Friday, January 27, 2012

வன்கொடுமைக் கொடுவாள்


- க.அருள்மொழி
குழந்தைகளின் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை மற்ற எல்லா குற்றங்களைப் போலவே உலகமயமானதுதான். ஆனால் எல்லா இடத்திற்கும் பொதுவான விளக்கம் என்று எதுவும் இல்லை. ஆனால் பெரியவர்களின்   ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்து குழந்தைகளிடம் பாலியல் கொடுவா ளுமை  தூண்டுகிறது. குழந்தை பாலியல்  கொடுவா ளுமை என்பது குழந்தைகளின் பாலுறுப்புகளைத் தடவுதல், அசைத்தல் ,வாயில் வைத்தல், விரல்களை நுழைத்தல், மற்றும் உடலுறவு கொள்ளுதல். உடல்ரீதியான தொடர்பு மட்டுமல்லாமல் உடல் தொடர்பு இல்லாமல் பாலுறுப்புகளைப் பார்த்தல், பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கச் செய்தல், பாலுறவு பற்றிப் பேசுதல் ஆகியவையும் அடங்கும். குழந்தைகளிடம் கொடுவாளுமை கொள்கிறவர்களி டையே அந்தஸ்து வேறுபாடு ஏதுமில்லை. மிக மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மீதும் நடத்தப்படுகின்ற கொடுவாளுமைக் குற்றங்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.  ஏனென்றால் அதைப்பற்றிப் பதிவு செய்வது குறைவாக உள்ளதும், கொடுவாளுமை என்றால் என்ன என்பதற்கான விளக்கம் தெரியாததும் காரணமாகும். கொடுவாளுமையால் ஏற்படும் தாக்கம் ஓரிடத்தில் ஏதுமில்லாமலும் மற்றோர் இடத்தில் மிக கடுமையாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வன்செயலால் பாதிக்கப்படும் குழந்தைகள் -குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வர்களும் உடல்ரீதியான தாக்குதல் அதிகம் ஏற்பட்டவர்களும் 'பயம் பதட்டம்' மோசமான மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு சமயங்களில் வெளிப்பட்டு துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது அவசியம்.

