Friday, March 2, 2012

நமக்கு ஆட்சி என்பதைவிட இன மீட்சியே மிக முக்கியம்!


தி.மு.க. இளைஞர் எழுச்சி நாள் விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, மார்ச் 2- நமக்கு ஆட்சி என்பதைவிட இன மீட்சி என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி 1-3-2012 அன்று இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க. இளைஞரணியினரால் கொண்டாடப்பட்டது. மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி  நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அறிஞர் பெருமக்கள் பாராட்டுரை என மிக எழுச்சிகரமான விழாவாக சென்னை காமராசர் அரங்கத்தில் 1-3-2012 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தளபதி ஸ்டாலின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள்
தமிழகத்தின் வரலாற்றில் ஓர் இருண்ட காலத்தை முடித்து ஒளிமிக்க காலத்தை உருவாக்க வேண்டுமானால் - அதற்கு இதோ படைகளைத் தயாரிக்கிறேன் என்ற அந்த பாசறை முழக்கத்தோடு வளர்ந்து கொண் டிருக்கின்ற குடி செய்வார்க்கில்லை பருவம் மடி செய்து மானங்கருதக் கெடும் என் பதைப் போல பருவம் பார்க்காது, கொளுத் தும் வெயிலானாலும், கொட்டும் மழையா னாலும், அதிலே பணி செய்வதுதான் என்னுடைய ஒரே தொண்டு, ஒரே பணி என்ற உறுதியோடு இளமைக் காலம் முதல் 60 ஆண்டு இளைஞராக இன்றைக்குப் பரிம ளித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டம் வரையிலே சிறப்பாக இருக்கக் கூடிய நமது தளபதி கர்னல் ஸ்டாலின் அவர்களுடைய 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கசப்பான செய்தி
உங்கள் எல்லோருக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல விருந்து. அருமையான கருத்துப் பரிமாற்றங்கள் எழுச்சி மிகுந்த நிகழ்வுகள் பாகற்காயைப் பரிமாற வேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்னால் கொஞ்சம் இனிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்குத்தான் திண்டுக்கல் அய். லியோனி அவர்களை எனக்கு முன்னால் பேசவிட்டு காரத்தை அதற்கு முன்னாலே வைத்து சுப.வீ.அவர்களையும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களையும், சிலம்பொலி செல்லப்பனார் அவர்களையும், பேராசிரியை ஸ்டாலின் கவுசல்யா அவர்களையும் பேச வைத்து கருத்துள்ள கூட்டுப் பொரியல் களை எல்லாம் இடையிலே கொடுத்து கசப்பான செய்தியைத் தருவதற்காக என்னை விட்டிருக்கிறார்கள். காலமோ கடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சுருக்கமாக சில செய்திகளை சொல்ல விழைகிறேன்.
குறிப்பாக மு.க.ஸ்டாலின் அவர் களுடைய பிறந்த நாள் என்பது நாம் ஒரு சம்பிரதாயத்திற்காக, சடங்காக நடத்த வேண்டிய அவசியமில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவருடைய பிறந்த நாளை கொண்டாடிய நேரத்தில் ஒன்றைச் சொன்னார்கள். பிறந்த நாள் விழாவை அவசியம் நடத்தவேண்டும்
பிறந்த நாள் விழாவைப் பகுத்தறிவாளர் களுக்கு அவசியம் நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதை கொள்கைப் பிரச்சார விழாவாக, எழுச்சி நிகழ்ச்சியாக மக்களுக்கு அறிவு கொளுத்தக்கூடிய விழாவாக நடத்த வேண்டும்.

காரணம் நம்முடைய நாட்டில் பிறக்காத கடவுளுக்கே பிறந்த நாள் விழாவை ஆண்டு தோறும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றான். பிறந்த மனிதர்களுக்குக் கொண்டாட வேண்டாமா? அதுவும் சாதனையாளர்களை நினைவூட்ட வேண் டாமா? என்று சொன்னார்கள். அப்பேர்ப்பட்ட நிலையிலே நான் நினைத்துப் பார்த்தேன்.
