Monday, March 19, 2012

ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளனவே தவிர, மக்களுக்கான வசதிகள் அதிகம் காணப்படவில்லை!


தமிழ்நாட்டிற்கு மேலும் பல திட்டங்கள் தேவை! எம்.பி.க்கள் வற்புறுத்த வேண்டும்
ரயில்வே பட்ஜெட்பற்றி தமிழர் தலைவர் கி.வீரமணி கருத்து

2012-2013-க்கான ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப் பட்ட அளவுக்குப் பயணிகளுக்கு வசதிகள் பெருகவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
2012-2013க்கான மத்திய (பட்ஜெட்) வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்ற மக்களவையில் 16.3.2012 அன்று சமர்ப்பித்துள்ளார்!
அதற்குமுன் - வழமைபோல் ரயில்வே பட்ஜெட் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த - அய்க்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் - தினேஷ் திருவேதி அவர்களால், இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு ஆனால் வசதிகள்தான் இல்லை
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சிக் குரியதாக - பயணிகள் கட்டண உயர்வு இரண்டாம் வகுப்புக்கும்கூட விட்டு வைக்கா மலும், ரூபாய் 3 ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், பல்வேறு சங்கடங்களைப் பொது மக்களுக்கு தரும் வகையில் அமைந்துள்ளது!
கட்டண உயர்வைப் பொருட்படுத்தாத அளவுக்கு பயணிகளிடையே மகிழ்ச்சியைத் தரக் கூடிய வசதிப் பெருக்கங்கள் எதுவும் குறிப்பிடத் தக்க வகையில் அறிவிக்கப்படவில்லை; புதிய ரயில் பாதைகள்பற்றியும்கூட இரட்டைப் பாதைகள் கூட தமிழ்நாட்டு மக்கள் வரவேற்கக் கூடியவை  இல்லாதது வருந்தத்தக்கது!
எலிகளும், கரப்பான் பூச்சிகளும்
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முதல் குளிர் பதன வகுப்புக் கட்டண உயர்வைக் கூட்டும் நிலையில், குறைந்தபட்சம் அதில் பயணிப் போருக்கு இருக்கைகள்கூட தூய்மையாக இல்லை; எலிகள், கரப்பான் பூச்சிகள் வாசம் செய்கின்றன! உணவு எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் - அல்லது ஊருக்குத் தின்பண்டங் களை எடுத்துச் செல்வோருக்கும் ஏற்பட்ட கசப்பான, வேதனையான  அனுபவங்கள் பற்றி ஏனோ மேல் அதிகாரிகள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை! எலி போன்றவை பயணிகளின் கால்களைக் கடித்து அதனால் பாதிக்கப்பட்டோர் பலருண்டு!
இராயபுரம் முனையம் வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பழைமையான இராயபுரம் ரயில் நிலையம் - நமது திமுக தலைவர்கள், எம்.பி.க்கள் எடுத்த கடும் முயற்சிகள் காரணமாக புதிய முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளது!  பாராட்டத்தக்கது!!
மன்னார்குடி ரயில் நிலையம் மீண்டும் அமைக்கப்பட்டதும், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சென்னை வருவதும் திரும்புவதுமான வசதியும், தி.மு.க. நாடாளுமன்றக்  குழு தலைவரும், மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான நண்பர் டி.ஆர். பாலு அவர்களது சீரீய முயற்சியால் உருவாகியுள்ளது. அது பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் என்று வளர்ந்து புதிய இருப்புப் பாதை அமைப்பது வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமாகும்.
தஞ்சை எம்.பி.யும், மத்திய நிதித்துறை இணையமைச்சருமான நண்பர் பழனி மாணிக்கம் அவர்கள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை அதிபர்களைகூட, நிதி உதவி - இத்திட்டத்திற்கு - தருமாறு ஏற்பாடுகளை செய்ய முனைந்தார்கள்; அதுவும் வற்புறுத்தப்பட்டு நடந்தால் தஞ்சை, திருச்சி, பிற்படுத்தப்பட்ட அரியலூர் போன்ற மாவட்டப் பகுதிகள் மேலும் செழித்தோங்கிட வாய்ப்புக்கள் ஏற்படும் என்பது உறுதி!
பெரிய திட்டங்கள் ஏதுவும் நம்முடைய தமிழகப் பகுதியில் இல்லை. முந்தைய திண்டிவனம், செஞ்சி, சேலம், பெங்களூர் திட்டம் என்னாயிற்று?
ரயில் பயணிகள் அதிகரிப்பு
திருச்சி, நாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புதிய ரயில் விட அறிவிப்பு வந்துள் ளது மிகவும் வரவேற்கத்தக்கது!
ரயில்வேயில் போதிய பாதுகாப்பு தேவை; இதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஒருங் கிணைந்த பாதுகாப்புத் திட்டசேவைக்கான ஒரு வலிமை பொருந்திய திட்டத்தை உருவாக்க வேண்டும். ரயில்வே கட்டணம் மலிவானது என்பதால் தான் இது வெகு மக்களுக்கு மிகவும் பெரிய அளவில் பயண வாய்ப்பைத் தருகிறது!
தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டண உயர்வு அதிகமாக்கப்பட்டு விட்ட காரணத்தால், ரயில் பயணிகள், எண்ணிக்கை கூடுவது இயல்பாகவே அதிகரித்து விட்டது.
லாலுபிரசாத்தின் சாதனைகள்!
இதற்குமுன் லாலு - பிரசாத் இரயில்வே அமைச்சராக இருந்தகாலம்தான் ரயில்வேயின் பொற்காலமாக அமைந்தது!
லாலுவை அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் - சமூக நீதியில் நம்பிக்கை உள்ள யதார்த்த பட்டறிவாளர் என்பதால் ஊடகங்கள் கேலியும் கிண்டலும் செய்தன. இன்னமும் பல பார்ப்பன ஏடுகளும், தொலைக்காட்சிகளும் அதை தங்கள் ஜாதி ஆணவ வாடிக்கையாகவே ஆக்கிக் கொண்டுள்ளன!
ஆனால் அவர்தான் பொது பட்ஜெட்டிற்கு, ரயில் பட்ஜெட் மூலம் கூடுதல் நிதியைத் தந்தவர்!
கட்டணங்களை உயர்த்தாமலேயே, அவரது நிர்வாகத் திறமை அனைவராலும் பாராட்டப் பட்டது! அமெரிக்க ஹார்வேடு  பல்கலைக் கழக நிர்வாக இயல்துறை இவரை அழைத்துப் பேச வைத்து எப்படி சாதிக்க முடிந்தது என்று கேட்டு விளக்கும்படி கேட்டுப் பயன் பெற்றது அப்பல்கலைக் கழகம்!
மற்ற மேல் ஜாதி பார்ப்பனர்கள் தற்போது ரயில்வே அமைச்சர் - பார்ப்பனர்தான் - வெளி நாட்டில் படித்த விமானம் ஒட்டியவராவார்! (பொது வாக மம்தா கட்சியே உயர்ஜாதிக் கட்சிதான்!)
இதைப்பற்றி முன்பு லாலுவை தரந் தாழ்ந்து விமர்சித்தவர்கள் இப்போது கட்டணம் உயர்வைக்கூட நியாயப்படுத்ததானே ஊடகப் பூணூல்கள் முயலுகின்றன! அவ்வளவு பாசம்!!
பார்ப்பன ஊடகங்களின் பரிகாசம்!
பல ஆண்டுகள் முன்பு வாணியம்பாடி அருகே ரயில் விபத்து நடைபெற்றபோது, (அப்போது பாபுஜெகஜீவன்ராம் அவர்கள் ரயில்வே அமைச்சர்) தகுதி, திறமை இல்லாத - தாழ்த்தப் பட்ட சமூகத்தவர் அமைச்சரானால் இப்படித்தான் என்று அன்றைய சுயஜாதி மித்திரனான சுதேசமித்திரன் நாளேடு தலையங்கம் தீட்டியது!  - என்ன கொடுமை!
ரயில்வேயில் வளர்ச்சித் திட்டங்களை மட்டும் லாலுபிரசாத் பெருக்கவில்லை - அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது!
போர்ட்டர்கள் போன்ற கடைகோடி மக்களை ரயில்வே ஊழியர்களாக்கி, அடித்தள மக்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி, சமூக நீதிக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தாரே!
தகுதி, திறமை என்பது உயர்ஜாதியினருக்கே உரிய ஏகபோகம் என்ற புரட்டை தனது ஆற்றலால் உடைத்துக் காட்டினாரே!
பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?
பொதுவாக பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவு திட்டம் மட்டுமல்ல; உண்மையான பொருளாதார நிபுணர்கள் பார்வையில் அது சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டிய மிக அருமையானதொரு கருவியும் ஆகும்!
தற்போது மாநில அரசு வரிகளும் பேருந்து கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணம் இப்படி பல உயர்வுகளை மக்கள் முதுகுகளை உடைக்கும் நிலையில், இரயில் பயணமும்கூட சுமையாக ஆக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
ரயில்வேயில் கடைகள் வாடகை, ரயில் பெட்டிகளில் விளம்பரங்களைப் பெற்று வருவாய்ப் பெருக்கம், முதலிய புதிய புதிய வருவாய் வழிமுறைகள்பற்றி சிந்தித்திருந்தால் இந்தப் பணம் வருமே!
நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட் குறைவாக இருப்பதை உயர்த்தினால் நம் மக்களில் பலர் டிக்கெட்டே எடுக்காமல் தவிர்த்து உள்ளே வந்து திரும்பி விடுவார்கள். நடைமுறை அனுபவம்  அது! ரயில்வேக்கு நட்டமே ஏற்படும்.
ஓட்டைகளை அடையுங்கள்
தென்னாட்டில் டிக்கெட் இல்லாப் பயணம் குறைவு. வடக்கே போகும் இரயில்களில் டிக்கெட் எடுப்பவர்கள் மிகவும் குறைவுதான் என்பது அனுபவ உண்மை! ஆனால் அவர்களுக்கு வசதிப் பெருக்கம்; முறையாக டிக்கெட் எடுப்போருக்கு வசதி சுருக்கம்! இது ஒரு புதிய மனுநீதி போலும்!
அந்த ஓட்டைகளை அடைத்து டிக்கெட் இல்லாத திருட்டுப் பயணத்தைத் தடுத்து நிறுத்தினால், ஓட்டைகள் அடைபட்டால் நீர் வரத்து அதிகமாகி தொட்டி நிரம்புவதுபோல வருவாய் பெருக வாய்ப்பு ஏற்படுமே!
பொது பட்ஜெட்பற்றி நாளை விரிவாக எழுதுவோம்!
கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...