கொடுவாளுமையால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
குழந்தைகளோ,வயது வந்தோரோ இனம், கலாச்சாரம், பொருளாதார நிலைமை, தோற்றம் என எந்த வேறுபாடும் இல்லாமல் பாலியல் கொடுவாளுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிறுவர்களைவிட சிறுமிகள் அதிக அளவில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் கொடுவாளுமைக்குள்ளானோர் விவரம்: இந்தியாவில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 மாநிலங்களை உள்ளடக்கி 12,446 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு  அமைச் சகம் வெளியிட்டுள்ளது. அதன் அதிர்ச்சிகரமான விவரம்.
53 % க்கும் அதிகமான குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு அதிக மான வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
22% குழந்தைகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 6 % பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
50% குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாகஅல்லது நம்பிக்கைக்குரியவர் களாக இருக்கிறார்கள்.(குடும்ப உறுப்பினர், நெருங்கிய உறவினர்,நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள்.)
5-12  வயதுள்ளவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்காளானாலும் பெரும்பாலும் பதிவு செய்யப்படவில்லை.
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளைப் போலவே சம அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
11-16 வயதுடையோர் மோசமாக கெடுவாளுமைக் காளாகிறார்கள்.
73% பாதிக்கப்பட்டவர்கள் 11-18 வயதுடையவர்கள்.
2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட - வின் ஆய்வில் சென்னையில் உள்ள 2,211 பள்ளி செல்லும் குழந்தைகள் பங்கு பெற்றனர். அதில் குழந்தை பாலியல் கொடுவாளுமைக்குள்ளானோர் 42% என்று தெரிகிறது. இங்கும் பொருளாதாரப் பாகுபாடு இல்லாமல் கொடுமை நடந்திருப்பது தெரிகிறது. இந்த ஆய்வில் 48 % சிறுவர்களும்- 39 % சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் 15 % இருபால் சிறார்கள் மோசமாக கொடுவாளுமை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சர்வதேச அளவிலும் ஏறக்குறைய இதே அளவில் இந்தக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் குற்றவாளிகள் யார்?
இதைப்பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு தகவல்களைத் தருகின்றன. ஆனால், அதிர்ச்சிகரமான செய்தியாக இக்குற்றத்தைச் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழகும் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பழக்கமில்லாத புதியவர்களின் பங்கு இதில் குறைவாகவே இருக்கிறது. மேலும் ஆண்களே இக்குற்றத்தை அதிகம் செய்கிறார்கள். பெண்களும் இக்குற்றத்தில் ஈடுபடுவதாகப் பதிவுகள் இருக்கின்றன. பொதுவாக நினைப்பதுபோல் அல்லாமல்  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இக்குற்றத்தில் அதிகமாக ஈடுபடுவதில்லை.
பாலியல் கொடுமையால் ஏற்படும் விளைவுகள் என்ன?
இக்கொடுமைக்கு ஆளானோர் உளவியல் மற்றும் நடத்தைக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இப்பாதிப்பு சாதாரண முதல் கடுமையானது வரை குறுகிய காலத்திற்கும் நீண்ட காலத்திற்கும் மாறுபட்டு உள்ளது. மன அழுத்தம், பயம்_பதட்டம், குற்ற உணர்வு, அச்சம், பாலியல் செயல்பாடின்மை, விலகி இருத்தல், காணாமல் போதல் என   விளைவுகள் பலவகையில் இருக்கிறது.
நிகழ்வின் தன்மையைப் பொறுத்து எதிர் பாலின வெறுப்பு ,பாலுறவு விருப்பமின்மை போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல்,
1.   உண்பதில் ஒழுங்கின்மை
2.  தன்னம்பிக்கைக் குறைவு.
3.  உடல் இயக்கக் குறைபாடுகள்.
4.  நாட்பட்ட உடல் வலி.
5.  கருவுறும் மற்றும் தொற்று நோய்கள் பீடிக்கும் அபாயம். 6.  கற்றல் குறைபாடுகள்.
7.  பொருட்களை உடைத்தல், தவறாகப் பயன்படுத்தல்.
8. பருவமடைந்தபின் பாலுறவு விருப்பமின்மை.
9 குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
10 சிறு குழந்தைகள் போல் விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
11 குறிப்பிட்ட சிலருடன் இருந்து விலகி இருத்தல்.
12  தற்கொலை செய்துகொள்ளுதல்.
கொடுவாளுமையைத் தடுப்பது எப்படி?
பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் :
அடிப்படையான பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர்கள் மூலமாக...
பெரியவர்களின்  பாலியல் அணுகுமுறை தவறு என்பதை...
அவர்களுக்கு நேர்ந்ததை உங்களிடமோ நம்பிக்கைக்குரிய மற்றவர்களிடமோ வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதை, ஒருவேளை அப்படி ஒரு கொடுமை நேர்ந்திருக்கலாம் என்பது தெரிந்தால் நேரடியாகக் கேட்கலாம்.
எதை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், எதைத் தெரிவித்துவிட வேண்டும் என்பதை...
தொடுதலில் உள்ள 'தவறு' மற்றும் 'சரி' என்பதைப் பற்றி...
அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளின் பெயர்கள் அதைப் பராமரிக்கவேண்டிய முறை; அவசியம் பற்றி...
அதனால் அவர்கள் மூத்தவர்கள் பார்க்க அல்லது தொட  அனுமதிக்கமாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தெரிந்தவர்களின் மூலமாகவே அதிகமாக இக்கொடுமை நடக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உறவினர்களைக் கட்டிப் பிடிப்பது முத்தமிடுவது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து விடுங்கள்.
கார் போன்ற வாகனங்களில் உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாருடனும் பயணம் செய்ய அனுமதிக்காதீர்கள்.
உங்கள் குழந்தையை யாரிடமாவது விட்டுச் செல்வதில் தயக்கமோ சந்தேகமோ இருந்தால்... வேண்டாம் என்று முடிவெடுங்கள்.
கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால் என்ன செய்வது?
குழந்தையைப்  பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்து உங்களிடமோ வேறு நம்பிக்கைக்குரியவர் களிடமோ பேச வையுங்கள். அதைப் பற்றிப் பேச தைரியம் கொடுங்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருங்கள். அமைதியாகக் கேளுங்கள். குழந்தையின் வார்த்தைகளுக்கும் குறிப்புகளுக்கும் ஆதரவாக இருங்கள்.
அந்தக் குழந்தையின் மீது தவறு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள்.
ஒரு உளவியல் நிபுணர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள்.
இதைப் பற்றிய அனுபவமுள்ள மருத்துவரின் மூலம் பரிசோதனை செய்து முடிவு எடுக்கலாம்.
சட்ட உதவியை நாட வேண்டும்.
சிகிச்சைகள்:
கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
சம்பந்தப்பட்டவருக்கான சிகிச்சை.
குடும்ப சிகிச்சை.
குழு மருத்துவம்.
அறிவு சார் நடத்தை மாற்று சிகிச்சை.
குழந்தையை மய்யப்படுத்திய சிகிச்சை.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை பயன் தராது. ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப பல்வேறு அணுகுமுறை, மற்றும் கால அளவில் சிகிச்சை தேவை.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பொறுத்து குணமாகும் கால அளவு மாறுபடும். ஆனால், நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.
'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்பார்கள். மொட்டுகளைச் சுட்டு விடாதீர்கள் என்று கற்பிக்க வேண்டும். மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வான் என்று கவலையோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...