Saturday, January 21, 2012

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா!


பெரியார் திடலில் விருது வழங்கப்பட்ட உயர் தமிழர்கள்!

சென்னை, ஜன.20-சென்னை பெரியார் திடலில் ஜனவரி 15,16,17 ஆகிய நாள்களில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாவில் பெரியார் விருது மற்றும் சாதனையா ளர்கள் விருது அளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு வருமாறு:

பெரியார் விருது பெற்றவர்கள்:

பொன்வண்ணன்
1991ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற தமிழ்த்திரைப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். தொடர்ந்து அன்னை வயல், கருத்தம்மா, பசும்பொன், பெரிய இடத்து மாப்பிள்ளை, பருத்தி வீரன், பேராண்மை, உள்பட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் பல்வேறுபட்ட கதாபாத்திரங் களில் நடித்தவர்.

அது மட்டுமல்லாமல், தமிழ் தொலைக்காட்சிகளில் குணசித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர்.

மேலும், திரைப்படங்களில் உரையாடல், திரைக்கதை, இயக்கம் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். 1992ஆம் ஆண்டு வெளிவந்த அன்னை வயல், 2003இல் வெளிவந்த  ஜமீலா ஆகிய தமிழ்ப்படங்களை இயக்கி இருக்கிறார். இவரின் பணி இன்றும் தொடர்கிறது.
இயக்குநர் சற்குணம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆம்பலாப்பட்டு என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். இல க்கியத் தேடலும், உலகத் திரைப் படங்கள் பற்றிய பார்வையும், சுய படைப் பாற்றலும் மிக்க இயக்குநர், கிரீடம் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். பொம்மை என்ற நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் விளம்பரப் படங்களை நிறைய எடுத்துள்ளார்.

2 கவிதைத் தொகுதி களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்மண் மீதும், மக்கள் மீதும் மாறாத அன்பு கொண்ட தமிழுணர்வாளர், தஞ்சை மனிதர்களின் வாழ்க்கையைக் கல்வெட்டாக்கியது இவரது முதல் படைப்பான களவாணி. தரத்திலும், கருத்திலும், நேர்த்தியிலும் உலகத் திரைப் படங்களின் தரத்தில் வெளிவந்தது இரண்டாவது படைப்பான வாகை சூட வா. மக்களுக்காக திரைப்படமாக சமூக அக் கறையை கதைக் களனாய் கொண்டிருந்தது.

சென்னைத் திரைப்படவிழாவில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் களவாணிக்கும், வாகை சூட வா படத்திற்கும் தொடர்ந்து இருமுறை விருதுகள் வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 50க்கும் மேற்பட்ட உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகளைப் பெற்றுள்ளது வாகை சூட வா.

சரண்யா பொன்வண்ணன்

1987ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, தற்போது 2011இல் வெளிவந்த மகாராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

2005 தவமாய்த் தவமிருந்து- திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, 2006 எம் மகன் திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது,  2010 தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக பிலிம்பேர் விருது, 2010 புலி திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது.

தமிழ்நாடு அரசு விருது: 2006 எம் மகன் திரைப் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது

தேசிய விருது: 2011 தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஸ்கர் சக்தி
தேனி அருகே உள்ள வடபுதுப் பட்டி இவரது ஊர். நாற்பத்தைந்து வயதான இவர் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் படித்தார்.

1995இல் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எழுத்தா ளராக அறிமுகம். தொடர்ந்து விகடனில் மூன்று ஆண்டுகள் உதவி ஆசிரியர் பணி. அதன் பின்னர் தொலைக் காட்சியிலும் திரைப்படத்திலும் பத்து ஆண்டுகள் இயங்கி வருகிறார். சிறுகதை, குறுநாவல்களடங்கிய மூன்று தொகுதிகள்.

1. பழுப்பு நிறப் புகைப்படம் 2. அழகர்சாமியின் குதிரை 3. கனகதுர்கா.

மெட்டி ஒலி, கோலங்கள், லட்சுமி, மேகலா உள்ளிட்ட பல தொடர்களின் வசனகர்த்தா. எம்டன் மகன், முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு, வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, சகாக்கள், ராஜபாட்டை  ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக இருந்தார்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் கதை வசனம் மற்றும் துணை இயக்குநர்.

நம் சமூகத்தில் நிலவும் அவலங்களையும், அபத்தங் களையும், பிரச்சினைகளையும் கவனிப்பதும் கிண்டலுடன் அவற்றை விமர்சித்து எழுதுவதும் இவர் எழுத்தின் இயல்பாக இருக்கிறது என்று இவரை வாசிப்போர் அவதானிக்கிறார்கள். இவர் திரைப்படங்களில் மிக நுட்பமாக பகுத்தறிவு கருத்து களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் வல்லவர்.

விருதுகள்: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சின்னத்திரையில் சிறந்த வசனகர்த்தா எனும் தமிழ்நாடு அரசின் மாநில விருது, சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பெற்ற சிறந்த தனிநபர் பங்களிப்பு விருது.

ஓவியர் அரஸ்

இயற்பெயர்: சுப.திருநாவுக்கரசு, புனைபெயர்: அரஸ், தமிழ்ப் பத்திரிகையுலகில் கதைப்படங்கள், கார்ட்டூன்கள், கேரிகேச்சர், என 25 ஆண்டுகளுக்கு மேலாக வரைந்து வருகிறார்.

