இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்றார். சாதித்து வந்தார் என்று டாம் டாம் அடிக்கப்பட்டது. இலங்கை அதிபர் சில வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டார். இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் 13ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது என்று கூடப் பேசப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவைப்பற்றித் தெரிந் திருக்கும் எவருக்கும் - வழக்கம் போன்ற ஏமாற்றுத்தனம் தான் இது என்பது தெரியும். இந்தியாவுக்கும் இதில் அனுபவம் உண்டு என்றாலும், நம்மை ஏமாற்றுவதற்காகவும் ராஜ தந்திரத்தில் இந்தியா கெட்டிக்காரத் தன்மை உடையது என்று ஊர் உலகத்தை நம்பச் செய்வதற்கும் சிலவற்றை இந்தியா சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கையும் கருத்துத் தெரிவிப்பும் ஆகும்.
எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று வந்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை அதிபர் ராஜபக்சே, தன் வழக்கமான சுய புத்தியைக் காட்டிக் கொண்டு விட்டார்.
கொழும்பு நகரில் ராஜபக்சே நேற்று முதல் நாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது என்ன?
13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் தான் முடிவு செய்யும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், இக்குழுவில் இடம் பெற் றுள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும் உச்சநீதிமன்றம் தான் இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உறுதி அளித்தபோது இந்த சட்டப் பிரச்சினைகள் எல்லாம் இலங்கை அதிபருக்குத் தெரியவே தெரியாதா?
ராஜபக்சே இரட்டை நாக்குப் பேர் வழி என்பதை அறிந்தவர்கள். இப்படிப் பேட்டி கொடுத்திருப்பது கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள்.
1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்று அந்த ஒப்பந்தத்தில் கூட ஒப்புக்கொள்ளப்பட்டு இருந்தது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரிகா அம்மை யாரோ, ரணில் விக்ரமசிங்கோ இதில் கையை வைக்கத் துணியவில்லை. ஆனால், ராஜபக்சே என்ன செய்தார்?
ராஜபக்சேவின் கைப்பாவை என்று கூறப்பட்ட இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சரத்சில்வா மூலம் அதற்கு வேட்டு வைத்தார்.
சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்புத் தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி அந்த வகையில் ஒரு தீர்ப்பும் பெறப்பட்டது (2006 அக்டோபர்)
இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக ஒரு நாட்டின் நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா? இதுகுறித்து இந்தியா எப்பொழுதாவது எதிர்ப்பைக் குறைந்தபட்சம் பதிவு செய்ததாவது உண்டா?
இந்தத் தீர்ப்பைப் பெற்ற கையோடு, அவசர அவசர மாக, கிழக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடத்தி, விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திய கருணா என்னும் தன் கையாளின் குழுவைச் சேர்ந்த பிள்ளை யான் என்பவரைப் பிடித்து வைத்த பிள்ளையார் போன்று முதல் அமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து உலகை ஏமாற்றவில்லையா?
இப்பொழுது உண்மை நிலை என்ன? வடக்கு, கிழக்கு என்னும் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களக் குடியேற்றத்தை சிங்கள அரசே முன்னின்று நடத்தி, இலங்கைத் தீவில் தமிழர்கள் என்ற ஒரு தனி இனம் உண்டு என்ற சரித்திரத்தையே அழித்து முடிக்கும் வேலை நடந்து முடிந்து விட்டதே!
இதில் சிங்களவர்களுக்கு எவ்வளவு திருப்தியோ, அதைவிடக் கூடுதல் திருப்தி உள்ளுக்குள் இந்தியா வுக்கும் உண்டு. காரணம் பாதிக்கப்பட்டு இருப்பவர் கள் தமிழர்கள் ஆயிற்றே!
ராஜபக்சேவின் பேட்டிக்கு இந்தியாவின் பதில் என்ன? எங்கே பார்ப்போம்!
No comments:
Post a Comment