Monday, February 20, 2012

அன்னா ஹசாரே கும்பல் பா.ஜ.கட்சியின் ஊதுகுழலாக ஆகிவிட்டது


- தீரேந்திர ஜா
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவு பெற்றது என்று  கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று மோகன் பகத் கூறியது, ஹசாரே கும்பலிடம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி பகத்தின் கூற்றைக் குறை கூறச்செய்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஹசாரே கும்பல் தொடங்கிய போது, தனது மதச்சார்பற்ற தன்மை என்னும் முகமூடியைப் பாதுகாத்துக் கொள்ளும் எந்த வித முயற்சியும்  மேற்கொள்ளப்படவில்லை.
உத்திரப் பிரதேச மாநிலத்தில்  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் கடமை என்ன என்று தங்களின் முதல் கூட்டத்தில் ஹசாரே கும்பல் நினைவுறுத்தியபோதே அவர்களின் முகமூடி கிழிந்து விட்டது. பாரபங்கி மாவட்டத்தின் பதேபூர் கோட்டத்தில் ஹசாரேயின் தளபதிகள் தங்களின் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிப்ரவரி 2 அன்று அது நடந்தது. இதையே திரும்பத் திரும்பக் கூறிய அவர்களின் நான்கு கட்டப் பேரணியின் இறுதி நிகழ்ச்சி பாஸ்டியில் பிப்ரவரி 3 அன்று நடைபெற்றது. ஹசாரே கும்பலை இப்பிரச்சாரத்தின் போது கிரண்பேடி வழி நடத்திச் சென்றார். நிகழ்ச்சிகள் நடைபெற்ற நான்கு இடங்களில், மூன்று இடங்களில் மேடைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களே நேரில் அமைத்தனர்.
பதேபூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சி அப்படியே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி போன்றே இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளூர் அமைப்பாளரான ராகேஷ் குமார் பிரேமில் உள்ளூர் சங்பரிவார அமைப்பின் ஒரு முன்னணி உறுப்பினர் ஆவார். லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராட இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தீவிர இந்துத்துவ ஆதரவாளரான பிரேமில் கூறினார். 1990களிலும், 2000களின் தொடக்கத்திலும் அவர் பதேபூர் பிரிவு சிவசேனாவின் தலைவராக இருந்தார். பின்னர் மானவ் உட்கர்ஷ சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், அந்த அமைப்புக்காகச் செயல்படத் தொடங்கினார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் பெயர் மகாதேவ்தலப் திடலில் புகழ் பெற்றதாக இருந்தது. ஹசாரேயின் தளபதிகளான கிரண்பேடி, மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், கோபால் ராய் மற்றும் பலர் இங்குதான் தங்களின் முதல் பொதுக்கூட்டத்தில் பேசினர்.   பதேபூர் பிரிவு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விவசாயப் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தின் தலைவராக இருந்த ராம்குமார் யாதவ் என்ற மோசடிக்காரர் பிரேமிலுக்குத் திறமையுடன் உதவினார்.
ஆர்.எஸ்.எஸ்.உடன் தொடர்புடைய  மானவ் உத்கர்ஷ சேவா சன்ஸ்தான், பாரதிய கிசான் சங், ராஷ்டிர பக்த விசார் மஞ்ச் போன்ற அமைப்புகள் ஒவ்வொன்றையும் சேர்ந்த 50 தொண்டர்கள் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற ஒரு வார காலம் இரவு பகலாகப் பாடுபட்டனர் என்று பிரேமில் கூறினார்.   ஜெய் காளி கல்யாண் சமிதி என்ற மற்றொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவுத்  தொண்டர்கள் சிலர் ஆக்ரா போன்ற நெடுந்தொலைவி லிருந்தும் வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆற்றிய பங்கு சற்றும் குறைந்ததல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பான சரஸ்வதி சிசு மந்திரால் நேரடியாக நடத்தப்படும் பதேபூரைச் சுற்றியிருக்கும் பள்ளிகளிலிருந்தும்,  சாய் உஷா மாண்டிசோரி உயர்நிலைப்பள்ளி, க்ளோரியஸ் பப்ளிக் பள்ளி, ரவீந்திரநாத் தாகூர் சீனியர் உயர்நிலைப் பள்ளி போன்ற சங் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளில் இருந்தும் திரட்டப்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் கூட்டத்தைப் பெருக்கிக் காட்டப் பயன்படுத்தப்பட்டனர்.