அப்பா: சுப்ரமணி (சுதந்திர போராட்ட தியாகி), அம்மா: தனபாக்கியம் (சுதந்திர போராட்ட தியாகி) INAஇல் இருந்தவர்கள். அப்பா சுப்ரமணி தீவிர திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். முதன் முதலில் பர்மாவில் தி.மு.க.வை நிறுவியவர் பர்மா தி.மு.க. அமைப்பின் தலைவராக இருந்தவர்.

மனைவி பெயர்: பாவை, அரவிந்தன், ஹர்ஷவர்தன் என்ற இரண்டு மகன்கள், பெரியார் பிஞ்சு மாத இதழில் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படக்கதையை வரைந்தவர். தற்பொழுது இவரது கை வண்ணத்தில் புத்தர் படக்கதை வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலின் முதல் தொகுதியில் புதுமையான முறையில் கருத்தாழமிக்க ஓவியங்களை வரைந்தவர். விடுதலை பெரியார் பிறந்தநாள் மலரில் ஓவியங்களை வரைந்து வருகிறார். கையால் வரையும் ஓவிய பாணியில் இருந்து தொடங்கிய இவர் பத்திரிகைகளுக்காக முதன்முதலில் கணினியில் ஓவியங்களை வரைந்தவர்.
ஆன்டோ பீட்டர்
கல்வி: (3 ஆண்டு) (கணிதம்), பிறந்ததேதி: 26.4.1967 (44) பணி சிறப்பு: சிஎஸ்சி - சாஃப்ட் இவர் கம்யூட்டர் எஜூகேஷன் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவர், தமிழ் மென்பொருள் தயாரிப்பில் இருபது வருட அனுபவம் பெற்றவர். கம்ப் யூட்டர் மற்றும் அனிமேஷன் கல்வி அளிக்கும் முன்னணி நிறு வனத்தை நடத்தி வருகிறார். முதன் முதலில் தமிழ்மொழிக் கென www.tamilcinema.comஎன்ற இணையப்பத்திரிகை தொடங்கியவர்.

தமிழ்க்கணினி கட்டுரையாளர்,தமிழகத்தில் மல்டிமீடியாகல்வியை அறிமுகப்படுத்தியவர். இளைஞர் களுக்குவேலைவாய்ப்பு, சுயதொழில்வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.

Periyar.org என்ற நமது இணைய தள உருவாக்கத்தில் கணினி தொழில்நுட்பப் பணியை செய்தவர்.

விருதுகள்: 1. தமிழும் கணிப்பொறியும் என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவர். (2004)

2.மத்திய அரசு நடத்தும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2006 சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றவர் 2007.

முனைவர் மு.இளங்கோவன்
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக் கட்டு என்னும் சிற்றூரில் 20.6.1967இல் உழவர்குடியில் பிறந்தவர். பெற்றோர் சி.முருகே சனார், திருவாட்டி மு.அசோதை அம்மாள். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள் கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் முடித் தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984).

மூன்றாண் டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் ந.சுந்தரேச னார் என்னும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந் தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992).

பின்பு புதுவைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல் துறையில் மராட்டியர் ஆட்சியில் தமிழகமும், தமிழும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றவர். (1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக நிதியுதவியுடன் முனைவர் பட்ட ஆய்வினை (1993-1996) நிறைவு செய்தார்.  முனைவர் பட்டத்திற்கு இவர் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார்.

மு.இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக் கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இதில் செயங்கொண்டம், தமிழோசை நற்பணி மன்றம் நடத்திய தாய்மொழிவழிக் கல்வி எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களிடம் தங்கப்பதக்கம் பெற்றவர்.

நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள் எனும் தலைப்பிலும், பாவலர் முடியரச னாரின் தமிழ்த்தொண்டு எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.

மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் முதலான நூல்களை வெளியிட்டார். இந்நிலையில் 1997இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழியல் ஆவணம் எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்பு 1998இல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார்.

பின்பு கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் 16.6.1999 முதல் 17.8.2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்திய அரசின் நடுவண்தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பெற்று 18.8.2005 முதல் புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

மு.இளங்கோவனின் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப் பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பை, பொன்னி ஆசிரியவுரைகள், நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் முதலியன குறிப்பிடத்தக்கனவாம்.

கவிதைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும், ஆய்வு செய்யவும் திறன்பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத் திற்குத் தமிழக அரசு பத்து லட்சம் ரூபாய் வழங்குவதற்கு இவரின் முயற்சி பயன்பட்டுள்ளது. மேலும் புலவரின் பிறந்த ஊரில் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியமையும் இவர் முயற்சியால் நடந்துள்ளது. கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் இணைக்கும் ஒருங்குறி சேர்த்தியம் முயற்சியில் உலக அளவில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆக்கமான கருத்துகளை முன்மொழிந்தவர்.

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியவர். அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்துகொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டதுடன் பெருமழைப்புலவர் பெ.வே.சோமசுந்தரனார் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் உரையாற்றியவர். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான ஆர்வர்டு, யேல், எம்.அய்.டி., மேரிலாந்து, தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களைப் பார்வையிட்டு அங்குள்ள கல்விமுறை, ஆசிரியர்களின் துறைசார் ஈடுபாடு, மாணவர்களின் கல்வி ஈடுபாடு, நூலகம் ஆகியவற்றைப் பார்வையிட்டு வந்தவர்.

இணையம் கற்போம் என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலும், தமிழகத்தின் பிற கல்லூரிகளிலும் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக உள்ளது. முனைவர் மு.இளங்கோவனின் நூல்களுக்கு ஸ்டேட் பாங்கு விருது (மணல்மேட்டு மழலைகள்), கவிதை உறவு அமைப்பின் மு.வரதராசனார் பரிசு (அயலகத் தமிழறிஞர்கள்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் விருது (இணையம் கற்போம்), கு.சின்னப்ப பாரதி இலக்கிய விருது (இணையம் கற்போம்) கிடைத்துள்ளன.