1976 ஆம் ஆண்டை நினைத்துப் பார்க்கிறேன்
இவர்கள் எல்லோரும் இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது என்னுடைய நினைவு 1976 ஆம் ஆண்டிற்குச் சென்றது. ஏறத்தாழ இன்னும் கொஞ்சம் தாண்டிய நேரத்தில் இரவு 9.30 மணி அல்லது 10 மணிக்குத்தான் அந்தக் கொடுமையான நிகழ்ச்சி நடந்து அடிபட்டு அவர்கள் அறைக்குள் தள்ளப்பட்டு மேலே இடறி விழுந்தார். யார் என்று கூட அந்த இருட்டிலே தெரியவில்லை.
வெளியில் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டி ருக்கிறது. சிறை அறைக்குள்ளே விளக்கு கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும். சிறைக்குப் போனவர்களுக்குத் தெரியும்.
அந்த இடத்திலே அடிபட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட மேலே வந்து இடறி விழுந்தார் ஸ்டாலின் அவர்கள்.
பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன.
தளபதி என்று எல்லோராலும்!
அந்த சிறைக் கொட்டடியில் 8 பேர்கள் நாங்கள் அடைக்கப்பட்டோம். அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையை அதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அதை எல்லாம் தாண்டி எத்தனையோ பொறுப்புகளை வைத்து, பொறுப்புகள் ஒவ் வொன்றிலும் அவருடைய முத்திரையைப் பதிப் பித்து மேயராக இருந்தாலும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச் சராக இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கு அந்தப் பதவிகள் இல்லை என்று சொல்லும்பொழுது, அதைவிட மிக முக்கியமான பொறுப்பான தளபதி என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அளவிற்கு (கைதட் டல்), ஒரு இன எழுச்சிப்படைக்கு அதை வழி நடத்தக் கூடிய அளவிற்கு இன்றைக்கு கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிய துணையாக -அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்வதுதான் என்னுடைய வேலை அதுதான் - இந்த இயக்கத் தினுடைய பணி - இந்தக் கொள்கைகளை மீண்டும் மீட்டு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன
அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
திராவிடத்தின் எழுச்சி என்பது இந்த பாசறையின் மூலமாகத்தான் வரவேண்டும் என்பதற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்ற - அவரை நாம் உற்சாகப் படுத்துவதற்காக அவர் மூலம் ஒரு பெரிய எழுச்சியை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவதற்காக, அவரிடம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நம்பிக் கையை எல்லோருக்கும் அறிவிப்பதற்காக இந்த விழா பயன்பட வேண்டும்.
ஏனென்றால் மிக முக்கியமான ஒரு காலகட்டம் வரலாற்றிலே இந்த காலகட்டம். இதிலே கேளிக் கைக்கு இடமில்லை.
நான் முழுக்க முழுக்க சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னதை வழிமொழிய கடமைப் பட்டிருக்கின்றேன்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நாம் மற்ற இடங்களிலே சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இது போன்று ஒரு எழுச்சி நாள் என்று சொல்லும் பொழுது எந்த செய்தியோடு வெளியே போனோம் - அதுதான் மிக முக்கியம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்ற உறுதியோடு நாம் வெளியே போவதற்கு ஆயத்தப் படுகின்ற நாளாகத்தான் தளபதி அவர்களுடைய  கர்னல் அவர்களுடைய இந்த சிறப்பான விழாவை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எதுவும் - எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?
எதுவும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது தான் மிக முக்கியம்.
நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சோதனைகள். இந்த இயக்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற வேதனைகள் கொடுமைகள் இப்போது துவங்கியது அல்ல.
அருமை இளைஞர்களே! வேர்களைப் பார்க்க வேண்டும். வரலாற்றின் கடந்த காலத்தைப் பார்க்க வேண்டும். நேரமில்லை. இன்னும் பல வாய்ப்பு உண்டு. ஆண்டு முழுவதும் திராவிடர் இயக்க உணர்வை சொல்லக் கூடிய அந்த கால கட்டத்திலே எத்தனையோ சொல்லலாம்.