மேடை அமைத்து, கூட்டத்தைக் கூட்டும் வேலையை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்தனர்; பிரச்சார வேலையை மட்டும் ஹசாரே கும்பல் செய்தது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதற்காக தாங்கள் வரவில்லை என்று அவர்கள் கூறியபோதும்,  காங்கிரஸ் கட்சியின் லஞ்ச ஊழல் பற்றியும், சமாஜ்வாடி கட்சியின் குற்றச் செயல்பாடுகளைப் பற்றியும், பகுஜன்சமாஜ் கட்சியின் தவறான நிர்வாகத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, பலமான லோகாயுக்தா மசோதா ஒன்றை நிறைவேற்றிய உத்தரகண்ட் பா.ஜ.க. அரசைப் பற்றி மிக உயர்வாகப் புகழ்ந்ததைக் கேட்டவர்களின் மனதில், உத்திரப் பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் எந்த வித சந்தேகமும் எழவில்லை. ஹசாரேயின் கும்பல் பேசும்போது, 13 அம்ச உறுதிமொழி பற்றிய ஒரு பிரசுரத்தைத் தொண்டர்கள் மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். தங்களின் வாக்கை அளிக்கும் முன் வேட்பாளர்களிடம் இருந்து 13 உறுதிமொழிகளை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் கடிதமாகும் அது. அதில் விவேகானந்தர் கனவு கண்ட இந்தியா பற்றிய முதல் வாக்குறுதியை ஆர்.எஸ்.எஸ்.மட்டுமே ஆதரிக்கும். நான் இந்தியாவின் குடிமகன். ஒவ்வொரு குடிமகனும் எனது சகோதரன். இந்தியர்களின் நலனே  எனது வாழ்வின் நோக்கம். இந்திய கடவுள்களே எனது கடவுள்கள். இந்தியாவும், இந்திய சமூகமும் பற்றியதே எனது குழந்தைப் பருவ கனவும், இளமைப்பருவத் தோட்டமும், எனது புனிதமான சொர்க்கமும், எனது முதுமைப் பருவத்தின் காசியுமாகும். இந்திய மண்ணே எனது உயர்ந்த சொர்க்கம். எனது நலன் இந்தியாவின் நலனில் அடங்கியுள்ளதாகும். இந்த வாழ்க்கை முழுவதிலும் நான்  ஓ, கவுரிநாத், ஓ, ஜகதாம்பா, என்னை மேலும் மனிதத்தன்மை மிக்கவனாக ஆக்கு, எனது பலவீனத்தையும், மனிதத்தன்மையற்ற தன்மையையும் போக்கிவிடு என்று நான் இரவும் பகலும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன் என்ற  இந்த உறுதிமொழி எடுத்துக் கொள்வதை இந்துவல்லாத எவரும் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது.
அந்த கடிதத்தில் இருக்கும் மற்ற 12 உறுதி மொழிகளும், மதஉணர்வு கொண்டவை அல்ல என்றாலும்,  இந்த முட்டாள்தனத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் எப்போதும் உட்காரமட்டேன், எனது வீட்டில் உள்ள குளிரூட்டும் சாதனத்தை எடுத்துவிடுவேன்,ஆடம்பர காரில் எப்போதும் பயணம் செய்யமாட்டேன், எப்போதும் ஜீப்பில் மட்டுமே பயணம் செய்வேன், ஜீப்புக்கு டிரைவரை எப்போதும் வைக்கமாட்டேன், நானே ஓட்டிச் செல்வேன், ஜன லோக்பாலுக்கு ஆதரவு தருவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை வேட்பாளர்களிடம் இருந்து பெறவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த ஒரு பக்க கடிதத்தில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால் ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தினருக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது என்பதையே காட்டுகின்றன.