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்கள் வளர்ச்சிக்கும் அறிவியல் சிந்தனையோடு பணியாற்றியும், பயிற்றுவித்தும் வருவதோடு மிகச்சிறந்த ஆய்வுப் பணிகளைச் செய்துள்ளமையைப் பாராட்டி இந்த ஆண்டு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இவருக்குப் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

இளவரசு
இவர் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியைத் தொடங்கி நடிகராக மாறியவர். பதின்மூன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 1987 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் வேதம் புதிது திரைப்படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து பசும்பொன், போர்க்களம் வெற்றிக் கொடிகட்டு உள்பட 75 திரைப்படங் களுக்கு மேல் நடித்தவர்.

1996இல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்திற்க்கும் 1998-இல் வெளியான இனியவளே, நினைத்தேன் வந்தாய் ஆகிய திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

1999இல் மனம்விரும்புதே உன்னை - திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு தமிழக அரசின்சிறந்த ஒளிப்பதிவாளர்விருதை வென்றவர்.

செய்யும் தொழிலில்இவர்காட்டும்ஆழ்ந்த ஈடுபாடு காரணமாகவும், மண்வாசனை நிறைந்தஇவரின் வசன உச்சரிப்புகாரணமாகவும் அனைவரும் விரும்பக்கூடிய அளவுக்கு உயர்ந்திருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும்.அந்த பாத்திரமாகவே மாறிநடிக்கக்கூடியவர்.

இவர் குடும்பம் திராவிட இயக்கத்தின் பாரம்பரியக் குடும்பம். சுயசிந்தனையாளர் மனதில் பட்டதை பளிச்சென்று கேட்கக்கூடியவர்.
1967இல் அறிஞர்அண்ணா தலைமையில்தி.மு.க ஆட்சி அமைத்த பொழுது மதுரை மேலூர் தொகுதியில்இளவரசுவின் அப்பா மலைச்சாமிவெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினரானவர்என்பது குறிப்பிட தக்கது.
எஸ்.பாஸ்கர்

வயது: 37 தோற்றுனர் மற்றும்தலைமை நிருவாகி- லினக்ஸ்எக்ஸ்பெர்ட் சிஸ்டம்ஸ், சென்னை. கணினி அறிவியல் மற்றும்பொறியியலில் பட்டயப்படிப்பைசென்னை தரமணிமத்தியபாலிடெக் னிக்கல்லூரியில்முடித்தவர். கோவை பாரதியார்பல்கலைக் கழகத்தில்கணினி அறிவியல் பட்டப்படிப்பு பெற்றவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத் தில்பொறியா ளராக 1995 ஆகஸ்ட் முதல்2002 ஜூலை வரை பணிபுரிந்துள்ளார்.

தகவல்தொழில்நுட்பத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம்பெற்றவர். மென்பொருள் துறை தயாரிப்பு நிறுவனமான லினக்ஸ்எக்ஸ்பர்ட்நிறுவனத்தை 2003 இல் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

கல்வியில் சுதந்திரமான, வெளிப்படையான மென் பொருள்ஆதாரம்பற்றிய கருத்தரங்குகளை தமிழ் நாட்டின்40 பொறியியல்கல்லூரிகளிலும், 9 அறிவியல், கலைக் கல்லூரிகளிலும், 17பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இவர்நடத்தியுள்ளார்.

எஸ்.சிவகுமார்
வயது: 38 பொருளாதார பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், நிதிமேலாண்மைத் துறையில் முதுகலை பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக் கழகத் திலும் பெற்றவர்.

தகவல் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும்வெப்சொல் யூசன்ஸ்நிறுவனம்என்னும் அமெரிக் காவைத்தலைமையிடமாகக் கொண்டநிறுவனத்தில் மார்க்கெட்டிங்பணியை 1996 முதல்1998 வரை இரண்டு ஆண்டுகள் செய்தார்.

சொந்தமாகடாட்காம் என்றநிறுவனத்தை 1998 இல் தொடங்கி 2000 வரை நடத்தி யுள்ளார். ஒரு முன்னணி பணி நியமனநிறுவனத்தில்நியமனப்பிரிவின் தலைவராகவும் ஓராண்டு பணியாற்றியுள்ளார். 2002 முதல்2004வரை ஈஆர்பி மற்றும் வெப்சொல்யூ சன்ஸ்நிறுவனத்தில்ஈ-வணிகப்பிரிவின்தலைவ ராகப்பணியாற்றினார்.

2004 லிருந்து இதுநாள்வரை பி.பி.ஓ. சோர்சிங் நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மைக்ரோசாப்ட், சிஎன்பிசி-என்பிசி பல்கலைக் கழகம், உலக வங்கி போன்ற 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்காக சேவை புரிந்துள்ளார்.

இவர் தன்னுடைய நிறுவனங்களில் பெண்களுக்கு 70 விழுக்காடு பணியிடங்களை வழங்கி இருப்பது குறிப்பிடத் தக்கது.


பொ.ஆனந்தன்
பொ.ஆனந்தன்15.08.1958இல்பிறந்தவர். பெற்றோர்பெயர்- பொன்னுரங்கம், மேனகம்மாள். அயனாவரத்திலுள்ள சிறீ ரெங்கா நாயுடு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித் துள்ளார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இன்றைய நமது தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வரை திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள் செய்வதைத் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றவர்.

