Thursday, January 19, 2012

சாதாரண நிகழ்வா?


பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளன்று இந்துத்துவா கும்பலால் திட்டமிட்டு இடிக்கப்பட்டது.
19 ஆண்டுகள் முடிந்து 20ஆம் ஆண்டில் வழக்கு வெற்றி நடை போடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அதற்குப் பின் பதிவான வழக்குகள் எல்லாம் நடத்தப்பட்டுத் தண்டனைகளும் வழங்கப்பட்டு விட்டன. தண்டனை முடிந்து குற்றவாளி கள் விடுதலை பெற்றும் வெளியில் வந்துவிட்டனர்.
பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக மும்பையில் வெடித்த மதக் கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவுற்றுத் தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் மும்பைக் கலவரத்துக்கு மூல காரணமான பாபர் மசூதி இடிப்பு வழக்கோ எறும்புபோல் ஊர்ந்து கொண்டே இருக்கிறது.
காரணம்  - வழக்கில் சம்பந்தப்பட்டவர்களோ இந்த நாட்டில் பிரதமர் பதவியிலும், துணைப் பிரதமர் பதவியிலும், மத்திய அமைச்சர்கள் பதவிகளிலும் அலங்கரித்த அதிகாரம் கொண்ட ஆசாமிகள்.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான் என்பதற்கு இந்த வழக்கு ஒன்றே ஒன்றுபோதும்.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் குழுவும் தன் அறிக்கையை வெளியிட்டு விட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி உட்பட 69 பேர்கள் குற்றவாளிகள் என்று நீதிபதி லிபரான் அறிக்கை பகிரங்கப்படுத்தி விட்டது.
சாதாரண குற்றப் பிரிவுகளின்கீழ் அல்ல! இந்தியன் குற்றவியல் சட்டம்  147,153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குகள்!
கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றஞ் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற பிரிவுகளின்கீழ் வழக்குகள்.
முதல் குற்றவாளியான எல்.கே. அத்வானிதான் பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டார், வழிகாட்டினார் என்று அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல்துறை அதிகாரி அஞ்சு குப்தா என்பவரே சாட்சியம் கொடுத்துவிட்டார்.
என்றாலும் இந்தக் குற்றவாளிகள் கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமின்றி ராஜநடை போட்டுத் திரிந்து கொண்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு என்பது சாதாரணமானதா? உலகில் முஸ்லிம் மக்கள் தொகுதிகளில்  இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில், அம்மக்களின் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேவலமான செயல் காரணமாக உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைகுனிந்து நிற்க வேண்டிய அவலம். இந்த இடிப்புக் காரணமாக நாடெங்கும் பல இடங்களில் கலவரம், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை - ரத்த ஆறு வெள்ளம் பெருக்கெடுத்தோடிய கொடுமை!
இந்த வழக்குக் குறித்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சி.பி.அய். தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் புகழ் பெற்ற வழக்கு - பாபர் மசூதி இடிப்பு என்று சொன்னபோது உச்சநீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு, அப்படி சொல்லக் கூடாது, ஒரு சாதாரண நிகழ்வுதான் அது என்று கூறியுள்ளார்.
பல்வேறு இனங்கள், மதங்கள், பண்பாடுகள் வாழும் ஒரு கலவைச் சமுதாய அமைப்புக் கொண்ட இந்தியாவில், உலகில் அதிக முஸ்லிம் மக்கள் வாழும் இரண்டாவது நாடான இந்தியாவில் அவர்களின் வழிபாட்டுத்தலத்தை திட்டமிட்டு இடித்தது சாதாரண ஒரு நிகழ்வுதானா? அந்த இடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த கலவரங்களும், உயிரிழப்புகளும் கூட சாதாரண நிகழ்வுதானா? பாபர் மசூதி இடிப்பே சாதாரண நிகழ்வு என்றால், அசாதாரண நிகழ்வு என்று எதைச் சொல்லுவதோ தெரியவில்லை.
இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக அமைக்கப் போவதாக வெறி பிடித்துத் திரியும் கூட்டத்தின் தீவட்டிக்கு நெய்யூற்றுவதாக இது அமைந்துவிடாதா?
உச்சநீதிமன்றமே இப்படியென்றால், நல்லிணக்கத் துக்கு உத்தரவாதத்தை எங்குப் போய்த் தேடுவதோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...