Thursday, February 2, 2012

ஆளுநர் உரை


நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக, ஆண்டுத் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பது ஒரு சம்பிரதாயம் ஆகும். உண்மையைச் சொல்லப்போனால், இது ஆளுநர் படிக்கும் உரை அவ்வளவுதான் - மற்றபடி அரசு தயாரித்துக் கொடுக்கும் ஓர் அறிக்கையைத்தான் ஆளுநர் படிக்கிறார்.
கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது ஆளுநர் படிக்கும் ஆங்கில உரையை சட்டப் பேரவைத் தலைவர், தமிழில் படிக்காதது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது; இந்த முறை தவிர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
புதிய ஆளுநர் மேதகு ரோசைய்யா அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் படித்த அறிக்கையில் குறிப்பிடத்தக்கது, தானே புயலால் அடியோடு பெயர்த்து எறியப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். திட்டமாகும். இதற்காக அரசு செலவழிக்க இருக்கும் தொகை ரூபாய் ஓராயிரம் கோடியாகும்.
இந்த மிகப் பெரிய திட்டம் சரியாக நிறைவேற்றப்படு மானால், மிகப் பெரிய பலனை பாதிக் கப்பட்ட மக்களுக்கு அளிக்கும் என்பதில் அய்யமில்லை.
தி.மு.க. ஆட்சியில்  குடிசைகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டு, அதனை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள உறுதிச் சீட்டும் (Token) பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு விட்டது.
தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டு, சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இன்னும் அது குறித்த தொடக்கத்தைக் காணவில்லை.
தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மோனோ ரயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான திட்டம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மெட்ரோ திட்டம்தான் சிறந்தது என்று தொழில் நுட்பம் தெரிந்த அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுவும் முந்தைய திமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதற்காக மெட்ரோ திட்டத்திற்குப் பதிலாக மோனோ திட்டம் என்றால், அது தவிர்க்கப்படுவது நல்லது. ஏனெனில், போக்குவரத்துச் சிக்கலின் இரும்புப் பிடியில் சென்னை பெருநகரம் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், இந்த மிக முக்கியமான திட்டத்தில் அரசியல்பார்வை நுழையாமல் இருக்க வேண்டும் என்பதே நமது விழைவு.
ஆளுநர் உரையில் எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளும் கூடாது என்று சொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், வரவேற்கத்தக்கதாகும். கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தானடித்த  மூப்பாக மத்திய அரசு நடந்து கொள்வது தடுக்கப்பட்டே தீர வேண்டிய ஒன்றாகும். கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும் நல்ல முடிவாகும்.
ஆளுநரின் உரை குறித்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே சில முக்கிய குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்திடுவது அவசியமாகும்.
முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. சில முக்கிய காரணங்களின் அடிப்படையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பட்டப் பகலில் பிரதான சாலையில் வங்கிக் கொள்ளை நடந்திருக்கிறது. கொலை, கொள்ளைகள், குழந்தைகள் கடத்தல் என்பது அன்றாட தகவல்களாகி விட்டன.
இன்று காலை ஏடுகளில் வெளி வந்துள்ள ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்! மதுரவாயல் அருகே மூவரைக் கட்டிப் போட்டு 22 லட்சம் ரூபாய் கொள்ளை, புது வண்ணையில் கோவில் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு வெள்ளிக் கிரீடம், தங்கத் தாலி திருட்டு, திருவொற்றியூரில் தகராறைத் தட்டிக் கேட்ட வாலிபருக்கு கத்திக் குத்து, தூத்துக்குடியில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, ஆம்பூர் அருகே நகை அடகுக் கடையில் இரண்டு கோடி ரூபாய் கொள்ளை, ஓசூரில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியரை மிரட்டி 40 சவரன் நகை கொள்ளை; பெரிய பாளையத்தில் மின் கம்பத்தில் கட்டி வைத்து லாரி ஓட்டுநர் எரித்துக் கொலை, செங்கற்பட்டையடுத்த எம்.என். குப்பத்தில் அ.தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்துக் கொலை இன்று காலையில் வந்த ஏடுகளில் இடம் பெற்ற தகவல்கள் இவை.
ஒரு ஆட்சி செம்மையாக நடைபெறுகிறதா, இல்லையா என்பதற்கு சட்ட ஒழுங்கின் நிலைதான் முக்கியமான அளவுகோலாகும். அந்த வகையில் இன்றைய அரசு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
முதல் அமைச்சர்  பொறுப்பில்தான் உள்துறை இருக்கிறது - இதில் கவனம் தேவை! தேவை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...