தொடக்கத்தில் பொ. ஆனந்தனின் தந்தை பொன்னுரங்கம்அவர்கள்இந்தப்பணியை செய்து வந்தார். ஆனந்தனின் மூத்த சகோதரர்உதயகுமார்செய்தார், தொடர்ந்து தொய்வின்றி ஆனந் தன்அவர்கள்செய்து வருகின்றார்.

இவருக்கு குழந்தைகள் கிடையாது. ஆகவே இவர் தனது சகோதரர் உதயகுமாரின் மகளை அமெரிக்காவில் தொழில் நுட்பக் கல்வி கற்க வைத்திருக்கிறார். பொன்னுரங்கம் ஆனந்தன் என்று இருந்த இவரது பெயர், இவர் தமது பணியில்சிறப்பு பெற்றமையால் சுவரொட்டி ஆனந்தன் - என்று அழைக்க பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


எஸ். ராமகிருஷ்ணன்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம்,  மொழிபெயர்ப்பு, சினிமா, இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணறு கிராமம். 1966ஆம் ஆண்டு பிறந்தவர். முழுநேர எழுத்தாளரான  இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்டவர்.

இவரது சிறுகதைகள் தமிழில் புதியதொரு கதை சொல்லும் முறையை உருவாக்கியது குறிப் பிடத்தக்கது. அட்சரம் என்ற இலக்கிய இதழை ஆசிரியராக இருந்து அய்ந்து ஆண்டுகாலம் நடத்தியிருக்கிறார். தற்போது இவரது www.sramakri shnan.com என்ற இணையதளம் சமகால இலக்கிய முயற்சிகள், உலக இலக்கியங்கள், உலக சினிமா எனத் தீவிரமானதொரு இலக்கிய இயக்கம் போல இளம் வாசகர்களுக்கான முக்கிய இணையதளமாக விளங்குகிறது.  உலகெங்கும் உள்ள பார்வையாளர்களால் இந்த இணையதளம் இதுவரை இருபத்துமூன்று லட்சம் முறை பார்வை யிடப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

தேர்ந்த கதை சொல்லியான இவர் பள்ளிக் குழந்தைகளுக்கு என தமிழகம் முழுவதும் முப்பதிற்கும் மேற்பட்ட கதைசொல்லும் பயிற்சிமுகாம்களை நடத்தியிருக்கிறார். அத்துடன் டிஸ்லெக்சியா நோயின் காரணமாக கற்றல் குறைபாடு கொண்ட  குழந்தைகளுக்கு என தனியான  கதைசொல்லும் முகாமை நடத்தியிருக்கிறார்.  சென்னை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குறும்பட இயக்குநர்கள் மற்றும் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்காக திரைக்கதை எழுதும் பயிற்சி முகாம்கள் நடத்தியிருக்கிறார்.

மகாபாரதத்தை விரிவாக ஆராய்ந்து  இவர் எழுதிய உப பாண்டவம் நாவல் தமிழின் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டதுடன் மிகுந்த வாசகர்களின் வரவேற்பை பெற்றது. குற்றப்பரம்பரை என்று அடையாளப்படுத்தபட்டு ஒடுக்கப்பட்ட இனத்தின்  இருண்ட வாழ்வியல் அனுபவங்களை பேசும் நெடுங்குருதி  சிறந்த நாவலுக்கான ஞானவாணி விருது பெற்றிருக்கிறது.

யாமம் என்ற இவரது நாவல் சென்னை நகரின் முந்நூறு ஆண்டு வரலாற்றை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டு மிகுந்த  வரவேற்பை பெற்றது. உறுபசி என்ற நாவல் தமிழ்படித்து வேலையில்லாமல் போன இளைஞனின் மனதுயரை விவரிக்கும் உன்னதமான நாவல்.  துயில் நோய்மையின் வரலாற்றை சொல்லும் மிக முக்கிய நாவலாகும்.

இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம் மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு,  கன்னடம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவரது துணையெழுத்து என்ற  கட்டுரைகளின் தொகுப்பு ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. பத்தி எழுத்தில் தனக்கென மிகப் பெரிய வாசகவட்டத்தை உருவாக்கிய முதல் எழுத்தாளர் இவரே.

உலக சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் உலக சினிமா என்ற ஆயிரம் பக்க அளவுள்ள விரிவான அறிமுக நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அத்துடன் அயல் சினிமா, பதேர்பாஞ்சாலி, சித்திரங்களின் விசித் திரங்கள், பேசத்தெரிந்த நிழல்கள் என்று சினிமா குறித்த நான்கு முக்கிய நூல்களை  எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கர்ணமோட்சம் குறும்படம் சிறந்த படமாக தேசிய விருது பெற்றுள்ளதோடு இந்திய மற்றும் உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இதுவரை இருபத்தேழு முக்கிய விருதுகளை பெற்றிருக்கிறது. மற்றவள் என்ற இன்னொரு குறும்படம் தமிழின் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக .  பாபா, ஆல்பம், சண்டைக்கோழி, உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், சிக்குபுக்கு, மோதிவிளையாடு என  பத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்.  இந்தப் படங்களில் சில வெற்றிகரமாக நூறு நாள்களைக் கடந்து ஒடியவை.

அய்ந்து நாவல்களையும், பதினோரு சிறுகதைத் தொகுப்புகளையும், இருபத்தெட்டு கட்டுரைத்தொகுப்பு களையும், 11 சிறுவர்களுக்கான புத்தகங்களும், மூன்று மொழிபெயர்ப்பு புத்தகங்களும், ஒன்பது நாடகங்களும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இரண்டு நேர்காணல்களின் தொகுப்பும் வெளியாகி உள்ளன.