பதேபூரில் நடந்த வேடிக்கையைப் பார்த்து எவராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. மகாதேவ் மைதானத்தில் திரண்டிருந்த 2000 பேர் கொண்ட கூட்டத்தில் பாதிபேர்  சிறுவர்கள்; பெரும்பாலும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிக் குழந்தைகள் ஆவர். பள்ளிச் சீருடைகளில் அவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு வாக்களிக்கும் வயது வரவில்லை. மற்றவர்களுக்குப் பிறகு பேசிய கிரண்பேடி கூட்டத்தில் இருப்பவர்களைக் கைதூக்கச் சொன்னார். உடனே கை தூக்கியவர்கள் அனைவரும் குழந்தைகள். வாக்களிக்கும் வயது வந்தவர்கள் எவரும் கிரண்பேடி கூறியதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் உடனே கைதூக்கவில்லை. தங்கள் தவறை அவர்கள் உணர்ந்த பிறகு கை தூக்க வெட்கப்பட்டார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேடி பேசிக்கொண்டே போனார். ஹசாரேயின் அழைப்புக்கு வாக்காளர்கள் எவ்வாறு ஆதரவு தருகிறார்கள் பாருங்கள். ஊழல்வாதிகளுக்கு எப்போதுமே வாக்களிக்க மாட்டோம் என்று நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று உறுதிமொழி ;எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த முறை எல்லோரும் புரிந்து கொண்டு எழுந்து நின்றனர். பள்ளிக் குழந்தைகள்தான் அனைவரையும் விட மிக ஆவல் கொண்டவர்களாக இருந்தனர்.
ஹசாரேயின் ஆட்கள் நடத்திய முதல் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி இதுவே. பிப்ரவரி 2 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கிரண்பேடி தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு, இக்குழு பதேபூரை விட்டுச் சென்றது. அடுத்த நிகழ்ச்சி பதேபூரிலிருந்து 140 கிமீ தொலைவில் உள்ள கோண்டாவில் நடைபெற இருந்தது. அன்னா குழுவினர் வந்தடைய தாமதம் ஆன போதிலும், நகரின் மய்யப் பகுதியில் இருந்த ராம்லீலா மைதானத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கிவிட்டது. பதேபூரில் நடைபெற்ற அதே கூத்து இங்கும் நடைபெற்றது. வாக்காளப் பெருமக்களிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தாங்கள் பரிந்துரைக்கவில்லை என்றே அக்குழுவினர் சொல்லி வந்தனர். பதேபூர் போலவே கோண்டா நிகழ்ச்சியிலும் இந்துத்துவ சேனை தாராளமாகவே பங்கெடுத்துக் கொண்டது. கோண்டா விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டாக்டர் திலீப் குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். இங்கு மறுபடியும் ஒரு முறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திக் விஜய் சிங் ஆகியோரையும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கையும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியையும் கிழிகிழி என்று கிழிக்கும் தங்கள் பணியை மிகவும் ஆர்வத்துடன் ஹசாரே குழுவினர் ஆற்றினர். காவிக்கட்சியைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல், மறுபடியும் ஒரு முறை அவர்கள் மவுனமாகவே இருந்தனர். பா.ஜ.க.வைப் பற்றி பேசும்போது உத்தரகண்ட் பா.ஜ.க. அரசு பலமான லோகாயுக்தா மசோதாவை நிறைவேற்றியதை மட்டும் குறிப்பிடத் தவறவில்லை. கூட்டத்தை முடிக்கும்போது,  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விரும்புகின்றனர் என்பது பற்றி அங்கு கூடியிருந்த வாக்காளர்களின் மனதில் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை.
பைசாபாத் குலாப் பாரி மைதானத்தை அவர்கள் பிப்ரவரி 3 அன்று பிற்பகல் 1 மணி அளவில் அடைந்த போது, ஹசாரே குழுவினரின் பேச்சில் ஒரு நுணுக்கமான மாற்றத்தைக் காணமுடிந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையற்றவர்கள் ஆகியோர் பயன் பெறும் வகையில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் அவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி, பா.ஜ.க.வைத் தவிர, மற்ற கட்சிகள் மீது வசைமாறி பொழியும் தங்கள் வழக்கமான பாணியைக் கைக் கொண்டனர். உத்தரகண்ட் பா.ஜ.க. அரசின் பலமான லோகாயுக்த மசோதா பற்றி சற்று அடக்கியே வாசிக்கப்பட்டது. உத்தரகண்ட்டைப் பின்பற்றி உத்திரப் பிரதேசத்திலும் இது போன்று லோகாயுக்தாவைக் கொண்டு வருவோம் என்று வாக்காளர்களுக்கு பா.ஜ.க.வினர் உறுதி கூறாததைப் பற்றி மென்மையாக விமர்சித்தனர். செய்தி என்னவோ அதே செய்திதான். ஆனால் அது அளிக்கப்பட்ட முறையில்தான் சற்று மாற்றம். பைசாபாத் நிகழ்ச்சி முடிந்த நேரத்தில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விரும்புகின்றனர் என்பது பற்றி வாக்காளர்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. பலமான லோகாயுக்தா மசோதா கொண்டு வருவதாக வாக்களிக்காவிட்டால், பா.ஜ.கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் கூறியது, அவ்வாறு வாக்களித்தால், அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கூறும் மற்றொரு வழியாகும்.
