Tuesday, March 6, 2012

அனைத்து வரலாற்று திருப்பங்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை, மார்ச் 6- அனைத்து வரலாற்று திருப்பங்களுக்கும் காரணமாக இருந்திருப்பவர்கள் பெண்கள்தான் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8- ஆம் தேதி பன்னாட்டு மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 150- ஆவது ஆண்டுவிழாவையொட்டி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மகளிர் தினவிழாவை `மகளிர் வாரம்' என்ற பெயரில் கடந்த 3- ஆம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, `பெண்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையா? அல்லது ஒரு மாயையா? என்ற தலைப்பில் நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பெண் வக்கீல் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் தலைமை பதவிகளுக்கு பெண்கள் வர முடியவில்லை. ஆனால், வளரும் நாடான இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் தலைமை பதவிகளுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் `நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. எனவே, பெண்களுக்கு அதிகாரம் என்று சொல்லும்போது அதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்ற பாகுபாடு கிடையாது.

அமெரிக்காவில் வெள்ளையர்கள் - கறுப்பர்கள் பாகுபாடு நீங்குவதற்கு காரணமாக இருந்தது ரோசா பார்க் என்ற பெண்மணிதான். பேருந்துகளில் எல்லாம் வெள்ளையர்கள் மட்டும்தான் முன்வரிசை சீட்டுகளில் உட்கார முடியும். கறுப்பர்கள் நான்கைந்து சீட்டுகள் இடம்விட்டு பின்வரிசை சீட்டுகளில்தான் உட்கார்ந்து பயணம் செய்யும் முடியும். இந்த நிலை எல்லாம் மாற ரோசா பார்க்தான் காரணம்.

சரித்திரத்தில் எங்கெல்லாம் திருப்பங்கள் ஏற்பட்டதோ அந்த திருப்பங்களுக்கு எல்லாம் காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான். அமெரிக்க கறுப்பின பெண் ஒருவர் எழுதியுள்ள எளிமையான ஒரு கவிதை கறுப்பின மக்களின் எழுச்சியை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

``ரோசா அமர்ந்தாள். மார்ட்டின் லூதர் கிங் நடந்தார். ஒபாமா (தற்போதைய அமெரிக்க அதிபர்) நடந்தார். நாளை எனது குழந்தை பறந்து செல்லும்'' என்பதுதான் அந்த கவிதை. வாழ்க்கையில் வெற்றிபெற எதுவும் தடையாக இருக்க முடியாது.

உங்களைப் போல படித்த பெண்கள் அதிகாரம் கிடைத்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால், வயல்வெளிகளில் வேலைபார்க்கும் பெண்கள், பெண் கட்டட தொழிலாளிகள், ஏன் வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் பெண் தொழிலாளிகள் இவர்களுக்கு அதிகாரம் கிடைத்து இருக்கிறதா? இல்லை நாம்தான் அவர்களுக்கு அளித்திருக்கிறோமோ? நம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது எத்தகைய மாற்றங்களும் சாத்தியம்தான்.

இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியம் கூறினார்.


.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...