கொரிய அரசால் வழங்கப்படும் தாகூர் இலக்கிய விருதைப் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர், சிறந்த இளம்நாடக ஆசிரியருக்கான சங்கீதநாடக அகாதமி விருது. சிறந்த நாவலுக்காக கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல் விருது, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது, இலக்கிய சிந்தனை விருது, சிகேகே இலக்கிய விருது, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது, ஞானவாணி விருது,  விஸ்டம் விருது, இளம் சாதனையாளர் விருது, கண்ணதாசன் விருது, சேலம் தமிழ் சங்க விருது, நல்லி திசை எட்டும் இலக்கிய விருது,  என பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரது புத்தகங்களை ஆராய்ந்து இதுவரை இருபத்துநான்கு பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். மூன்று பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இரண்டு பல்கலைகழகங்களிலும் ஒன்பது கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தும்படி ஏழு உலக இலக்கியப் பேருரைகளை நிகழ்த்தியிருக்கிறார், அவை டிவிடி வடிவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. சென்னையில் வாழ்ந்து வருகிறார். மனைவி சந்திரபிரபா.பிள்ளைகள் ஹரிபிரசாத் மற்றும் ஆகாஷ்.

சிவ பாலசுப்ரமணி
சிவ பாலசுப்ரமணி 1963 ஏப்ரல் மாதம் 7ஆம் நாள்  சிவஞானம் ராஜேஸ்வரி அவர்களுக்கு திருச்சி உறையூரில்  மகனாய் பிறந்தார். இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம்  மற்றும் வெளிநாட்டு கருவிகளை பழுது பார்க்கும் தொடர் பான பொறிஇயல்துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து  இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர் .

தமிழர்களின்  தொன்மைத் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவர் ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்து அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர். ஒரிசாவில் அவர் செய்த கலிங்க தமிழ் தொடர்புகள் தொடர்பானதமிழ் ஆய்வுகள் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டியசெயல் ஆகும்.

ஒரிசா என்ற கிளைகளில் தமிழை தேடிய அவர் அவருடைய வெகு நாள் தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த பணிகள்  தொடர்பால் குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு, இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில்  மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று ஆய்வு செய்து  லெமுரியா குமரிகண்டம் போன்ற நிகழ்வுகள் தமிழ் இலக்கியம் சொன்ன செய்திகளின் அடிப்படை உண்மைகள் என்று நிரூபித்து வருகிறார். அதே போல் இனபெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகமாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் நம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள், நம்முடைய கடலோடிகளால் பயன்படுத்தப்பட்டு அவர்கள் உலகம் முழுவதையும்  வலம் வந்தபதிவுகளை ஆமைகள் தொடர்பான இடங்கள் தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்தவர். புவியின் சுழற்சியில் தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்கள் இயற்கையின் பயன்பாட்டை உலகிற்கு முதலில் கடல் மூலமாக சென்று அறிமுகப்படுத்தியவர்கள் என்பதை தமிழர்களின்  கடல்சார் மேலாண்மை, இரும்பு நாகரிகம், நெல், வேளாண்மை நாகரிகம்  போன்ற தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருபவர்.

மீனவர்கள், நீர் மூழ்கிகள் மற்றும் பாய் மரக்கப்பல் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு தொழில் நுட்பங்களை அவர்களிடம் அறிமுகபடுத்தி வருபவர். அதே சமயத்தில் அவர்களின் கடல்சார் மேலாண்மையை உலகிற்கு தொலைக்காட்சிகளின் மூலம் அறிமுகப்படுத்தி வருபவர் தமிழர்கள் கடல்சார்  மரபு மற்றும் சுற்றுச்சூழலை காக்க வேண்டும்  என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர்.

வரலாறு  சங்க கால தமிழ் இலக்கியம் என்பது வருங்கால சமூகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கும் என்பது அவருடைய நம்பிக்கை அதன் மூலம் பல சிக்கல்களை கடற்கரையில் தீர்த்து கொண்டு வருகிறார் நுளையர், முக்குவர், நாவியர்மற்றும் வாதிரியார்களைப்  பற்றிய அவருடைய ஆய்வு முயற்சிகள் தொடருகின்றன. இணைய உலகில் வரலாறு மற்றும் மரபு சுற்றுச்சூழல் தொடர்பான குழுமங்களுடன் நெருங்கி பழகுபவர் பல மாணவர்களின் கடல்சார் ஆய்வுகளுக்கு துணை புரிந்து வருகிறார் கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர்  மீன் வளம், பாய் மர கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் ஆய்வு, இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக  செய்மதி குழுமம், கடல்சார் குழுமம், மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்

ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை தொடங்கி கடல்சார் மேலாண்மை தொடர்பாக இயங்கி வருபவர் அவருக்கு ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் வெங்கடேஷ், வீணா என்ற மகனும் மகளும் இருக்கிறார்கள். அவரின் உலகளாவிய கடற்கரை தொடர்பான சமூகம் பற்றிய ஆய்வுகள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் .
அபிராமி ராமநாதன்
1947 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி பிறந்தவர். மெக்கானிகல் பிரிவில் பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரி. ஹோமி யோபதி மருத்துவமும் படித்து பட்டம் பெற்றவர். அபிராமி, பால அபிராமி, அன்னை அபிராமி, சக்தி அபிராமி ஆகிய நான்கு திரையரங்கங்களை ஒப்பந்தக்காரர் இல்லாமல் அவரே பொறியாளராக இருந்து கட்டியவர். விளையாட்டு : நீச்சல், துப்பாக்கி சுடுதல் முதலியன. இவர் பெற்ற விருதுகள் : தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். 2002ஆம் வருடத்திற்கான டாக்டர், அஷ்ரப் விருது  இந்திய மருத்துவ சங்கத்தினரால் வழங்கப்பட்டது.

