Tuesday, January 17, 2012

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள்


சென்னை, ஜன.17- தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற் கான காரணங்களை விவரிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்  தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி இப்பொழுது தை பிறந்தால் தமிழ் புது வருடம் பிறக்கும் என்னும் புதுமொழியாகியிருக்கிறது.
தமிழகத்தில் பலகாலமாக பிரபவ முதல் அட்சய வரையிலான சமஸ்கிருதப் பெயர்கள் தாங்கிய வருடங்கள் தாம் பழக்கத்தில் இருந்துள்ளன.
இந்த அறுபது சமஸ்கிருத பெயர் களுக்குரிய காரணங்கள் தமிழுக்கும், தமிழ் நெறிக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் பொருந்தாதவையாகும்.
கண்ணன் என்னும் தெய்வத்துடன் நாரதன் என்னும் ஆண் மகன் தன்னைப் பெண்ணுருவாக்கிக் கொண்டு இருவரும் பாலியலில் ஈடுபட்டு அறுபது மக்களைப் பெற்றனர். அக்குழந்தைகளின் பெயர் களே இந்த அறுபது வருடங்களின் பெயர் கள் என்று கூறும் புராண காரணங்கள் சிரிப்புக்குரியவையாகும்.
இந்த அறுபது ஆண்டு கணக்கின் அடிப்படையில் எந்தவொரு வரலாற்று நிகழ்ச்சியின் காலத்தையும் நிர்ணயிக்க முடிவதில்லை.
சங்கத் தமிழ் வளர்ந்த காலம் எது? தெரியாது. வள்ளுவர் காலம் எது? தெரியாது. தொல்காப்பியர் காலம் எது தெரியாது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பல்லாயிரக் கணக்கான சான்றோர்களின் வரலாற் றுக் காலம் எது? தெரியாது.
ஏனெனில், தமிழகத்தில் காலங் காட்டி (காலண்டர்) என்ற ஒன்று இப் பொழுது இல்லை! முன்னெப் பொழுதும் இல்லாமல் இருந்ததா எனில் அது ஆய்வுக்குரியது.
எண் கணிதம் பல்லாயிரமாண்டாகத் தமிழகத்தில் இருக்கிறது. நாட்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் மாதங்களுக் குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நாளை யும் மாதத்தையும் 1,10,100, 1000, கோடி என்று எண்ணுகிற முறையை அறிந்திருக் கிறார்கள். ஆனால் ஆண்டுகளை மட்டும் ஒன்று, பத்து, அறுபதுடன் நிறுத்திக் கொண்டு, நூறு, ஆயிரம் கோடி என்று எண்ணுவதற்கு இல்லாமல் இருந்தார்கள் என்றால் அது ஏற்கக் கூடியதாக இருக்கிறதா?
கனலுக்கும் புனலுக்கும் கரையானுக் கும் அழிந்து போன எண்ணிறந்த பழம் சுவடிகளில் காலங்காட்டியும் இருந்து மறைந்து போயிற்றா? ஆகவேதான், இது ஆய்வுக்குரியது என்கிறோம். வருடங் களைத் தொடர்ந்து கணக்கிடும் காலங் காட்டி ஒன்று தமிழருக்கு வேண்டும் என்னும் வேணவா தமிழ்ச் சான்றோருக் குத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள், திருவள்ளுவர் காலம், கி.மு. 31 என்றும், அதுமுதல் தமிழுக்குரிய காலங்காட் டியைத் தொடருவது என்றும், அதற்கு திருவள்ளுவர் ஆண்டு எனப் பெயர் சூட்டுவது எனவும் தீர்மானித்துள்ளனர். அதன்பின்னர் 1939இல் திருச்சியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடந்த இந்திய தமிழர் மாநாடு தை மாதம் தமிழ் ஆண்டின் முதல் திங்கள் எனவும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் எனவும் வரையறை செய் துள்ளனர். அண்மைக் காலத்துத் தமிழறி ஞர்களில் முதன்மையான டாக்டர் மு. வரதராசனார் கூறினார். முன் காலத் தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாக பெரி யோர்கள் கொண்டாடினார்கள்
இதனையே மறைந்த குன்றக்குடி அடிகளார் அறிவியல் அறிஞர் அய்ரா வதம் மகாதேவன் போன்றவர்கள் தை திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினம் என்றே - உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.
தமிழகக் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று பாடிச் சென்றுள்ளார்.
இந்த வரலாற்றின் அடிப்படையிலும், தமிழரின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்காட்டும் வகையிலும் டாக்டர் கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் 1.2.2008இல் தமிழக சட்டப் பேரவையில் சட்டமியற்றி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் தைத் திங்களின் முதல் நாள் என்று அறிவித்தார்.
ஆனால் இன்றைக்குள்ள செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, கலைஞர் அரசின் சட்டத்தை நிராகரித்து சித்திரைதான் தமிழாண்டின் முதல் மாதம் என்று அறிவித்து, தமிழக வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஒரு பெரிய பாதகத்தை செய்திருக்கிறது.
இது கலைஞருக்கு எதிரான சட்டமல்ல; தமிழுக்கும் தமிழ் நெறிக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் எதிரான முடிவு. தமிழகத்தை ஆளுவோர் தமிழுக்கும் தமிழ் பண்புக்கும், தமிழ் தொன்மைக்கும் உரிய மதிப்பைத் தருதல் அவசியமல்லவா?
தமிழுக்கு மதிப்பளிக்கும் தகைமையில் செல்வி ஜெயலலிதா மீண்டும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண் டின் முதல் நாள் என்று அறிவிக்க வேண் டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...