று முதல்வர் கூறியிருப்பது - எவ்வகையிலும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற, அரசியல் தீர்வு காண உதவவே உதவாது! திருமதி சோனியா காந்தி கலைஞருக்கு எழுதிய கடிதம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
அப்பாவி இலங்கைத் தமிழர்கள் பதுங்கு குழியிலிருந்து வெளிவந்தவுடன், ஒட்டு மொத்தமாக கொல்லப்பட்டனர் என்று இப்போது கூறுகிறார் (நமது எம்.ஜி.ஆர். 20.3.2012 பக்கம் 12) அதற்குப் பரிகார நட வடிக்கைகளை உலக நாடுகள் பார்வையில் துவக்கியுள்ள தன் முதல் கட்டம் தானே அமெரிக்காவின் தீர்மானம்!
பழைய கூற்றுகளை கிளற ஆரம்பித்தால், முதல்வருக்கு தர்ம சங்கடம் வரும். போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்! என்ற தத்துவம் பேசியது யார்?
வெளி உறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதி லிருந்து,  பிரதமர் கூறிய பதில்  நல்ல மாற்றம் எனக் கருதி அதை வரவேற்று, ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு உருவாக்க வேண்டுமே தவிர, அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பகடையாக ஆக்கலாமா?
இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆதரித்துள்ளதே!
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உதவ வேண்டிய மகத்தான பொறுப்பும் இந்திய அரசு, உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது!
இந்த நிலையில் வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைத்திட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
கி.வீரமணி 
தலைவர், திராவிடர் கழகம்


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...