2002-03 ஆம் வருடத்திற்கான சேவா ரத்னா விருது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த திரு. வெங்கட்ராமன் அவர்களால் வழங்கப்பட்டது.  2001ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் ராஜா சாண்டோ விருதினையும் பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ராஜீவ் காந்தி விருதினையும் பெற்றார். தன்னிகரற்ற ரொட்டேரியனாக இரண்டு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அபிராமி ராமநாதனின் சேவையைப் பாராட்டி தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

பொது நலத்தொண்டு  ரோட்டரி உதவியுடன் கார்கில் போரில் இறந்தவர்களுக்காக 9000 பேரைக் கொண்டு சென்னை கடற்கரைச் சாலையில் ஊர்வலம் சென்று அப்போது மேயராக இருந்த மாண்புமிகு, திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மெரினாவில் மாபெரும் கூட்டமும் நடத்தி இந்த குடும்பங்களுக்காக பணமுடிப்பு  பெற்று தந்தவர். மேலும் பெரும் உதவிகளைச் செய்தவர். அப்போது மேயராக இருந்த மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் விருப்பத்திற்கிணங்க சென்னை நகரில் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் ரூபாய் 10 லட்சம் வசூல் செய்து மாநகராட்சி பள்ளிக்கு கணிப்பொறிகள் வழங்கியவர். ஒரு வருடத்திற்கான ஆசிரியர்கள் சம்பளமான ரூபாய் 5 லட்சத்தை தன் சொந்த செலவிலேயே கொடுத்தவர்.

ரோட்டரி உதவியுடன் குடிசை வாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு வேண்டுமென்று மேயர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குடிசை வாழ் மக்களிடம் ரோட்டரி உறுப்பினர்களை அனுப்பி அவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர ஏதுவாக இருந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களின் திருமணத்திற் காகவும், படிப்பிற்காகவும் ஏராளமான பேருதவிகளைச் செய்கிறார். இவர் 2003-04ஆம் ஆண்டு ரோட்டரியின் கவர்னராக பதவி வகித்தார்.  அப்பொழுது இவருடைய முயற்சியால் அரசாங்கப்பள்ளிகளில் 200 அறைகள் புதுப் பிக்கப்பட்டன.  150 பொது மருத்துவமனை வார்டுகள் புதுப் பிக்கப்பட்டன.

2003ஆம் ஆண்டு 28 ஆண்களும் 3 பெண்களும் உள்ள ஒரு குழுவுடன் வாகா எல்லை மூலம் பாகிஸ்தானிற்கு சுமூக உறவு ஏற்படுத்துவதற்காக சென்று வந்தார்.  2003இல் நம்முடைய நாட்டின் கலாசாரத்தை வெளிநாட்டில் பரப்பு வதற்காக 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து சைக்கிளில் சிங்கப்பூரிலிருந்து பெனாங் வரை 900 கிலோமீட்டரை 10 நாள்களில் கடந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் தங்கி நட்புறவை ஏற்படுத்தினார்

2000ஆம் வருடத்தில் திருமதி. நல்லம்மை ராமநாதன் உதவியுடன் மிகப்பெரிய ரத்ததான முகாம் ஒன்றை நடத்தி ஒரே நாளில் 3 மணி நேரத்தில் 1600 யூனிட் ரத்தம் சேகரித்து சாதனை படைத்தார்.

இவர் தன்னுடைய பூலாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்து வருடத்திற்கு சுமார் 30 இலட்சம் செலவு செய்து வருகிறார்.

இவர் துணைவியார் திருமதி. நல்லம்மை ராமநாதன் அவர்களும் சொந்த ஊரான பூலாங்குறிச்சியில் பெண்களுக்கான இலவச தையற்பள்ளியும், முதியோர் பள்ளியும் நடத்தி வருகிறார்.

கலைத்தொண்டு:

தன்னுடைய அபிராமி வளாகத்தில் உள்ள திரையரங் குகளை உலகத்தரத்திற்கு உயர்த்தியது. இந்தியாவிலேயே முதன் முறையாக அபிராமி திரையரங்குகளில் டிடிஎஸ் ஒலி அமைப்பினை அறிமுகப்படுத்தப்பட்டது இந்தியாவிலேயே முதன் முறையாக கம்ப்யூட்டர் டிக்கெட்டிங் முறையை ஏற்படுத்தியது.

இந்தியாவிலேயே முதன் முறையாக போன் செய்தால் வீட்டிலேயே டிக்கெட்டுகளை கொண்டுவந்து கொடுப்பது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஈ-டிக்கெட்டிங் முறையை அறிமுகம் செய்தது.  தமிழ்த்திரையரங்கு களிலேயே முதன் முறையாக டால்பி ஸ்டிரியோ ஸிஸ்டத்தை அறிமுகம் செய்தது. பலப்பல புதுமைகளை செய்து கடைநிலை பொது மக்கள் வரை மகிழ்வித்தது இவருடைய சாதனையாகும்.