பைசாபாத்தில் ஹசாரே குழுவினர் கடைப்பிடித்த கட்டுப்பாட்டுக்கான காரணத்தை ஊகிப்பது ஒன்றும் கடினமானதல்ல. பதேபூர் மற்றும் கோண்டாவில் அவர்கள் முன்பு செய்தது போல அல்லாமல், பைசாபாத்   பகுதியில் நீண்ட காலமாக இடதுசாரி மற்றும் தலித் அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்தவரும், பேரணிக்குத் தலைமை தாங்கியவருமான  அர்விந்த் மூர்த்தி ,  நிதின் குமார் மிஷ்ரா மற்றும் வினோத் சிங் போன்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும் பைசாபாத் பேரணி. அயோத்தியா கே.எஸ்.சேகட் முதுகலைக் கல்லூரி உருது மொழித் துறைத் தலைவரும் மூத்த உள்ளூர் அறிஞருமான தாரிக் சையத் என்பவர் மேடையில் இருந்ததும், அக்கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கியதும்,  முன்னர் இரண்டு கூட்டங்களில் செய்தது போல் பா.ஜ.க.வை அதிகமாகப் புகழ்ந்து பேசாமல் இருக்கும்படி அவர்களை கட்டாயப்படுத்தியது.
அவர்களின் கட்டுப்பாடு எத்தகையதாக இருந்த போதிலும், அன்னா குழுவின் பெரும் பகுதியினர் மதவாதத்தின் அச்சுறுத்தல் பற்றி எதுவும் பேசாமல் மவுனமாகவே இருந்தனர். அவர்களில் முப்தி ஷமூம் காஜ்மி என்ற ஒருவர் மட்டுமே மதவாத அரசியலுக்கு எதிராகப் போராடவேண்டியதன் அவசியத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார். அயோத்தியா என்றால், அது அங்கு யாரும் சண்டையிடும் ஒரு இடமல்ல; மதத்தின் பெயரால் இந்து - முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைக்க ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முயன்றனர். நமது மத அடையாளங்கள் எத்தகையனவாக இருந்தாலும் சரி, நாம் ஒற்றுமையாக இல்லாமல் போனால், லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராட நம்மால் முடியாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று அவர் கூறினார்.
முன்னரே முடிவு செய்தபடி பேச்சாளர்களைப் பேச அழைக்க விரும்பிய அர்விந்த் மூர்த்தி என்ற மேடை மேலாளரை முழங்கையால் இடித்துத் தள்ளி மேடையில் ஒரு பரபரப்பை கிரண்பேடி இங்கும் எழுப்பினார். தனக்கெனத் தனியான கருத்துகளைக் கொண்டிருந்த பேடி, மைக்கைப் பிடித்தவுடன், கோபத்துடன் மூர்த்தி மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார். பேடி அரை மணி நேரம் பேசினார். அவருக்கு முன்பு பேச இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இலியாஸ் ஆஜ்மி தனது உரையைத் தொடங்கியவுடன், கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது.
முதல் கட்டப் பயணத்தில்  இறுதியாக பாஸ்டியில் நடந்த  நிகழ்ச்சியில் ஹசாரேயின் வழக்கமான பாட்டு அதன் அசல் உணர்வுக்குத் திரும்பியது.  பைசாபாத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போய்விட்டன. பேடி மற்றும் சிசோடியா ஆகியோரின் பேச்சுக்களில் இது மிகவும் நன்றாகத் தெரிந்தது. ஹசாரே குழுவின் சஞ்சய் சிங், மனீஷ் சிசோடியா , கிரண்பேடி ஆகிய மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இங்கு பேசினர். கூட்டம் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ளப்பட்டது. இயக்கத்தின் முக்கியமானவர்களில் சிலர் டில்லி செல்லும் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததே இதன் காரணம்.  கடந்த 21 ஆண்டுகளாக உத்திரப் பிரதேசம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறுகிறார். தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் மாநிலத்தை மாற்றிக் காட்டுவதாக அவர் கூறுகிறார். கடந்த 21 ஆண்டுகளாக காங்கிரசால் உத்தர பிரதேசத்தில் கொள்ளை அடிக்க முடியவில்லை என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் வருத்தமெல்லாம். அதைத்தான் இப்போது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள் என்று சிசோடியா பேசினார். ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததால், உத்தரகண்ட் பா.ஜ.க. அரசு மற்றும் அதன் பலமான லோகாயுக்தா மசோதா பற்றி  குறிப்பிட்டு  கிரண் பேடி மிகக் குறைவாகவே பேசினார்.