ஒரு செய்தியை பழைய செய்தியை உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
லியோனிக்கு தனிக் கச்சேரி
லியோனி அவர்கள் தனிக் கச்சேரியே நடத்த வேண்டியவர். அவரை கொண்டு வந்து இந்த மாதிரி கூட்டத்தில் விடும் பொழுது  அவருக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்பட்டு அவருடைய உரையை சுருக்கிக் கொள்ளக்கூடிய நிலை உண்டு.
ஆனாலும் லியோனி அவர்களே ரொம்ப அழகாக முடித்தார். உணர்வுகளோடு நாம் செய்ய வேண்டும். மார்ச் 1-ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாள் என்று கொண்டாடுகின்றார்கள். ஒன்றைப் பாடம் போலத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1944இல் பெரியார் கூறுகிறார்
தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய அறிவு ஆசான் அவர்கள் நமக்கு விழி திறந்த பிற்பாடு தனது விழிகளை மூடிக் கொண்ட தந்தை பெரியார் அவர்கள் 18.3.1944லே இளைஞர்களைப் பார்த்து அவர்கள் பேசுகிறார்.
இளைஞர்களுக்கு ஒரு விளக்கம் சொல்லு கின்றார். அவர் எப்படி நினைக்கிறார் என்பதைச் சொல்லுகின்றார்.
இன்றைக்கும் அது பாடத்தைப் போல நமக்கு நினைவூட்ட வேண்டிய ஒரு அற்புதமான செய்தி யாகும்.  நான் ஒருவரை வாலிபர் என்று சொல்லுவது அன்னாருடைய வயதைப் பொறுத்து அல்ல (பெரியார் அவர்களுடைய அற்புதமான விளக்கம். வாலிபர் என்றால் யார் என்று பெரியார் அவர் களுடைய கருத்தில் சொல்லுகின்றார்கள்).
நான் ஒரு வாலிபனே!
என்னைப் பொறுத்தவரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபன் என்றே கருதிக் கொண்டிருக்கின்றேன் (கைதட்டல்) என்று சொல்லுகின்றார். இயக்கப் பொறுப்பைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் இல்லை என்று கருது கிறவர் வாலிபர் 60 ஆண்டு வாலிபர் மு.க. ஸ்டாலின் வாழ்க! (கைதட்டல்).
இயக்கத்தைத் தவிர வேறு பொறுப்பு இல்லை இயக்கம் என்றால் என்ன? அவருக்கு வருவாயா? இல்லை. இயக்கம் என்றால் சோதனை.
வெறும் அமைச்சர் பதவி அல்ல
இயக்கம் என்றால் சிறைச்சாலை. இயக்கம் என்றால் வெறும் அமைச்சர் பதவி அல்ல. அமைச்சர் பதவிக்கு இனிமேலும் ஆசைப்படுவதற்கு அந்த அமைச்சர் பதவி தகுதி உள்ள அளவுக்கு இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திராவிடர் இயக்க நூற்றாண்டுத் தொடக்க விழாவில் இனமானப் பேராசிரியர் அவர்கள் சொன்னது போல ஆட்சி எதிரியிடம் போகக் கூடாது என்பதற்காக நமக்கு ஆட்சி தேவை அதைவிட மிக முக்கியமானது இந்தப் படையி னுடைய வேலை ஆட்சியைப் பிடிப்பது எப்படி என்பது அல்ல.
இன மீட்சியே முக்கியம்
மீட்சியை உருவாக்குவது எப்படி என்பதற்காகத் தான் இப்பொழுது இளைஞர் பட்டாளம் தேவை! தேவை!. பெரியார் மேலும் சொல்லுகிறார். எனவே தான் என்னை ஒரு வாலிபன் என்று கருதிக் கொண்டிருக்கின்றேன்.
இறுதிவரை வாலிபனாகவே இருந்து தொண் டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது.
95ஆண்டுகாலம் வாலிபராக இருந்து அந்த உணர்வோடு மக்களுக்காக உழைத்தார் பெரியார் அவர்கள். அந்த உணர்வுதான் இன்றைக்கு நாம் 60 ஆண்டு வாலிப இளைஞருக்கு செய்தியாக சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
எனவே இளைஞர்களே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், வரலாற்றின் சுவடுகளைப் புரட்டுங் கள். நம்முடைய கடந்த காலம் சாதாரணமானதல்ல இன்றைக்குத் திராவிடர் இயக்கத்தை எதிர்க் கிறார்கள்.