மழலையர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர்களை மகிழ்விப்பதற்காகவே அபிராமி இளைஞர் உலகம் மற்றும் அபிராமி மழலையர் உலகத்தை அறிமுகம் செய்தது இவருடைய  அபிராமி திரையரங்குகள் மட்டும்தான்.  இவருடைய மற்றுமொரு சாதனை அபிராமியின் கிஸ்ஸிங் கார்கள்.  இந்த கிஸ்ஸிங் கார் வளாகத்திற்குள் நுழைந்தால் அண்டவெளியில் உள்ள வேற்று கிரக மனிதர்களுடன் இருப்பதைப் போன்ற புதுமையான அனுபவத்தையும் பொதுமக்களை மகிழ்விப்பதற்காகவே அபிராமி திரையரங்கத்தில் ஏற்படுத் தியுள்ளார்.

இவர் பொது வாழ்வில் வகித்த பதவிகள் : தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உப தலைவராக மூன்று ஆண்டுகள் இருந்தவர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கவுரவ காரியதரிசியாக அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கமிட்டி மெம்பராக இருபத்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளராக அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூடுதல் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். இந்திய திரைப்பட சம்மேளனத்தின் பொதுக் காரியதரிசியாக இருந்தவர்.

இந்திய திரைப்பட சம்மேளனத் தின் துணைத்தலைவராக இருந்தவர். இந்திய திரைப்பட சம்மேளனத்தின் கமிட்டி மெம்பராக பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர். இந்தியன் ஏர்லைன்ஸின் தென் மண்டலத்துறையின் ஆலோசகராக இருந்தவர். மத்திய திரைப்பட தணிக்கைக் குழு போர்டு மெம்பராக இருந்தவர். ரோட்டரி மாவட்டம் 3230க்கு 2003-04க்கு ஆளுனராக பதவி வகித்தார்.

பயிற்சியாளராக ரோட்டரி மாவட்டம் 3230க்கு இருந்தவர். தமிழ்நாடு சினிமா திரைப்பட முறைப்படுத்தலின் மறுபரிசிலனைக் குழுவின் உறுப்பினர். துணைத்தலைவர் - கோவை தமிழ் செம்மொழி மாநாடு

உறுப்பினர் - சினிமா நல வாரியம் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராக 15 ஆண்டு களாக இருக்கிறார். இவர் பொது வாழ்வில் தற்பொழுது வகிக்கும் பதவிகள்: சென்னை நகர திரைப்பட உரிமையா ளர்கள் சங்கத்தின் தலைவர், மெட்ராஸ் பிலிம் சொஸைட் டியின் தலைவர், நகரத்தார் கல்ச்சுரல் அகாடமியின் சேர்மென், பூலாங்குறிச்சி நகரத்தார் அறக்கட்டளையின் தலைவர், சென்னை வாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் தலைவர், நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மெடிகல் சென்டரின் (மறைமலைநகர்) தலைவர், தென் சென்னை மாவட்ட பாரத சாரணர் குழுவினரின் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர், திரைப்படத்துறை அடிமைச்சங்கிலி என்ற படத்தின் தயாரிப்பில் பங்கேற்றிருந்தார். 

ரஜினி நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஆங்கிலப்படத்தின் தயாரிப்பில் பங்கேற்றிருந்தார்.  சென்னை போலீஸின் 150 ஆவது வருட விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு குறும்படத்தை எடுத்து முதலமைச்சர் மூலமாக வெளியிட்டார். பஞ்சாமிர்தம் என்ற முழுநீள குழந்தைகள் நகைச்சுவைத் திரைப்படத்தை எவ்வித வியாபார நோக்கும் இன்றி 25 வருடங் களுக்குப்பிறகு தயாரித்தவர்.

விநியோகஸ்தராக 40க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்திருக்கிறார்,

பொழுது போக்கு : 

புகைப்படம் பிடித்தல், புத்தகங்கள் படித்தல், கணிணி இயக்குதல், சுற்றுலா செல்லுதல். உலகின் அய்ந்து கண்டங்களிலிருக்கும் பல நாடுகளை பல முறை சுற்றிப்பார்த்துள்ளார்.  எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நகைச்சுவையோடு உடனடியாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பேச வல்லவர்.

குடும்பம் :

திருமதி. நல்லம்மை ராமநாதன் ஒரு  BBA பட்டதாரி.  இன்னர்வீல் மாவட்டம் 323இன் முன்னாள் தலைவர் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர். பொதுத்தொண்டில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர்.  அபிராமி மெகாமாலின் செயல் இயக்குநர்.  மகன் திரு. சிவலிங்கம் சிங்கப்பூரில் படித்து BBAபட்டம் பெற்றவர்.  மகள் திருமதி. மீனாட்சி BA பட்டதாரி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கு கொண்டு பல பதக்கங்களைப் பெற்றவர்.
சி.எஸ்.அமுதன்
பொறியாளர் சி.எஸ்.அமுதன் பி.இ, பிறப்பு : 19.07.1977, தந்தை : பேராசிரியர் எஸ்.எப்ஃ.என் செல்லையா, தாய்: பிளோமினா எம்.ஏ.,எம்.எட்., முதல்வர் (ஓய்வு) லொயோலா மெட் உயர்நிலைப் பள்ளி,கோடம்பாக்கம்,சென்னை-24, மனைவி: அகல்யா வசந்தி எம்.பி.பி.எஸ்., மகள்:அரும்பாவை (ஒன்றரைவயது)அமுதனின் கல்வி: 1.பள்ளி : லொயோலா மெட், உயர்நிலைப்பள்ளி,கோடம் பாக்கம்,சென்னை.

2.ஓராண்டு:பி.எஸ்ஸி (இயற்பியில்) லொயோலா  கல்லூரி, சென்னை 3.பி.இ., எலக்ட்ரானிக் + கம்யூனிகேசன் புனித வள்ளலார் பொறியியல் கல்லூரி, சென்னை.