பாஸ்டியில் பேரணியை ஏற்பாடு செய்தவர்களில் சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கறிஞரும், உள்ளூர் கமிட்டியின் ஒரு முக்கிய உறுப்பினருமான ஹரீஷ் சந்திர பிரதாப் சிங், 1980களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட சிறீராமஜென்மபூமி முக்தி சேவா சமிதியின் மாவட்ட அமைப்பாளரும், கரசேவைப் பிரிவின் தலைவர்களில்  ஒருவரும் ஆவார். இவர் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட இந்துத்துவ முகம் கொண்டவர்.
நான்கு நிகழ்ச்சிகளிலும் வினியோகிக்கப்பட்ட ஹசாரேயின் நான்கு பக்க செய்தியில் கூட பா.ஜ.க.வுக்கான ஆதரவு வெளிப்படையாகத் தெரிவதாக இருந்தது. அந்த செய்தி ராகுல் காந்தி, முலாயம்சிங் மற்றும் மாயாவதி மீது தொடுக்கப்பட்ட கேள்வி வடிவமான குற்றச்சாட்டுகளின் பட்டியலே ஆகும். சம்பிரதாயத்துக்காக, கடிதத்தின் இறுதிப் பகுதியில் பா.ஜ.க.விடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. என்றாலும் உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அரசு செயல்படும் விதம் பற்றிய பாராட்டுவது போலவே அக் கேள்விகள் அமைந்திருந்தன. கருநாடக மாநில பா.ஜ.க. அரசின் ஊழல் பற்றியோ, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் பற்றியோ ஒரு குறிப்பு கூட அதில் இல்லை. சிதம்பரம், முலாயம்சிங் மற்றும் மாயாவதி பற்றி குறிப்பிட்டிருக்கும் இந்த பிரசுரத்தில் கருநாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பற்றியோ, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த மரியாதை அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லி ஜந்தர் மந்திரில் ஹசாரே முதன் முதலாக பட்டினிப் போராட்டம் இருந்த போது, சங் பரிவாரத்துடன் அவருக்கு இருந்த நெருக்கம் வெளிப்படையாகக் காணப்பட இயன்றதாக இருந்தது. மேடை அலங்காரத்தில் இந்துத்துவா அடையாளங்கள் முக்கிய அம்சங்களாக விளங்கின. அது போன்ற அரசியல் உணர்வு அற்ற, ஆனால் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் தாக்குதலுக்கு இவை இலக்காயின. இத்தகைய மக்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இருந்தபடியால், ராம்லீலா மைதானத்தில் ஹசாரே நடத்திய அடுத்த கட்ட காட்சியில் அவரது தளபதிகள் இத்தகைய மக்களின் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க முயன்றனர். மேடையின் பின்னணியில் இருந்த காந்தியின் படத்தின் இடத்தை பாரதமாதா பிடித்துக் கொண்டார். உத்தரப் பிரதேசத்தில் ஹசாரேயும் அவரது ஆதரவாளர்களும் தங்களது சொந்த அடித்தளத்திற்கே திரும்பினர். இம்மாநிலத்தில் அரசியல் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில் வரும் நாட்களில் கிரண்பேடியும் அவரது கூட்டாளிகளும் தொடர்ந்து பெரும் அளவில் சத்தத்தை எழுப்பி கோபத்தைத் தூண்டிவிடக் கூடும். ஆனால் ஹசாரேயின் குழு பா.ஜ.கட்சியின் இரண்டாவது குழுவாக மாற்றம் பெற்றது முழுமையானது என்பதைத் தவிர அதனால் விளையக்கூடிய பயன்  வேறு ஒன்றும் இருக்காது.
(நன்றி: வெளிப்படை (Open) 
என்ற இதழ்:  20.02.2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்)


.
 4

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...