உச்சிக் குடுமிக்கு என்ன பொருள் என்று அழகாக கேட்டார். படித்துப் பட்டம் பெற்றவர்கள் உச்சிக்குடுமையை சாணக்கியன் போல வைத்துக் கொள்ளத் துணிச்சல் இல்லாத பார்ப்பனர்கள் கூட, உற்றுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவன் அய்.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பான். அல்லது இன்னும் பெரிய பதவியிலே இருப்பான்.
நீங்கள் தலையின் பின்பக்கம் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும். சில சிண்டுகளை இணைத்துக் கட்டி கிராப்போடு கிராப்பாக வைத்திருப்பான். ஏனென்றால் சனாதனத்தையும் சேர்த்து இணைக் கிறார்களாம்.
சூத்திரர்களை வீழ்த்த....
அந்த அளவுக்கு இன்னமும் சளைத்தனத்தைக் காப்பாற்ற வேண்டும் சாஸ்திரத்தைக் காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் சூத்திரர்களை வீழ்த்த வேண்டும். பஞ்சமர்களை விரட்ட வேண்டும். பெண்ணடிமைத் தனத்தை என்றைக்கும் நிரந்தர மாக்க வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அழிப்பேன்! ஒழிப்பேன்! என்று சொல்லு கிறார்கள் என்றால் அந்தத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?
திராவிடன் தூங்கிக் கொண்டிருக்கின்றான். தூங்கியவன் தொடையிலே கயிறு திரிக்க முற்பட் டிருக்கிறான். எனவேதான் எழுச்சி தேவை.
எழுக! என்று சொல்லக்கூடிய நிலையிலே நாம் இருக்கிறோம்.
காலில் விழும் கலாச்சாரம்
20,30 ஆண்டுகளுக்கு முன்னாலே ஆத்திரத் தோடு பேசும் பொழுது கை தட்டுவார்கள். பேசுங்கள்! பேசுங்கள்! என்று ஓசை எழுப்பு வார்கள்.
ஆனால், இப்பொழுது பார்த்தீர்களேயானால் பல பேருக்கு கை இருப்பதே மறந்துவிட்டது. அதிகமாக இப்பொழுது நினைவில் இருப்பது கால்தான். ஏனென்றால் தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் வந்திருக்கிறது. டக்கென்று கேட்பதற்கு முன்னா லேயே காலில் விழுந்து விடுகின்றான்.
காலில் விழுகிற கலாச்சாரம் உள்ளே புகுந்த தென்றால் என்ன பொருள் அதற்கு? காலில் விழுந்ததினாலே அவர்கள் எல்லாம் பணிவானவர்கள் என்று  தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
காலில் விழாதவர்கள் எல்லாம் பணிவு  இல்லாதவர்கள் என்றும் நினைத்து விடாதீர்கள். காலிலே விழுகிறவன் எந்த நேரத்திலும் காலை வாருவதற்கு தயாராக இருப்பான் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். (கைதட்டல்)
இன்றைக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது? தியாகராயர் முதல் முறையாக இயக்கத்தைத் தொடங்குகிறார். எத்தனையோ சங்கடங்களைப் பெற்றிருக்கின்றார்.
இதோ பழைய வரலாறு.  உங்களுக்குத் தெரியாத ஒரு வரலாறு திரா விடன் பத்திரிகை நீதிக்கட்சியினாலே துவக்கப்பட்ட ஏடு! திரா விடன் நாளேடு. அதனுடைய தொடர்ச்சி தான் விடுதலை. என்னுடைய கையிலே இருப்பது திராவிடன் ஏடு.
ஒரு சில செய்திகளை மட்டும் உங்களுக்குச் சொல்லி உணர்ச்சி ஊட்டுவதற்காகத்தான் பொறி தட்டுவதற்காக இதை மட்டும் எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
1917ஆம் ஆண்டு ஒரு செய்தி
20/6/1917 இந்த செய்தி ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால் ஆன செய்தி. ஒரு அறிவிப்பை கொடுக்கிறார் சர்.பிட்டி.தியாகராயர்.
