Friday, January 13, 2012

அய்யப்பன் சங்கதி


மதத்தின் ஒழுக்கமும், கோவிலின் ஒழுக்கமும், பக்தியின் ஒழுக்கமும் எவ்வளவு கேவலத்தில் உழலுகின்றன என்பதற்குச் சபரிமலை அய்யப்பன் விவகாரம் ஒன்றே ஒன்று போதுமானது.

அய்யப்பன் பிறப்பில் தொடங்கி, மகரஜோதிவரை எல்லாமே ஒழுக்கக் கேடானதும் அறிவு நாணயமற்ற தன்மையுடையதுமாகும்.
சிவன் என்ற ஆணும், விஷ்ணு என்ற ஆணும் புணர்ந்து பெற்ற பிள்ளை ஹரிகரப் புத்திரனான அய்யப்பன் என்பது இந்துக் கடவுள்களின் ஆபாசத்துக்கும், காட்டு விலங்காண்டித்தனத்துக் கும் ஈடு இணையற்ற எடுத்துக்காட்டாகும்.

இந்தக் கோவில் 1949இல் தீப்பிடித்து சாம்பலாகி விட்டது. அய்யப்பன் சாமி விக்கிரகமும் தீ விபத்தால் உருக்குலைந்தும் சிதைந்தும் போயிற்று.

அப்பொழுதாவது அய்யப்பக் கடவுளின் சக்தி என்பது சுத்த வெத்து வேட்டு என்பதைப் பக்தர்கள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். பக்தி வந்தால் புத்தி மேயப் போய் விடுகிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டே!

புதிய அய்யப்பன் சிலை கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தான் உருவாக்கப்பட்டது.

கடவுளை உருவாக்குபவன் மனிதன் தானே! இதுபற்றி மறைந்த பிரபல சிற்பி கணபதியார் அவர்கள் கல்கி இதழுக்கு (11.6.2006) அளித்த பேட்டி ஒன்றில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்:

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்கிறார்கள் கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும்? அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்க தானே? என்று கூறினாரே!

சுற்றி வளைக்காமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கல்லைக் கடவுளாக்கிக் காட்டுவது ஒரு சிற்பியின் கையில் இருக்கிறது.

ஒரு நகைத் தொழிலாளி ஒரு தொங்கட்டானைச் செய்வதில்லையா? அந்தத் தொங்கட்டானை யார் தொழுகிறார்கள்?

ஆனால் கல்லை மட்டும் மனிதன் தொழுகிறான் என்றால் என்ன காரணம்? பிரச்சார யுக்திதான்.

அப்படித்தான் சபரிமலையில் தீயினால் உருக்குலைந்த அய்யப்பக் கடவுளின் உருவமும் ஒரு சிற்பியால் வடிக்கப்பட்டது.

நவாப் ராசமாணிக்கமும், மதுரை பி.டி. ராஜன் அவர்களும் அப்படி புதிதாக உருவாக்கப்பட்ட அய்யப்பன் சிலையை ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு, மக்கள் மத்தியில்  அய்யப்பன்மீது இழந்த நம்பிக்கையைப் புதுப்பித்தார்கள்.

ரவு நேரங்களில் அந்தச் சிலை கோவிலுக்குக் கொண்டு போய் வைக்கப்படும். பல கோவில்களில் அவ்வாறு அனுமதிக்கவில்லை. இது ஊருக்கு வெளியில் காவல் காக்கும் வெறும் அய்யனாரப்பன் தானே என்று உதட்டைப் பிதுக்கினார்கள்.

எப்படியோ பிரச்சார யுக்தியால் புது மவுசை உண்டாக்கி விட்டனர். இப்பொழுது அடுத்த கட்டமாக இந்தக் கோவிலில் முக்கியமாகச் சொல்லப்படும் மகர ஜோதி என்பதும் கடவுள் சக்தியால் அல்ல - மனித சக்தியால் செயற்கை யாகக் காட்டப்படுவது என்பதும் அம்பலமாகி விட்டது.

சம்பந்தப்பட்ட அமைச்சரும் சரி, சபரிமலை தேவஸ்தானமும் சரி, ஆமாம் அய்யப்பன் சக்தியல்ல - ஆசாமிகளின் சக்தி என்று ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்துவிட்டனர். அதோடு நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் அல்லவா!

பக்தி வியாபாரத்தில் ஒழுக்கத்துக்கு இடம் ஏது? இப்பொழுது யார் அந்த ஏமற்றுத் தீபத்தைக் காட்டுவது என்பதில் கோஷ்டி மோதல்! தேவஸ்வம் போர்டே தீபம் காட்ட மலை ஜாதியினர் எதிர்ப்பு என்று தினமலரே (7.1.2012) செய்தி போடுகிறது.

இப்படி ஒரு பக்தியும், விரதமும், மதமும், கடவுளும் தேவையா? அனுமதிக்கத் தக்கது தானா?

வெட்கம்! மகா வெட்கம்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...