Friday, January 20, 2012

முக்கடல் சங்கமம் போல மூன்று நாள்



கலை, இலக்கியப் பண்பாட்டு விழா
புதுப் பொற்காலம் படைப்போம்!

தமிழர் தலைவரின் அறிக்கை

சென்னையில் மூன்று நாள்கள் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழாவின் மாட்சிபற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 15,16,17 ஆகிய மூன்று நாள்களும் பெரியார் திடல் மிகப் பெரிய விழாக் கோலத்தோடு, களைகட்டி பல் வகையான தமிழர் கலைகள், உணவு வகைகள், பாராட்டு நிகழ்வுகள் என்ற பல்சுவை அரங்கமாக திகழ்ந்தது! என்னே விழாக்கோலம்!

எத்தகைய மாட்சி! தமிழர் - தம் புத்தாண்டு தை முதல் நாளே என்ற தமிழ்ச் சான்றோர் அறிவுரையை ஏற்ற பல்துறை மக்கள் கூடி கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்!

மூன்று நாள் திருவிழாக்கள்

நாட்டுப்புறக் கலைகள் என்ற ஒதுக்கப்பட்ட தமிழர் திராவிடர் தம் பண்டைய கலைகளை நினைவூட்டி, புத்து ருக்கு நெய்யுடன் கூடிய புதுப் பொங்கல் இட்டு மகிழ்ந்து, ஒருவரோடொருவர் உள பூரிப்புடன், உவகையின் உச்சத்திற்குச் சென்ற விழாக்களாக மூன்று நாள் திருவிழாக்கள் - பெரு விழாக்களாக நடந்தேறின!

விசை ஒடிந்த தேகத்தில் வன்மை!
வீழ்ச்சியுற்ற மக்களிடையே எழுச்சி!

இப்படி ஒரு புத்துணர்ச்சியின் மலர்ச்சியாம் அண்மை யில் கண்டதே இல்லை என்று கழகக் குடும்பங்கள் மட்டு மல்ல; பொதுவான - (நம் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட) வர்களும்கூட கண்டு, உண்டு, மகிழ்ந்தனர்; உளம் நெகிழ்ந்தனர்!

பண்டு அறியாத பல்வேறு செய்திகளைக் கண்டு கேட்டு அறிந்து, கழிபேருவகை கொண்டு மகிழ்ந்ததை அசை போட்டு, தொலைப்பேசி மூலமும், நேரிலும் பகிர்ந்து கொண்ட பான்மை எளிதில் எம்மால் என்றும் மறக்க முடியாது!

கவிதைத் தூரிகை!

கவிஞர் கலி. பூங்குன்றனே திடலே திடலே வெறிச்சோடி விட்டாயே! என்று கவித்துவத்துடன் கவிதை வரிகளால் ஓங்கிப் புகழ்ந்துள்ளார். பொற்காலம் உருவாக அச்சாரமோ இது என்ற கருத்தை கவிதையால் தூவினார்! பேசிய பிஞ்சுகள்கூட பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்று வரலாற்று ஆசிரியர்களுக்கே வைர வரிகளைத் துவக்கிக் கொடுத்தனவே!

விழாக்கள் தேவை!
வீழ்ந்தவர் எழுவதற்கு இத்தகைய விழாக்கள் தேவை! இனி வீழாமல் தடுப்பதற்கும் இவை தேவை! தேவை!!

பண்பாட்டுப் படையெடுப்பால்  ஏற்பட்ட ஆபத்து கொஞ்சமா? நஞ்சமா?

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்,
வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்!
நம் செயல் ஒழுக்கங்கள், பற்பல அழித்தார்
நாம் உணர்ந்தோம் இன்று; அவர் அஞ்சி விழித்தார்!

தமிழனே இது கேளாய் என்று புரட்சிக் கவிஞர் பூபாளம் பாடி எழுப்பினாரே!

அதன் ஒரு சிறு தாக்கமே நாம் சென்னை - பெரியார் திடலில் மூன்று நாள்களில், பெரியார் முத்தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழா, முக்கடல் சங்கமம் போல கலை, இலக்கியம், பண்பாடு எல்லாம் கலந்த இனிப்புப் பொங்கலாகி இன்சுவை அளித்தன! 

வேர்களை இழந்தவர்களுக்கு...

பொதுவான நண்பர்கள், விடுதலை மூலம் செய்தி படித்த சான்றோர் உட்பட பலரும் தொலைப்பேசியில் அழைத்து, இதை விரிவாக்கி ஆண்டுதோறும் நடத்துங்கள்.

வேர்களை மறந்தவர்களுக்கு விழி திறக்க உதவுங்கள் என்று கூறி உணர்ச்சிப் பிழம்பாக்கினர் நம்மை!

உழைத்த நம் தோழர்கள், பாடுபட்ட பல்துறை தோழர் - தோழியர்கள் பாராட்டுக்குரியவர்கள் அனைவரும் ஈரோட்டுக்கே வந்தவர்களாகிவிட்ட காட்சி ஏற்படுத்திய பரவசம்தான் என்னே! என்னே!!

பெரியார் என்ற வற்றாத ஜீவநதி எத்தனையோ மலைகளையும், கற்களையும், பாறைகளையும் தாண்டி, காலத்தினாலும்கூட உறையாது ஓடிக் கொண்டே இருக்கிறது!
எதிரிகள் அறிவர்!
சில நேரங்களில் அது குறுகிய வாய்க்கால் போன்று சிலருக்குத் தோன்றக் கூடும்; புது வெள்ளம் பாய்ந்தால் அதற்கு ஈடு கொடுக்க எதுவுமே இல்லை - என்பது நம்மைவிட நம் இன எதிரிகளுக்கே தெரியும்!

எனவேதான் எதிர்த்து அழிக்க முடியாததால், ஊடுருவி, அணைத்து அழிக்கும் தொழில் நுட்பத்தை - புத்தத்தைப்போல விரட்டிட நினைக்கின்றனர்! ஆனால் இது இந்த 21ஆம் நூற்றாண்டின் விழிப்புற்ற சகாப்தத்தில் அது நடக்காது; இதை உணர்த்தியது மூன்று நாள் விழாக் கால பெரியார் திடலில்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...