Thursday, March 1, 2012

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?


ஜெனீவாவில் இம்மாத மூன்றாம் வாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேமீது - போர்க் குற்ற தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ளது.
இந்தத் தீர்மானத்தை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ராஜபக்சே மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்போர் - ஆதரிப்போர் வரலாற்றில் என்றென்றைக்கும் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ பேசப்படுவர் என்பதில் அய்யமில்லை.
பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டு,  இராணுவத்தின் வாக்குறுதியை நம்பி அந்த வட்டத்திற்குள் அடைக்கலம் புகுந்த மக்களையே சுட்டுக் கொன்ற கேவலமான மனிதகுல விரோத அரசும் - இராணுவமும் இலங்கைக்கு மட்டுமே உரித்தானவை!
மருத்துவமனைகள்மீதும் இளஞ்சிறார்கள் தங்கியிருந்த விடுதிகள்மீதும் குண்டுமாரி பொழிந்து பன்னாட்டுச் சட்டத் திட்டங்களுக்கு விரோதமாக நடந்து கொண்ட கேடு கெட்ட அரசும் இலங்கையே.
இப்படிப்பட்ட ஓர் அரசு கண்டிக்கப்படவில்லை; அரசின் அதிபர் தண்டிக்கப்படவில்லையென்றால், உலகம் காட்டு விலங்காண்டித் திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது என்றுதான் பொருள்படும்.
உலகில் உள்ள நாடுகள் - குழுக்களாக அணி சேர்ந்துள்ளதன் அடிப்படையில் எரிந்த கட்சி எரியாத கட்சி என்ற தோரணையில் பிரிந்து செயல்படுமே யானால் - அதைவிடக் கேவலம் ஒன்று இருக்கவே முடியாது.
இவ்விடயத்தில் இலங்கை தண்டிக்கவோ, கண்டிக்கவோபடவில்லையானால் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலைக்குத்தான் பல நாடுகளும் தள்ளப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகள், இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை வலுவாகப் பதிவு செய்து விட்டன. முதல் அமைச்சரும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மற்ற நாட்டு மக்களைவிட இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அக்கறையும், கூடுதல் உணர்ச்சியும் உண்டு. காரணம் ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர். அந்த வகையில் இந்தியாவுக்கு இதில் கூடுதல் கடமையுணர்ச்சி இருக்கிறது.
உலகில் எந்த இன மக்கள் பாதிப்புக்கு ஆளானாலும் அந்த இனத்துக்கான, நாட்டுக்கான அரசுகள் கண்டனத்தை, எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது யதார்த்தமாகும்.
திபேத் பிரச்சினையில் திபேத் மக்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களை சீனா கைது செய்தது என்றவுடன், அமெரிக்கா எச்சரித்தது; அதன் விளைவு சீனாவில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அந்த உணர்வு இந்தியாவுக்கு இருக்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்ப் பார்ப்பதில் தவறு இல்லை.
இந்தியத் துணைக் கண்டத்துக்குள் தானே இதுவரையிலும்கூட தமிழ்நாடும் - தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினையில் இனப்படுகொலையாளி ராஜபக் சேவுக்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்  வேறு மாதிரியாகச் சிந்திக்குமானால், அதன் முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்று பொருள்.
1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பறி கொடுத்த காங்கிரஸ், தமிழர் விரோத நடவடிக்கைகளின் காரணமாக நோஞ்சான் பிள்ளையாகத் தவழ்ந்து கொண்டு கிடக்கிறது. இந்த வாய்ப்பையும் குறைந்த பட்சம் மனிதநேய உணர்வோடு காங்கிரஸ் அணுக வில்லையென்றால், என்றென்றைக்குமே எழுந்திட முடியாத பரிதாப நிலைக்குத்தான் தள்ளப்படும்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதனை மிகத் தெளிவாக விடுதலையின் அறிக்கைமூலம் (21.2.2012) தெரிவித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் உணர்வை இந்த வகையில் பிரதமருக் கும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்திக் கும் திட்டவட்டமாகத் தெரிவிப்பார்களாக! ஏனெனில் தமிழ்நாட்டில் கட்சி நடத்த வேண்டியவர்கள் இவர்கள் தானே?


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...