பணி : 

நிருவாக இயக்குநர், Woc விளம்பர நிறுவனம் சென்னை, (குமுதம், ஆஹா முதலியவற்றின் விளம்பரங்கள்)

2.திரைப்பட இயக்குநர் : 1. தமிழ்ப்படம் 2010இல் தயாரிப்பு, துரை தயாநிதி

2. இரண்டாவது படம் தற்போது தயாரிப்பில்   மே மாதம் இவ்வாண்டு திரைக்கு வரும். திரைப்பாடல்கள் எழுதியவை:

1. Maddy, Maddy (ஆங்கிலத்தில் ) திரைப்படம் மின்னல், 2.ஓ மகஸீயா (தமிழ்ப்படம்).
அஜயன் பாலா
அஜயன் பாலா (பாலாஜி) பிறந்த இடம் : காஞ்சிபுரம், அஜயன் பாலா சித்தார்த்  முதல் தொகுப்பு  வெளிவரு வதற்குள்ளாக ஆங்கில வார ஏடான் வீக் (2002) வார ஏட்டின் மூலம் சிறந்த வளரும் எழுத்தாளராக அறியப்பட்ட அஜயன்பாலா இலக்கிய சிந்தனை (1999)மற்றும் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு (2009) ஆகியவற்றைப் பெற்றவர்.

ஆனந்த விகடனில் இவர் எழுதிய நாயகன் தொடரில் பத்துக்கும் மேற்பட்ட தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று தொடர் கட்டுரைகள் இவரை வெகுஜன மக்களிடம் அழுத்தமான அடை யாளத்தை உருவாக்கின. இத் தொடரின் மூலம் சுருக்கமாகவும் ஆழமாகவும் இன்றைய நவீன உலகுக்கு ஏற்ற வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கரை  அறிமுகப் படுத்தியது இத்தொடரின் சாதனை 100க்கு மேற்பட்ட  தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை  தொகுத்து எழுதிய செம்மொழி சிற்பிகள் நூல் தமிழ் மொழிக்கு  காலத்தின் ஒரு நனி சிறந்த பங்களிப்பு இவர் எழுதிய பைசைக்கிள்தீவ்ஸ் திரைக்கதை மற்றும் உலகபுகழ் நடிகர் மார்லன்பிராண்டோவின் சுயசரிதம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. உலக சினிமாவின் வரலாறு மவுன யுகம் என்ற ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.

சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவர் மயில்வாகனன் மற்றும் கதைகள் மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை என்ற சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக அரசின் சின்னத்திரை விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் இரண்டு முறை இடம்பெற்று தமிழக அரசின் கவுரவத்தை பெற்றவர் இதுமட்டுமல்லாமல் நாதன் பதிப்பகம் எனும் புதியபதிப்பு நிறுவனத்தையும் துவக்கி நூல்கள் பதிப்பிக்கவும் இந்த ஆண்டிலிருந்து துவங்கியுள்ளார்.

திரைப்படத்துறையில் மதராசபட்டினம் , தெய்வ திருமகள் வேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் திரைக்கதை ஒழுங்கமைப்பாளராக பணி புரிந்தவரான இவர் தற்போது  வனயுத்தம் எனும் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புதிய பணி மேற்கொண்டுள்ளார் தொடர்ந்து இனைய தளங்களிலும் எழுதிவரும் இவரது வலைத்தளம்: ajayanbala.blogspot.com
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் வளர்ந்ததும் படித்ததும் திருக்கழுக்குன்றம். தற்போது சென்னையில் வசிக்கிறார். விருதுகள் இலக்கிய சிந்தனை தமிழ் நாடு அரசின் சிறந்த நூலுக்கான் விருது பெற்றது.

எஸ்.சுந்தரேசன்
தந்தை பெயர்: சகாதேவன், பிறந்த ஆண்டு: 1944, ஊர்: செவலபுரம் கிராமம், செஞ்சி, பிள்ளைகள்: 3 ஆண்கள், 2 பெண்கள், தொழில் பயின்ற இடம்: பாலு பிரதர்ஸ், ஓவியக் கலைக்கூடம், சென்னை, அரசு ஆர்ட்ஸ் துவக்கம் டிசம்பர் 1959.

ஓவியபணி:ஆரம்பத்தில் சினிமா, அரசியல், விளம்பரம் ஓவிய பணிகளை செய்வதுடன் திராவிட நாடு, விடுதலை, என்முழக்கம், முரசொலி, தனியரசு, மாலை மணி, தென்னகம், தென்றல் ஆகிய திராவிட ஏடுகளில் இன்று வரை ஓவியக் கலையை வெளிப்படுத்தி வருகிறார்.

நினைவில் நிறைந்தவையாக குறிப்பிடுபவை: தந்தை பெரியார் அவர்கள் எண்.1, மீரான் சாகீப் தெருவில் வாழ்ந்த போது தளபதி வீரமணி அவர்கள் எங்களை அழைத்து சென்று விடுதலைக்கான சில வேலைகளை தருவார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து திரும்பி வரும் பொழுதெல்லாம் எங்களிடம் கொடுத்த வேலையை தந்தை பெரியாரிடம் ஒப்படைக்கும் போது அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லை.

மட்டற்ற மகிழ்ச்சி: அதற்கான ஊதிய தொகை சிறியதாக இருந்தாலும் அவரது இடுப்பில் இருந்து எடுத்து தரும்போது அதற்கு மதிப்பே கிடையாது.



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...