நண்பர்களுக்கு அறிவிப்பு. இன்றைக்கு கலை ஞரைப் பார்த்து திராவிட இயக்கத்தைப் பார்த்து இன்னும் கேட்டால் பார்ப்பனர் என்று இலக் கியத்தில் உள்ள சொல்லை சொன்னவுடனே கொதித் தெழுவதைப்போல ஏனென்றால் இன் றைக்கு இருக்கின்ற சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள்.
பார்ப்பானை பார்ப்பான் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது? அப்படிப்பட்ட நிலையிலே அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்களே என்ன சூழ்நிலை?
தியாகராயர் சொல்லுகிறார். நண்பர்களுக்கு அறிவிப்பு என்று 1917 ஆம் ஆண்டு திராவிடன் நாளேட்டிலே அறிவிப்பு கொடுக்கின்றார். நான் இன்று காலை பிரைவேட் என்று குறிப்பிட்டு ஸ்டாம்ப் ஒட்டாது தபால் ஒருவரால் அனுப்பப்பட்ட இங்கிலீஷ் கடிதம் ஒன்று வரப்பெற்று மிகக் கவலையோடு ஒரு அணா கொடுத்து (ஏனென்றால் ஸ்டாம்ப் ஒட்டாமல் கொடுத்தால் கையிலே உறுதியாகக் கொடுப்பான். ஆனால், சில நேரங்களில் வாங்காமல் திருப்பி அனுப்புவார்கள். தந்தை பெரியாராக இருந்தால் வாங்க மாட்டார் நமக்கு எதற்கு செலவு. அந்தத் தபால் அவனிடமே போகட்டும். மறுபடியும் திருப்பி வரட்டும் என்று அனுப்பி விடுவார். ஆனால் தியாகராயச் செட்டியாரோ வள்ளல். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதி னாலே ஒரு அணா கொடுத்து வாங்கினார். அதை வாங்கித் திறந்து பார்த்தேன்.
அது 1916ஆம் வருஷம் டிசம்பர். மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குரிய ஹை கோர்ட் சிட்டிங் லிஸ்ட்டு பேப்பரால் (வழக்கறிஞர் களுக்குத் தெரியும். குமாஸ்தாக்களாக இருப்பவர் களுக்குத் தெரியும். எந்தெந்த வழக்கு எந்தெந்த நாளுக்கு வருகிறது என்று ஒவ்வொரு நாளும் பிரிண்ட் பண்ணுவார்கள். அது ஒன் சைட் பேப்பர். அது எங்கிருந்து வந்தது என்பதை யூகம் செய்து சர்.பிட்டி தியாகராயர் சொல்லுகின்றார்) எழுதப் பட்டது என்பமையாலும், வேறு சில குறிப்பு களாலும் வக்கீல் குமாஸ்தா ஒருவனால் எழுதி அனுப்பப்பட்டிருக்க வேண்டுமென்று அறிந்து கொண்டேன்.(அவர் யூகம் பண்ணி சொல்லுகிறார்.)
மற்றொரு கவரும் வரப்பெற்றேன். (சர்.பிட்டி அவர்களுக்கு) அதில் நம்முடைய திராவிடனை நிந்தித்து எழுதிய தமிழ்க் கடிதம் ஒன்றும் அதை சுட்டதனால் உண்டாகும் சாம்பல் அடங்கிய பொட்டலம் ஒன்றும் (இந்தப் பத்திரிகையை எரித்து - அப்பொழுது தான் திராவிடன் பத்திரிகை ஆரம்பித்து ஓராண்டாகிறது, அப்பொழுதுதான் இந்த செய்திகள் வெளியே வருகிறது) வந்தது. இதுதான் முதல் தடவை அன்று வரப்பெற்றது. ஜஸ்டிஸ் பத்திரிகை முதன் முதலில் வெளி வந்த வுடன் என்னை கொலை செய்வதாக பயமுறுத்திய கடிதங்களும் அவதூறான கடிதங்களும் அவற் றோடு மயிரும், சாம்பலும் வரப்பெற்றேன் என்று தியாகராயர் எழுதியிருக்கின்றார்.
கலைஞர் காலம் வரையில்!
