Friday, March 23, 2012

ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த இந்தியாவுக்குப் பாராட்டு!


இலங்கை அரசை செயல்படுத்த வைப்பதே
நம்முன் உள்ள முக்கியமான கடமையாகும்!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

இது ஒரு தொடக்கமே - வீண் சர்ச்சைகள் வேண்டாம்! ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்தும், இலங்கை அரசை செயல்படுத்த வைப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமையாகும் என்றும், இது ஒரு தொடக்கமே - வீண் சர்ச்சைகள் வேண்டாம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

புலி வருகிறது, புலி வருகிறது என்று சொல்லப்பட்ட ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தின்மீது நேற்று (22.3.2012)  நிஜமாகவே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டது.

உலகம் முழுவதும்  உள்ள மக்கள் இதன் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். இந்தியாவின் மாற்றத்துக்குக் காரணம்

பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலுமாகக் காட்டிக் கொண்டிருந்த இந்தியா - உலக நாடுகளின் சூழ்நிலை  -இந்தியாவில் அனைத்துத் தரப்புகளின் அழுத்தம் - தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, பிரிட்டன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பால் (Channel 4)  ஏற்பட்ட தாக்கம், அரசியல் நெருக்கடி இவற்றின் ஒட்டு மொத்த விளைவே - இந்தியாவின் தடுமாற்றம் முடிவுக்கு வந்து, கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உள்ளாகி, அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது.

தி.மு.க.வின் முக்கியத்துவம்

இந்திய அரசு இத்தகைய சரியான முடிவை எடுத்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் இந்த முறை தி.மு.க.வும் அதன் தலைமையும் எடுத்த தெளிவான, உறுதியான நிலைப்பாடுதான் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தியா இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்காவிடின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலக வேண்டும் என்ற அறிக்கையை திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிட்டோம் (13.3.2012).

மத்திய அரசுக்கு நெருக்கடி

கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்கிற அளவுக்குத் தீவிரமான முடிவை தி.மு.க. எடுக்கவில்லையென்றாலும், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்கிற அளவுக்கு தி.மு.க. சென்றது.

மத்தியில் இருக்கக் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு  இன்றைய நிலையில் திமுகவின் ஆதரவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்பது வெளிப்படையே!

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், அவர் தம் வழிகாட்டுதல்படி நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களும் கடுமையான அளவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் - ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, வெளி நடப்பும் செய்தது அசாதாரணமான சாதனையாகும்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை இந்தியா எடுக்கும்படிச் செய்யப்பட்டதற்கான காரணிகளுள் முக்கியமானவை இவை!

வரவேற்கத்தக்கது - பாராட்டுகள்

காரணம் எதுவாக இருந்தாலும் பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிவித்த முடிவின்படி, நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 19ஆவது அமர்வுக் கூட்டத்தில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்ததன்மூலம் பெரும் பழியிலிருந்து தப்பிப் பிழைத்தது! இந்திய அரசின் இந்தச் செயலுக்காக திராவிடர் கழகம் வரவேற்று தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

24 நாடுகள் ஆதரவு
மொத்தம் 47 நாடுகளில் இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா ஆதரவு தெரிவித்ததால் வேறு சில நாடுகளும் இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கவும் கூடும். 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.  8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கின அல்லது புறக்கணித்தன.

அடுத்து இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு ஏற்கெனவே நியமித்த விசாரணைக் குழு (LLRC) அளித்த அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.

மனித உரிமைக் கவுன்சில் நியமிக்கும் உறுப்பினர்களின் கண்காணிப்பில் இலங்கை அரசு நேர்மையான முறையில் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும்.

தமிழர்கள் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

முள்வேலி முகாமுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு உரியது செய்யப்பட வேண்டும்.

சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களும், போராளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.

போர்க் குற்றம் புரிந்தவர்கள் மீதான நடவடிக்கையை அடுத்தகட்டமாக அய்.நா. மேற்கொள்வதும்  அவசியமாகும்.

குறிப்பிட்ட காலவரையறை முக்கியம்

இவை எல்லாம் குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் நடக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக இருக்க வேண்டும்.
ஜெனிவா தீர்மானத்தின்மீது பல்வேறு கருத்துகளைத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தங்கள் போக்கில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு தொடக்கம்தான்!

இந்தத் தீர்மானத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் சர்வத் தீர்வு கிடைத்துவிட்டது என்று பொருளாகாது - இது ஒரு தொடக்கம் அவ்வளவுதான்!

இதுவரை அசையாதிருந்த இந்தியத் தேர் இப்பொழுது அசைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்றுபட்டு நாம் கொடுக்கும் தொடர் அழுத்தத்தின் மூலமே மேலும் பல தீர்வுகள் கிடைக்கப்பட முடியும். இத்தீர்மானத்தின் மூலம் இலங்கை சிங்களவாத அரசின் உண்மை முகம் உலக அளவில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குக் கண்டிப்பாக இது ஆறுதலை அளிக்கக் கூடியதே!

ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை இலங்கை அரசு உடனடியாக தொடங்கிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, வீணான சர்ச்சைகளின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது புத்திசாலித்தனமாகாது.

இன்னும் சிலர் இங்கு - அடையாளம் காண்க!

இந்தியா ஆதரவு தெரிவிக்கக் கூடாது, இலங்கைத் தீவில் நடத்தப்பட்டது யுத்தம் அல்ல; தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் சோ ராமசாமி, சு.சாமி போன்றவர்களும் ஆர்.எஸ்.எசுகளும், சில ஊடகங்களும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆரிய - திராவிடம் எங்கே? என்பவர்கள் கண் திறக்கவும் இது உதவக் கூடும்.

இந்தியா, தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தம் கடமை முடிந்து விட்டதாக நினைக்கவும் கூடாது. ஈழத் தமிழர்களுக்கான  வாழ்வாதாரங்கள், அவர்களின் சுயமரியாதைக்கான உத்தரவாதம் என்பவற்றில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று சொல்லி வந்ததை நிறைவேற்றிட, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்பதையும் இந்தியாவுக்கு நினைவூட்டுவது நமது கடமை.

அழுத்தம் கொடுப்போம்!

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரே குரலில் சுருதி பேதம் இல்லாமல் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஈழம்தான் ஒரே இறுதித் தீர்வு ஈழத் தமிழர்களுக்கு என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது - ஒரு நல்ல அறிகுறி. அதுபற்றி நாளை நமது கருத்துகளை விளக்குவோம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


.
 5

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...