Saturday, February 4, 2012

புகையிலையையும் உருளைக்கிழங்கையும் இங்கிலாந்துக்கு அறிமுகப்படுத்தியவர் யார் ?


ஜீன் நைகாட்
பொதுவாகக் கூறப்படுவது போல, நீங்கள் நினைப்பது போல புகையிலையையும், உருளைக் கிழங்கையும் இங்கிலாந்து நாட்டுக்கு வால்டர் ராலி (Walter Raleigh) அறிமுகப்படுத்தவில்லை. அவர் ஒரு கவிஞராகவும், தூதுவராகவும், புதிய நாடுகள் கண்டுபிடிக்கும் பயணியாகவும், மறுமலர்ச்சியாளராகவும் புகழ் பெற்றிருந்தார். என்றபோதும் இத்தகைய புகழ் பெற்றவர்களுடன் புகழ் அளிக்கும் கட்டுக் கதைகளும் தானாவே வந்து ஒட்டிக் கொள்கின்றன.  அவருக்குக் கிடைத்த புகழ் அனைத்தும் அவர் செய்யாத காரியங்களுக்காகக் கிடைத்தவைதான்.
பிரிஸ்டால் நகரில் ஒரு மாலுமி தன் மூக்கிலிருந்து புகை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதாக கூறப்பட்டதுதான் முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் புகை பிடிக்கும் நிகழ்ச்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ராலி பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1556இல் நிகழ்ந்தது.
ராலே வெர்ஜினியாவுக்கோ அல்லது வட அமெரிக்க நாட்டின் எந்த ஒரு பகுதிக்கோ சென்றவர் அல்ல.  1560இல் பிரான்சு நாட்டுக்கு முதன் முதலாக புகையிலையை அறிமுகப்படுத்தியவர் ஜீன் நைகாட் (Jean Nicot)  என்ற பிரஞ்சுக்காரர். அவர் பெயரில் இருந்து பிறந்ததுதான் நிகோடின் (Nicotin)  என்ற சொல். இவ்வாறு புகையிலை பிரான்சு நாட்டில் இருந்துதான் இங்கிலாந்து நாட்டுக்கு வந்தது.
சர் ஃபிரான்சிஸ் டிரேக் என்பவரிடமிருந்து புகை பிடிக்கக் கற்றுக் கொண்ட ராலே அதிக அளவில் புகை பிடிப்பவர் என்பதால், புகைபிடிக்கும் பழக்கம் பரவ காரணமாக ராலே இருந்திருக்கக்கூடும்.
புகை பிடிப்பது (smoking)   என்ற சொற்றொடரே 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானதாகும்.
உருளைக்கிழங்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் ஸ்பெயின் நாட்டில் அறியப்பட்டிருந்தது. அய்ரோப்பாவில் இருந்து அது இங்கிலாந்து தீவுகளுக்குச் சென்றிருக்கக்கூடும். ஆனால் அது நேரடியாக அமெரிக்காவில் இருந்து இங்கி லாந்துக்கு வந்தது அல்ல. இத்தாவரம் நச்சுத்தன்மை கொண்டதென கருதப்பட்டது. ராலே தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கு செடியைப் பயிரிட்டபோது, அவரது அண்டை வீட்டுக்காரர்கள் அவரது வீட்டையே எரித்துவிடுவதாக மிரட்டினர்.
உருளைக்கிழங்கு படிப்படியாக மக்களது உணவில் இடம் பெற்றது. இதனைக் கொண்டு காசநோயையும், நாய்க்கடி என்னும் ராபி நோயையும் குணப்படுத்த முடியும் என்றும், ஆண், பெண் இருவரிடமும் பால் உணர்வைத் தூண்டி இனப் பெருக்கத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் 17 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்த அறுவைசிகிச்சை மருத்துவர் டாக்டர் வில்லியம் சாலமன் கூயியுள்ளார்.
ராலேயின் பெயர் பல வழிகளிலும் உச்சரிக்கப்பட்டது. பெரும்பாலும் பச்சைப் பொய் ‘Raw Lie’   என்று உச்சரிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. அவரது பெயரின் முதல் பகுதி வாடர் water என்று உச்சரிக்கப்பட்டது.
அவர் உலக வரலாறு என்ற தனது அய்ந்து பாக நூலை தனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டே 15 ஆண்டு காலமாக எழுதி வந்தார். ஆனால் வரலாற்றில் அவர் கி.மு. 1300 அய் தாண்டவில்லை.
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அவரது தலை பதப்படுத்தப்பட்டு அவரது மனைவிக்கு பரிசாக அளிக்கப்பட்டதாம். ஒரு வெல்வெட் பையில் அதனை வைத்து அவர் எப்போதும் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வாராம்.  அதன் பிறகு 29 ஆண்டுகள் கழித்து அவர் இறந்தார். ராலேயின் பதப்படுத்தப்பட்ட தலை  வெஸ்ட்மினிஸ்டர் புனித மார்க்கரெட் கல்லறையில் இருந்து அவரது அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...