அன்றைக்குத் தொடங்கியது. தியாகராயர் காலத்திலே தொடங்கியது. கலைஞர் காலம் வரையிலே திராவிட இனத்தின் போராட்டமாக இன்றைக்கும் வந்து கொண்டிருக்கின்றது. இதிலே படை வீரர்கள் நம்முடைய கடமை என்ன?
அதை நினைவூட்டுவதற்குத்தான் தளபதி அவர்களுடைய இளைஞர் எழுச்சிநாள்.
ஒவ்வொரு வரும் உறுதி எடுத்துக் கொண்டு செல்லுங்கள். சங்கே முழங்கு! என்று லியோனி சொன்னார். போர்ச்சங்கின் முழக்கம் வெளியே போகும் பொழுது கேட்க வேண்டும். அதற்கு ஆயத்தமாக வேண்டும். வாலிபர்கள்தான் எல்லோரும்! நாங் களும் வாலிபர்கள்தான். நீங்களும் வாலிபர்கள் தான். இது வயதை பொறுத்தது அல்ல. கொள் கையைப் பொறுத்தது. இலட்சியத்தைப் பொறுத்தது. தியாகத்தைப் பொறுத்தது. உறுதியைப் பொறுத்தது. மானத்தைப் பொறுத்தது. (கை தட்டல்)
திராவிடர் சமுதாயத்தை திருத்தி மானமும்-அறிவும் உள்ள சமுதாயமாக இந்த மக்களை ஆக்குவேன் என்று தன்னுடைய 95ஆவது வயதிலும் பாடுபட்டார்.
பெரியார் உருக்கமாக சொன்னார்
பெரியார் அவர்கள் உருக்கமாக சொன்னார் உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள். இந்த 95 வயதிலே எனக்கு ஆறுகால்கள். நான் எழுந்து நிற்க வேண்டுமானால் ஒருவர் இந்தப் பக்கம் பிடிக்க வேண்டும்.
இன்னொருவர் அந்த பக்கம் என்னைத் தாங்க வேண்டும். அவருக்கு இரண்டு கால். இன்னொரு வருக்கு இரண்டு கால். எனக்கு இரண்டு கால். ஆக ஆறு கால்களோடுதான் நான் எழுந்து நிற்கக் கூடிய நிலையிலே இருக்கிறேன்.
இதோ சிறுநீர் இயற்கை வழியிலே போகாமல் மூத்திரச் சட்டியை தூக்கிக் கொண்டு இப்படி எல்லாம் நான் யாருக்காக பாடுபடுகிறேன்?
பதவிக்காகவா? பெருமைக்காகவா? புகழுக்காக வா? எனதருமை திராவிடச் சமுதாயமே உன்னு டைய சூத்திரப்பட்டம் நீக்கப்பட வேண்டாமா? (கைதட்டல்) உன்னுடைய பஞ்சமப் பட்டம் போக வேண்டாமா? (கை தட்டல்) குறைந்த பட்சம் நீ மனிதனாக வேண்டாமா? என்று தந்தை பெரியார் கேட்டார். அதை நினைவூட்டுவது தான் எழுச்சி நாளினுடைய அடிப்படைத் தத்துவம். அதிலே தெளிவு இருக்குமேயானால் அதிலே உறுதி இருக்குமேயானால் நம்மை வெல்ல இனி எவனும் பிறக்க முடியாது (கை தட்டல்)
அந்த உறுதியோடு இளைஞர்களை, பாசறை யைப் பாருங்கள்.
இது கேளிக்கை அரங்கமல்ல
அதனால்தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாசறைக் கூட்டம் நடத்துகிறார். இதுதான் சரியான முறையும் கூட. பாசறையிலே கேளிக்கைக்கு இடமில்லை. அங்கு வேறுவகையான நிலைக்கும் இடமில்லை. குறைந்த பட்சம் நீங்கள் திரும்பும் பொழுது உறுதியோடு சொல்லுங்கள். சின்னச் சின்ன செய்திகளிலே கூட நமக்கு உறுதி இருக்க வேண்டும். தெளிவு இருக்க வேண்டும்.
யாராவது ஒரு பார்ப்பனர் வாயிலே தியாகராயர் நகர் என்று வருமா?
தியாகராயர் நகருக்கு பதிலாக இன்னமும் என்ன சொல்லுகிறான் தெரியுமா? டி.நகர், டி.நகர் என்று சொல்லுகிறார்.
இனிமேல் குறைந்தபட்சம் வெளியே சொல்லும் பொழுது உறுதியோடு சொல்லுங்கள். எந்த காரணத் தை முன்னிட்டும் நாம் சொல்லும் பொழுது தி.நகர் என்றே சொல்லக் கூடாது.
உறுதி எடுத்துக் கொள்வோம் தியாகராயர் நகர் என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும். (கை தட்டல்)
செய்தி சிறியதுதான்!
சின்ன செய்திதான் - இது தி.நகருக்கும், தியாகராய நகருக்கும் என்ன வித்தியாசம் என்று தம்பிகளே நீங்கள் புரியாமல் நினைக்கக் கூடாது. இதிலே தான் தத்துவமே அடங்கியிருக்கின்றது. இதிலே ஏமாந் ததில் தான் எல்லாவற்றிலும் நாம் ஏமாந்தோம். இதிலே நாம் ஏமாந்ததிலேதான் மிகப் பெரிய தோல் விக்கு ஆளானோம். உடனே நம்மாள் வியாக்கி யானம் செய்கிறான். ஏனென்றால் பெரியார் படிப் பை சொல்லிக் கொடுக்கச் சொல்லி விட்டார் பாருங்கள்.
நீதிக்கட்சி குப்பன், சுப்பன் எல்லோருக்கும் படிப்பைக் கொடுத்து விட்டது பாருங்கள். நாம் கேள்வி கேளு என்று வேறு சொல்லி விட்டோம்.
கேள்வி கேட்கிறான் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். அதிலே என்னங்க தியாகராயர் நகர் என்று நீளமாக சொல்ல முடியுமா? அதை  தி.நகர் என்று சுருக்கிச் சொல்லுகிறோம் என்று சொன் னார்கள்.
பெரியாரிடம் பயின்றார் கலைஞர்
பெரியாரிடம் பயின்றவர் கலைஞர். ரொம்ப அழகாக கேட்டார் அப்படியா? தியாகராய நகரை சுருக்கி டி.நகர் என்று போடுகிறாயே, திருவல்லிக் கேணியை எங்கேயாவது டி.வி.கேணி என்று போட்டிருக்கிறாயா? (கை தட்டல்)
திருவல்லிக் கேணியும் அவ்வளவு நீளம் தானே. அதற்கு திருவல்லிக் கேணி. இதற்கு மட்டும் தி.நகர் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்டார். தி. நகர் என்று சொல்லி தீ யை வைத்து விட்டார்கள். நம்மாளுக்குப் புரியவில்லையே. சிறிய விசயம். சங்கதி எவ்வளவு ஆழமாக உள்ளே போயிருக்கிறது தெரியுமா? இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன். இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா என்று ஒரு பிரபலமான பத்திரிகை பம்பாயிலிருந்து வந்தது. இப்பொழுது நின்று விட்டது.
இங்கிருந்து போன ஒரு பார்ப்பன ஆசிரியர் எழுதுகிறார்.  அந்த பத்திரிகையை இன்னமும் வைத்திருக்கின்றோம். விடுதலையின் பழைய பக்கங்களைப் பார்த்தீர் களேயானால் ஆசிரியர் என்ற முறையில் எழுதியிருக்கின்றேன். சிறிய பொறிகளில் இருந்து தான் பெரிய தீ உருவாகக்கூடிய கட்டங்கள் எல்லாம் உண்டு.
ஏன் சில பேர் தி நகர் என்று சொல்லுகிறார் என்று சிலரை கேட்டேன். இவர் என்னமோ சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த மாதிரி ஜெர்மனி யிலிருந்து  வந்த மாதிரி கேட்கிறார். அவர் பெயர் கிருஷ்ணசாமி அய்யங்கார். இங்கிருந்து சென்ற சாதாரண ஆள். பம்பாயில் இந்த பத்திரிக்கைக்கு ஆசிரியராகப் போனவுடனேயே ஏதோ புரியாத மாதிரி தெரியாத மாதிரி எழுதுகிறார். இவர் சில பேரிடம் கேட்டாராம். அதற்கு அவர்கள் தியாகராஜ நகர் என்று சொன்னார்களாம். அப்படியானால் அந்த தியாகராஜர் என்பவர் யார்? இது ரொம்ப நாட்களுக்கு முன்னாலே அந்த இடத்திற்கு பெயர் வைத்தார்கள். அப்படிப்பட்ட பெயருக்குரிய முக் கிய பெரிய நபர் யார் என்று கேட்டார்.  அவரைப் பற்றிச் சொல்லுங்கள் என்று இந்த ஆசிரியரைக் கேட்கின்றான்.
அதற்கு இவர் சொல்லுகிறார். எனக்கு அதைப் பற்றித் தெரியாது. இங்கு தான் ஆரியம் டிபிகலாக இருக்கிறது. தியாகராஜர் என்பவர் ஒரு செயின்ட் கம்ப் போசராக இருப்பார். எனக்கு ஒன்றே ஒன்று தெரியும். தியாகராஜ கீர்த்தனைப்பாடுகிறார் பாருங்கள். அந்தத் தியாகராயர் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
எப்படி உயர்த்துகிறார்கள் பாருங்கள்....
அவரை எப்படி உயர்த்துகிறார்கள் பாருங்கள். கீர்த்தனை பாடிய தியாகராஜர் என்று அவர் துந்தனாவைத் தூக்கி கொண்டு அரிசிக்காக ஒவ்வொரு ஊர் சென்று பாடியவர். (கைதட்டல்) பார்ப்பான் பிச்சை எடுப்பது அவனுடைய தொழில். அவனுக்கு செயிண்ட் கம்போசர் தெரிகிறது. (கைதட்டல்)
ஆனால் வள்ளலாக தனது சொந்த சொத்தை இழந்து மானத்தை இந்த மண்ணுக்குத் தந்த தியாகராயரைத் தெரியவில்லை. (கைதட்டல்)
இதுதான் நம்முடைய இனம் வீழ்ந்த இடம் தோழர்களே! நாம் எங்கே எதைத் தொலைத் தோமோ அங்கே அதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் (கைதட்டல்)
தொலைத்த இடத்தை விட்டு விட்டு நீங்கள் வேறு இடத்திற்குச் சென்றால் கண்டுபிடிக்க முடியாது. இன்றைக்கு நாம் தொலைத்தது ஒரு இடம். தேடுவது இன்னொரு இடம் ஏனென்றால் விடுதலை இல்லை. அதைத்தான் தளபதியின் சகாப்தத்தில் உருவாக்கு வோம். (கைதட்டல்) தளபதியை ஏற்றுக்கொண்டி ருக்கிறார்கள். (கைதட்டல்)
புலிக்குப் பிறந்தது...
எதிரிகள் கூட தளபதியை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். தளபதியை சந்திப்பது சாதாரண விசயமல்ல. ஏனென்றால் அவர் பகுத்தறிவால் தளபதி! பண்பால் தளபதி! தன் வல்லமையால் தளபதி! உழைப்பால் தளபதி! தியாகத்தால் தளபதி! எல்லா சோதனைகளாலும் தளபதி! எனவேதான் அவரை வழக்குகள் மிரட்டிய பொழுது அவர் நீதிமன்றத்துப் பக்கம் போகவில்லை.
டி.ஜி.பி.அலுவலகம் பக்கம் போனார்.  நேரடியாக (கைதட்டல்)
இதுதான் வீரத்தின் விளைநிலம். புலிக்குப் பிறந்தது பூனையாகாது. அது புலிக்குட்டியாக இருக்கும். (கைதட்டல்)
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிக்குப் பாயும் என்பது தான் அதன் விளைவு (கைதட்டல்).
வாழ்க தளபதி! வருக திராவிடம்! மீட்சி! மீட்சி! மீட்சி வந்தால் ஆட்சி தானே வரும். எனவே வரவேண்டியது அவசரமாக மீட்சி! மீட்சி! மீட்சி! என்று சொல்லி முடிக்கிறேன். பாராட்டுகள் நன்றி! - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டன.


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...